

நாம் பல பிரச்னைகள் மற்றும் மன அழுத்தங்களால் பாதிக்கப்படும்போது, சோர்வு அடைதல் தினமும் வாழ்க்கையின் அங்கமாகவே ஆகிவிடுகிறது. பிரச்சனைகளிலிருந்து விடுபட முடியாத நிலையில் உடலும் மனமும் பாதிக்கப்பட்டு அவதிப்படுகிறோம். ஆனால் இந்த மனச் சோர்வை எளிதாக நம்மைவிட்டு விரட்ட வழி உள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள். இதற்கு முக்கியமான காரணம் தண்ணீர். ந்யூரோ விஞ்ஞானம், மனோதத்துவம் மற்றும் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் மூலம் நம் மூளையின் சக்தியை மேம்படுத்த மற்றும் அழுத்தத்தைக் குறைக்க 'நீலநிற கோட்பாட்டின்'படி தண்ணீர் முக்கியமானதாகக் கருதப் படுகிறது.
நீல நிற மனக் கோட்பாடு என்றால் என்ன?
இந்த நீலநிற மனக் கோட்பாட்டை கண்டுபிடித்தவர் நிகோலஸ் என்ற பயோ விஞ்ஞானி. தண்ணீர் அருகே இருக்கும் போது நம் மனம் மிக அமைதியான நிலையில் இருப்பதை இவர் ஆய்வில் கண்டறிந்துள்ளார். இதை மக்கள் முழுமையாக உணர முடியும் என்று கூறுகிறார்.
கடல் பகுதிகள், ஏரிப்பகுதிகள், நீர்வீழ்ச்சிகள் மற்றும் குளிக்கும் பாத் டப் வரை நீர் வளங்களில் இருக்கும் போது மூளை ஒருவித தியான நிலையில் மனம் அமைதியாவதாக கூறுகிறார்.
நிகோலா சின் ஆய்வின்படி, நீலநிற மனக் கோட்பாடு என்பது சிவப்பு (Red mind) மனதிற்கு எதிரானதாகும் என்று கருதுகிறார். சிவப்பு நிற மனக் கோட்பாடு என்பது மனம் கவலையுற்றிருக்கும் நிலைமையைப் குறிப்பிடுவதாகும். அதற்கு நேர்மாறாக ப்ளூ மைண்ட் தியரி என்பது, மனதை அமைதிப்படுத்தி சமச்சீரான நிலையில் வைப்பதாகும்.
ஆய்வின் படி, மனோதத்துவ ரீதியில் தண்ணீருக்கு சோர்வை நீக்கக் கூடிய சக்தி உண்டு என்று கருதப்படுகிறது. இது இரத்த அழுத்ததைக் குறைத்து, இதயத்துடிப்பை சீராக வைத்து சோர்வைப் போக்கி நம்மை ஒரு நல்ல மனநிலையில் வைக்கக் கூடிய பண்பை தண்ணீரின் சக்தி பெற்றுள்ளது.
ஆய்வுகளின் படியும் சுற்றுச்சூழல் ஆரோக்கியத்துவத்தின் கூற்று படியும் தண்ணீரின் நீல நிற இடங்கள் அருகே இருப்பது சமூக பிணைப்பை அதிகப்படுத்துவதாகவும், நேர்மறையான ஆற்றல்கள் ஊக்குவிக்கப்பட்டு மன ஆரோக்கியம் மிகச் சிறந்த நிலையில் இருக்க உதவி புரிவதாகவும் தெரிகிறது.
இந்த நீலநிற மனக் கோட்பாட்டை எப்படி தக்க வைத்து பயன்பெறுவது?
நீங்கள் வசிக்கும் இடம் அருகில் ஏதாவது நீர் நிலை இருந்தால் நிச்சயமாக இந்த கோட்பாட்டை அனுபவித்து பயனடைவீர்கள். நீர்நிலையில் நீச்சல் பயிற்சியில் ஈடுபடுவது அல்லது அதன் அருகே நடைப்பயிற்சி செல்வதும் நல்ல பலனைத் தரும். தண்ணீர் அருந்துவது கூட பலன் தரும்.
உங்கள் அருகே நீர்நிலைகள் இல்லாவிட்டாலும் கடல் அலைகளின் இரைச்சலைக் கேட்பது, மழையை ரசித்து வேடிக்கை பார்ப்பது அல்லது ஃபௌண்டன் அருகே நின்று அதை ரசிப்பது போன்றவை கூட மனதை அமைதிப்படுத்துவதை அனுபவத்தில் உணர்வீர்கள்.
மேற்கூறிய பலவற்றில் தினமும் நீங்கள் ஈடுபடுவதால் உங்கள் மன அழுத்தம்,சோர்வு நீங்கி நீங்கள் எந்த காரியத்திலும் முழு வேகத்துடன் ஈடுபட முடியும் என்பதை உணர்வீர்கள். இந்த அவசரமான யுகத்தில் உங்கள் உணர்ச்சிகளை சமநிலைப் படுத்தி உங்களை ஊக்குவித்து அமைதிப்படுத்த இந்த நீலநிறமனக் கோட்பாடு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
(முக்கிய குறிப்பு: இந்தத் தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே. மருத்துவ ஆலோசனைக்கு சரியான தகுந்த மருத்துவரை அணுகவும்)