

தினசரி சேவல் கூவுவதை ஒரு வழக்கமாக நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால், சேவல் அதிகாலையில் கூவுவது இயற்கை உடல் கடிகாரத்தின் உதவியால் தான் என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள். நம் உடலில் உள்ள உறுப்புக் கடிகாரம் (Body Organ Clock) எப்படி வேலை செய்கிறது? அதனால் உடலில் என்ன மாற்றங்கள் நிகழ்கின்றன? என்பதை இப்பதிவில் காண்போம்.
உடலின் உள்ளுறுப்புகள் 24 மணி நேரமும் இயங்கிக் கொண்டிருந்தாலும், அவற்றின் சக்தி ஓட்டப்பாதை வரிசைப்படி ஒவ்வொன்றும் 2 மணி நேரங்களுக்கு ஆற்றலுடன் இயங்குகின்றன. மனிதன், நாளின் மணித்துளிகளைப் பிரித்திருக்கும் நேரம் என்பது வேறு. இயற்கை மனிதனின் உடல் உறுப்புகள் இயங்கும் நேரத்தை பிரித்து இருப்பது உண்மையானது. மனிதன் கண்டுபிடித்த கடிகாரத்தை அவ்வப்போது குறைந்தபட்சம் வருடத்திற்கு ஒரு முறையாவது மாற்றி அமைத்துக் கொள்ள வேண்டும். ஆனால், இயற்கை தனது நேர அளவை (கடிகாரத்தை) பல லட்சம் கோடி ஆண்டுகளாக மாற்றியதே இல்லை.
சூரிய, சந்திர இயக்கத்தை அடிப்படையாகக் கொண்ட இந்திய சித்தர்களின் நாழிகைக் கணக்கு நேரம் மாற்றப்பட்டதே இல்லை. அதிகாலை 3 மணியிலிருந்து 5 மணி வரை உள்ள காலம் உஷாக் காலம் என்கிற பிரம்ம முகூர்த்தம். நுரையீரல் சக்தி ஓட்டப் பாதை இயங்கும் நேரம் அது.
5 மணியிலிருந்து ஏழு மணி வரை பெருங்குடல் சக்தி ஓட்டப் பாதை இயங்கும் நேரம். நுரையீரலும், பெருங்குடலும் ஒன்றுடன் ஒன்று ஜோடியானது, காற்று சம்பந்தப்பட்டது.
காலை 7 மணியிலிருந்து ஒன்பது மணி வரை இரைப்பை சக்தி ஓட்டப் பாதை இயங்கும் நேரம். மண்ணீரல் இயங்கும் நேரம் 9 மணியில் இருந்து 11 மணி வரையிலும். இதயம் இயங்கும் நேரம் காலை 11 மணியிலிருந்து ஒரு மணி வரை. சிறுகுடல் இயங்கும் நேரம் மதியம் 1 மணியிலிருந்து மூன்று மணி வரை.
இதயமும், சிறுகுடலும் ஜோடியானது நெருப்பின் அம்சமாக இயங்குவது (சிறிய வகை நெருப்பு). சிறுநீர்ப்பை சக்தி ஓட்டப் பாதை இயங்கும் நேரம் மாலை 3 மணியில் இருந்து ஐந்து மணி வரை. சிறுநீர்ப்பையும் (கிட்னியும்) சிறுநீரகமும் ஜோடியானது. நீரின் அம்சமாக இயங்குவது. மாலை 7 மணியில் இருந்து 9 மணி வரை இதய மேல் உரை சக்தி ஓட்டப்பாதை இயங்கும் நேரம்.
இரவு 9 மணியிலிருந்து 11 மணி வரை மூவெப்ப மண்டலம் சக்தி ஓட்ட பாதை இயங்கும் நேரம். இதய மேலறையும் மூவெப்ப மண்டலமும் ஜோடியானது . பெரிய வகை நெருப்பின் அம்சமாக இயங்குவது.
இரவு 11 மணியிலிருந்து ஒரு மணி வரை பித்தப்பை சக்தி ஓட்டப் பாதை இயங்குகிறது. அதிகாலை ஒரு மணியிலிருந்து 3 மணி வரை கல்லீரல் சக்தி ஓட்டப் பாதை இயங்குகிறது. பித்தப்பையும், கல்லீரலும் ஜோடியானவை. ஆகாயத்தின் அம்சமாக இயங்குபவை.
நம் உடலில் ஒவ்வொரு உறுப்பின் சக்தி ஓட்டப்பாதையும் ஒவ்வொரு நேரத்தில் முழு ஆற்றலுடன் வரிசையாக இயங்குகின்றன.
நுரையீரல் பாதை பெருங்குடலுடன் இணைகிறது.
இரைப்பைப் பாதை மண்ணீரல் பாதையுடன் இணைகிறது.
இதயப்பாதை சிறுகுடல் பாதையுடன் இணைகிறது.
சிறுநீர்ப்பை பாதை சிறுநீரகப் பாதையுடன் இணைகிறது.
இதய மேலுறைப் பாதை மூவெப்ப மண்டலப் பாதையுடன் இணைகிறது.
பித்தப்பை பாதை கல்லீரல் பாதையுடன் இணைகிறது.
இவ்வாறு மேலே கூறிய வரிசையில் உயிர் சக்தி ஓட்டப்பாதைகள் இயற்கையால் வரிசைப்படுத்தப்பட்டு ஆற்றலுடன் இயங்க வைக்கப்படுகின்றன. இவைகள் அனைத்தும் நன்றாக இயங்கினால் தான் நாம் நன்றாக வாழ முடியும். இதுதான் நம் உறுப்புக் கடிகாரம் உணர்த்தும் செய்தி.