

நம் சமையலில் வெங்காயம் (Onions) இல்லாமல் எந்த ரெசிபியையும் செய்ய முடியாது என்ற நிலை இப்போது. சின்ன வெங்காயம், பெரிய வெங்காயம் என வகை வகையாக இருந்தாலும் வேலை அவசரத்தில் நாடுவது பெரிய வெங்காயத்தையே. ஆனால், அந்த வெங்காயம் தற்போது அழுகிய நிலையிலும் மேலே கருமை கோடுகள் படிந்தும் வருகிறது. கருமை படந்திருக்கும் வெங்காயங்களை நாம் உபயோகிக்கலாமா வேண்டாமா? எனும் சந்தேகம் உண்டு. அந்தக் கருமை எதனால் ஏற்படுகிறது. அது எந்த வகையைச் சேர்ந்தது என்பதை பற்றி எல்லாம் இங்கு காண்போம்.
வெங்காயத்தில் படியும் கருமைகளுக்கு காரணம் Aspergillus என்ற பூஞ்சை இனத்தின் பொதுவான வகையான ஆஸ்பெர்கிலஸ் நைகர் (Aspergillus niger) எனும் ஒரு பூஞ்சை வகை (fungus) ஆகும். இது மண், காய்கறிகள், பழங்கள், தானியங்கள், மற்றும் ஈரமான இடங்களில் பொதுவாக காணப்படும்.
இந்த வகை பூஞ்சைகள் கருப்பு நிறத்திலான மூலப்பொருட்களை (spores) உருவாக்கும் காரணத்தால் “niger” என்று அழைக்கப்படுகிறது. அதிக அளவில் அமில நிலைகளைக் கட்டுக்குள் தாங்கும் ஏ. நைகரின் திறன் சிட்ரிக் அமிலத்தின் தொழில்துறை உற்பத்திக்கு மிகவும் முக்கியமானதாக உள்ளதால் தொழிற்துறைகளில் citric acid மற்றும் சில என்சைம்கள் (amylase, glucose oxidase) உற்பத்திக்கும் பயன்படுகிறது.
பயோடெக்னாலஜி மற்றும் மருந்து தயாரிப்பு துறைகளில் இதன் பயன்பாடுகள் உள்ளன. நைகர் உணவு உற்பத்தியில் பயன்படுத்த அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகத்தால் பாதுகாப்பானதாக (GRAS) வகைப்படுத்தப்பட்டுள்ளதாக இருப்பினும், இந்த நுண்ணுயிரி மனித ஆரோக்கியத்தை பாதிக்கும் நச்சுக்களை உற்பத்தி செய்யும் திறன் கொண்டவை என்கின்றன ஆய்வுகள்.
இதனால் நமது உடலில் வரும் பாதிப்புகள்(Harmful Effects) என்ன?
பொதுவாக உடலில் அதிக ரோக எதிர்ப்பு சக்தி (immunocompromised) கொண்டவர்களுக்கு இது ஆபத்தாகிறது. இது Aspergillosis என்ற நோயை ஏற்படுத்தும். சுவாசக் குழாயில் ஒவ்வாமை(Allergic bronchopulmonary aspergillosis (ABPA) மற்றும் நுரையீரல் குருதியிலுள்ள குழிகளில் பூஞ்சை குமிழ்கள்(Aspergilloma (fungal ball) உருவாக்கும். நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தவர்களில் உயிருக்கு ஆபத்தான தாக்கத்தை ஏற்படுத்தும் வாய்ப்பு உண்டு.
எதில் எப்படியெல்லாம் இதன் பாதிப்புகள் இருக்கும்?
ஈரப்பதமான இடங்களில் வேகமாக வளர்ந்து உணவுப்பொருட்களான பழம், தானியம், மற்றும் மசாலா பொருட்களை கெடுக்கும். சில சமயங்களில் Mycotoxins என்ற நச்சுப் பொருட்களை உருவாக்கி உணவு நச்சுத் தாக்கம் ஏற்படுத்தலாம். காய்கறிகள் மற்றும் பழங்கள் கெடுவதற்கு காரணமாகிறது.
எச்சரிக்கை
Aspergillus niger என்பது இயற்கையில் பொதுவாகக் காணப்படும் ஒரு பூஞ்சை. தொழில்துறையில் பயன்பாடுகள் இருப்பினும் ஈரமான சூழலில் மனிதர்களுக்கும் உணவுப் பொருட்களுக்கும் தீங்கு விளைவிக்கக்கூடியதே என்பதால் இது போன்ற கருப்பு வெங்காயங்களை தவிர்ப்பது நல்லது. இல்லையெனில் கருப்பு பாகத்தை அகற்றி விட்டு நன்கு கழுவி உபயோகியுங்கள்.
வெங்காயம் மட்டுமல்ல தற்போது மழைக்காலம் என்பதால், ஈரப்பதம் அதிகம் நமது வீடுகளில் காணப்படும். இதனால் நாம் எப்படித்தான் பாதுகாப்பாக வைத்திருந்தாலும் பழங்கள், காய்கறிகளில் ஒரு வித பூஞ்சை படர்ந்தே இருக்கும். இதை அகற்ற மிதமான சுடுநீரில் பழங்களை கழுவியும் காய்கறிகளை உப்பு நீரில் போட்டு எடுத்தும் உபயோகிப்பது பூஞ்சை தொற்றிலிருந்து நம்மை பாதுகாக்கும்.
(முக்கிய குறிப்பு: இந்தத் தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே. மருத்துவ ஆலோசனைக்கு சரியான தகுந்த மருத்துவரை அணுகவும்)