

நமது உடலின் 80% நீரால் ஆனதால், தினசரி போதுமான அளவு (சுமார் 2 லிட்டர்) நீர் பருகுவது செரிமானம், உடல் வெப்பநிலை சீராக்கம், மற்றும் நச்சுக்களை வெளியேற்ற அத்தியாவசியமாகும். போதுமான தண்ணீர் குடிக்காதது வாய் வறட்சி மற்றும் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தில் பாதிப்பை ஏற்படுத்தும். எனவே தாகம் எடுக்கும் முன் நீர் பருகுவது சிறந்தது. தினமும் நீர் குடிப்பது எந்த அளவிற்கு உடல் நலத்திற்கு ஆரோக்கியமானதோ, அதேயளவு சுத்தமான நீரை குடிப்பது முக்கியமானது.
அந்த வகையில் நாம் குடிக்கும் நீரில், வடிகட்டிய குடிநீர், காய்ச்சிய குடிநீர், பாட்டில் நீர் என இருக்கும்பட்சத்தில் எந்த தண்ணீரை பருகுவது ஆரோக்கியமானது என்ற குழப்பம் பலருக்கும் ஏற்படுவதுண்டு. அதற்கான விடையை இங்கே பார்க்கலாம்...
பாட்டில் நீர்:
பாட்டில் நீர் (Bottled Water) என்பது நுகர்வுக்காக சீல் செய்யப்பட்ட கொள்கலன்களில் (பிளாஸ்டிக் அல்லது கண்ணாடி) அடைக்கப்பட்டு விற்கப்படும் சுத்திகரிக்கப்பட்ட குடிநீராகும். இந்த நீர், யூ.வி., ஆர்.ஓ. போன்ற பல்வேறு சுத்திகரிப்பு செயல்முறைகளுக்கு உட்படுத்தப்பட்டிருப்பதுடன் கிருமிகளும் நீக்கப்பட்டிருக்கும். அதேசமயம் குடிப்பதற்கு சுவையாகவும் இருக்கும்.
குறைபாடுகள்:
பாட்டில் நீரில் பல பிராண்டுகள் சந்தையில் இருப்பதால் எல்லா பாட்டில் நீரும் ஒரே தரத்தில் இருப்பதில்லை. தரம் மாறுபடலாம். அத்துடன் பாட்டில் நீரை அதிக நாட்கள் சேமித்து வைத்து பயன்படுத்தும்போது அதிலிருக்கும் மைக்ரோபிளாஸ்டிக் நீரில் கலக்க வாய்ப்பிருக்கிறது. சமீபத்திய ஆய்வுகள், பிளாஸ்டிக் பாட்டில்களில் மைக்ரோ பிளாஸ்டிக் (microplastics) இருக்கலாம் என்று எச்சரிக்கின்றன. பாட்டில் நீர் பாதுகாப்பானது என்றாலும், சுற்றுச்சூழல் பாதிப்பு மற்றும் பிளாஸ்டிக் பயன்பாடு காரணமாக சிலருக்கு அச்சத்தை ஏற்படுத்துகிறது.
காய்ச்சிய நீர்:
காய்ச்சிய நீர் (Distilled Water) என்பது நீராவியாக்கப்பட்டு, பின் குளிரூட்டி சேகரிக்கப்படும் மிகவும் தூய்மையான நீராகும். இது வைரஸ், பாக்டீரியா, நுண்ணுயிர் கிருமிகள், கனிமங்கள் மற்றும் அசுத்தங்களை அகற்றி, காய்ச்சி வடிகட்டிய நீர் குடிக்க பாதுகாப்பானதாக மாற்றுகிறது. சுமார் ஒரு நிமிடமாவது நன்கு தண்ணீரை கொதிக்கவைத்து அதனை வடிகட்டி பருகலாம். அப்படி காய்ச்சிய நீர் குடிப்பதற்கு பாதுகாப்பானதாகிவிடும்.
கவனிக்க வேண்டியவை:
காய்ச்சி வடிகட்டிய நீர் குடிக்க பாதுகாப்பானது என்றாலும், அதில் கனிம சத்துக்கள் இல்லை. நீரின் சுவையும் மாறக்கூடும். பொதுவாக அனைத்து இடங்களிலும் பெரிய அளவில் பயன்படுத்துவதற்கு இது நடைமுறைக்கு உகந்தது அல்ல.
வடிகட்டிய நீர்:
வடிகட்டிய நீர் (Filtered Water) என்பது மணல், துரு, குளோரின், கன உலோகங்கள், பாக்டீரியா மற்றும் பிற அசுத்தங்களை நீக்கி, கார்பன் அல்லது பிற ஊடகங்கள் மூலம் சுத்திகரிக்கப்பட்ட குடிநீராகும். இந்த நீரை பயன்படுத்துவதும் பாதுகாப்பானது. குறிப்பாக இது தீங்கு விளைவிக்கும் நச்சுக்களை அகற்றி, சுவை மற்றும் பாதுகாப்பை மேம்படுத்துகிறது. அதேசமயம் உடலுக்குத் தேவையான கனிமச்சத்துக்களை தக்கவைத்துக்கொள்ளவும் உதவுகிறது. வடிகட்டிய நீர் பொதுவாக ஆரோக்கியத்திற்கு உகந்தது மற்றும் தினசரி பருகுவதற்கும், நீண்ட கால பயன்பாட்டிற்கும் சிறந்தது.
