
சியா விதைகள் ஆரோக்கிய உணவுப் பட்டியலில் ஒரு சூப்பர்ஃபுட்டாகப் மக்கள் மத்தியில் பிரபலமாகிவிட்டன. உடல் எடை குறைப்பு முதல் செரிமான ஆரோக்கியம் வரை பல நன்மைகளை இவை அளிப்பதால், பலரும் இவற்றைப் பயன்படுத்த ஆர்வம் காட்டுகிறார்கள்.
ஆனால், சியா விதைகளில் கருப்பு மற்றும் வெள்ளை என இரண்டு வகைகள் இருக்கின்றன. இதனால் எதில் சத்துக்கள், ஆரோக்கிய நன்மைகள் அதிகம் என மக்கள் குழப்பம் அடைகின்றனர். இந்த இரண்டு சியா விதைகளுக்கும் உள்ள வேறுபாடுகளையும், அவற்றின் ஆரோக்கிய நன்மைகளையும் இந்த பதிவில் பார்க்கலாம்.
கருப்பு சியா Vs வெள்ளை சியா:
உண்மையைச் சொல்லப்போனால், கருப்பு மற்றும் வெள்ளை சியா விதைகள் இரண்டும் ஊட்டச்சத்து அடிப்படையில் ஒன்றுதான். இவற்றில் நார்ச்சத்து, ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் புரதங்கள், கால்சியம், மெக்னீசியம், பாஸ்பரஸ், ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளன. ஆனால் இவற்றில் சிறு வேறுபாடுகள் உள்ளன.
வெள்ளை சியா விதைகளில் ஆல்பா-லினோலெனிக் அமிலம் (ALA) எனப்படும் ஒமேகா-3 கொழுப்பு அமிலம் சற்று அதிகமாக இருப்பதாகக் கூறப்படுகிறது. இதய ஆரோக்கியத்திற்கு இந்த ALA மிகவும் முக்கியம்.
கருப்பு சியா விதைகளில் புரதத்தின் அளவு வெள்ளை சியாவை விட சற்று அதிகமாக இருக்கலாம். ஆனால் இந்த வித்தியாசம் மிகக் குறைவு, குறிப்பிடத்தக்க அளவில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தாது.
நார்ச்சத்து இரண்டு வகைகளிலும் அதிகம் உள்ளது. சில ஆய்வுகள் கருப்பு சியாவில் நார்ச்சத்து கொஞ்சம் கூடுதலாக இருக்கலாம் என்கின்றன, ஆனால் இதுவும் பெரிய வேறுபாடு அல்ல.
கால்சியத்தைப் பொருத்தவரை, வெள்ளை சியா விதைகளில் கருப்பு சியாவை விட சற்று அதிகமாக இருப்பதாக சில தகவல்கள் கூறுகின்றன.
எந்தப் பிரச்சனைக்கு எந்தக் கலர் சியா விதை சாப்பிடலாம்?
உண்மையில், உங்கள் குறிப்பிட்ட உடல்நலப் பிரச்சனைக்கு எந்த நிறச் சியா விதையை எடுக்கலாம் என்பதில் பெரிய வித்தியாசம் இல்லை. ஏனெனில், இரண்டு வகைகளுமே ஏறக்குறைய ஒரே மாதிரியான ஊட்டச்சத்துக்களைக் கொண்டிருக்கின்றன.
ஒமேகா-3 ALA சத்து இதய ஆரோக்கியத்திற்கு முக்கியம் என்பதால், சற்று அதிக ALA உள்ள வெள்ளை சியா இதய நலனை மேம்படுத்த நினைப்பவர்களுக்கு ஒரு நல்ல தேர்வாக இருக்கலாம். இது இரத்த அழுத்தம் மற்றும் கொலஸ்ட்ரால் அளவைக் கட்டுப்படுத்த உதவும்.
நார்ச்சத்து இரண்டு வகைகளிலும் அதிகம் இருப்பதால், செரிமானக் கோளாறுகள், மலச்சிக்கல், உடல் எடை குறைக்க நினைப்பவர்கள் கருப்பு அல்லது வெள்ளை சியா இரண்டையும் எடுத்துக் கொள்ளலாம்.
கால்சியம் சத்து எலும்புகளுக்கு அவசியம் என்பதால், எலும்பு உறுதிக்கு வெள்ளை சியா சற்று கூடுதல் நன்மை அளிக்கும்.
கருப்பு, வெள்ளை என எந்த சியா விதையாக இருந்தாலும், இரண்டும் உங்கள் ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும் சூப்பர்ஃபுட்கள் என்பதில் சந்தேகமில்லை. அவற்றின் ஊட்டச்சத்து வேறுபாடுகள் மிகவும் சிறியவை. எனவே, உங்களுக்கு எளிதாகக் கிடைக்கும் அல்லது நீங்கள் விரும்பும் நிறத்தைச் சியா விதைகளைத் தேர்வு செய்து சாப்பிடுங்கள்.
(முக்கிய குறிப்பு: இந்தத் தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே. மருத்துவ ஆலோசனைக்கு சரியான தகுந்த மருத்துவரை அணுகவும்)