கவனிக்க வேண்டியவை:
எல்லா வடிகட்டிகளும் ஒரே மாதிரியான செயல்திறன் கொண்டவை இல்லை. சில வடிகட்டிகள் நீரில் உள்ள அனைத்து அசுத்தங்களையும் வடிகட்டுவதில்லை. தரமான வடிகட்டிகளை வாங்கி உபயோகிப்பது அதை விட முக்கியமானது, இல்லையெனில் பாக்டீரியாக்கள் வளரக்கூடும். வடிகட்டிய நீர் தரமானதாக மாற, தவறாமல் சுத்தம் செய்வதும், சரியான நேரத்தில் மாற்றுவதும் முக்கியமானதாகும். வடிகட்டிய நீர் பாக்டீரியா மற்றும் பூச்சிக்கொல்லிகள் இல்லாதது, இது ஆரோக்கியமானது, ஆனால் முறையாகப் பராமரிக்கப்பட வேண்டும்.
எதை தேர்வு செய்ய வேண்டும்?
சரி, இப்போது மூன்று வகையான நீரை பற்றியும் பார்த்து விட்டோம். இதில் எந்த நீரை, எதற்கு, எந்த இடத்தில் பயன்படுத்துவது ஆரோக்கியமானது என்பது குறித்து அறிந்து கொள்ளலாம்.
குடிப்பதற்கு மட்டுமின்றி சமைப்பது உள்ளிட்ட நம்முடைய அன்றாட அனைத்து உபயோகத்துக்கும் வடிகட்டிய நீரை பயன்படுத்துவது நல்லது. அதற்கு தரமான சுத்திகரிப்பு சாதனத்தை வீட்டில் நிறுவி, வடிகட்டிய நீரைப் பயன்படுத்தும் போது, வடிகட்டி (filter) சரியாகச் செயல்படுகிறதா, வழக்கமாக மாற்றுவது, நீரின் சுவை மற்றும் தெளிவுத்தன்மை என அனைத்தையும் சரிபார்ப்பது முக்கியம். ஆர்.ஓ. பயன்படுத்துவதாக இருந்தால் நீரில் இருக்கும் தாதுக்களை அறவே நீக்காமல் பாதுகாக்கும்படியான வடிகட்டிகளை இடம் பெறச் செய்ய வேண்டும்.
வெளியிடங்களுக்கு பயணம் செய்யும்போது, குடிநீர் பாட்டில்களைப் பயன்படுத்தும்போது, குறிப்பாக பிளாஸ்டிக் பாட்டில்களில் மைக்ரோபிளாஸ்டிக்ஸ் மற்றும் தீங்கு விளைவிக்கும் ரசாயனங்கள் கலப்பதைத் தவிர்க்க, காலாவதி தேதி, மறுபயன்பாடு (Re-use), சூரிய ஒளி படுதல், மற்றும் சரியான சுத்தம் செய்தல் ஆகியவற்றை கவனிக்க வேண்டும். பாட்டிலின் அடியில் உள்ள முக்கோணக் குறியீடு மற்றும் BPA-Free என்பதைச் சரிபார்ப்பது அவசியம். நம்பகமான தயாரிப்பு நிறுவனங்களின் குடிநீர் பாட்டில்களை வாங்கி உபயோகிக்கலாம்.
அல்லது பாட்டில் குடிநீரை தவிர்க்க விரும்புபவர்கள், வீட்டில் இருந்தே பாட்டில்களில் வடிகட்டிய, காய்ச்சிய நீரை கொண்டு செல்லலாம். காய்ச்சிய நீரை சேமிக்க சுத்தமான, துருப்பிடிக்காத எஃகு (Stainless Steel) அல்லது கண்ணாடிப் பாத்திரங்களைப் பயன்படுத்துவது நல்லது.
மூன்று வகையான குடிநீரும் ஒவ்வொரு வகையில் நல்லது தான் என்றாலும், எந்த வகை குடிநீராக இருந்தாலும் அதனை பருகும் முன்பு தூய்மையை உறுதி செய்து கொள்வது நல்லது. குடிநீரை பாட்டில்களில் உபயோகிப்பதாக இருந்தால் அடிக்கடி பாட்டில்களை நன்றாக சுத்தம் செய்து பராமரிக்க வேண்டியது அவசியமாகும்.
பொதுவாக பாட்டில் குடிநீரை விட வீட்டில் சுத்திகரிக்கப்பட்ட நீரைக் கொண்டு செல்வது உடலுக்கும் சுற்றுச்சூழலுக்கும் சிறந்தது.