BP எனப்படும் உயர் ரத்த அழுத்தம் உலக அளவில் மில்லியன் கணக்கான மக்களை பாதிக்கும் ஒரு பரவலான சுகாதாரப் பிரச்சனையாகும். நமது ரத்த அழுத்தத்தை நிர்வகிப்பதில் உணவுகள் பெரும் பங்கு வகிக்கின்றன. எனவே உயர் ரத்த அழுத்த பாதிப்பு இருப்பவர்கள் எதுபோன்ற உணவுகளை எடுத்துக் கொள்கிறோம் என்பதில் கவனம் செலுத்த வேண்டும். குறிப்பாக எத்தகைய உணவைத் தவிர்க்க வேண்டும் என்பதில் உங்களுக்கு தெளிவு இருக்க வேண்டும். இந்தப் பதிவில் BP பிரச்சனை இருப்பவர்கள் தவிர்க்க வேண்டிய உணவுகள் பற்றி பார்க்கலாம்.
1. சோடியம் அதிகம் உள்ள உணவுகள்: அதிகப்படியான சோடியம் உட்கொள்வது உயர் ரத்த அழுத்தத்திற்கு முதன்மைக் காரணமாக அமைகிறது. குறிப்பாக பதப்படுத்தப்பட்ட இறைச்சிகள், அதிக உப்பு சேர்க்கப்பட்ட தின்பண்டங்கள், துரித உணவுகள் போன்றவற்றை அதிகம் எடுத்துக் கொள்வதைத் தவிர்க்க வேண்டும்.
2. அதிக சர்க்கரை உள்ள உணவுகள்: அதிக சர்க்கரை கொண்ட உணவுகளை உட்கொள்வதால் உடல் எடை அதிகரிக்கும் அபாயம் உள்ளது. இது ரத்த அழுத்தம் அதிகரிக்க வழிவகுக்கும். எனவே ஏற்கனவே ரத்த அழுத்த பாதிப்பு உள்ளவர்கள், சோடா மற்றும் சர்க்கரை பானங்கள், இனிப்புகள், அதிக இனிப்புடைய பழச்சாறு, பிஸ்கட்டுகள் போன்றவற்றை குறைத்துக் கொள்ளுங்கள்.
3. ட்ரான்ஸ் மற்றும் சாச்சுரேட்டட் கொழுப்புகள்: டிரான்ஸ் மற்றும் சேச்சுரேட்டட் கொழுப்புகள் கொலஸ்ட்ரால் அளவை அதிகரித்து இதய நோயின் அபாயத்தை அதிகரிக்கும். இந்த ஆரோக்கியமற்ற கொழுப்புகள் வறுத்த உணவுகள், அதிக கொழுப்புள்ள பால் பொருட்கள், தோலுடன் இருக்கும் இறைச்சி மற்றும் மாமிச கொழுப்புகளில் அதிகம் உள்ளது. எனவே இவற்றின் உட்கொள்ளலை குறைத்துக் கொள்வது நல்லது.
4. அதிகப்படியான காஃபின்: மிதமான அளவு காபின் உட்கொள்ளல் பொதுவாக பெரும்பாலான மக்களுக்கு பாதுகாப்பானது என்றாலும், அதிகப்படியான நுகர்வு, ரத்த அழுத்தத்தை அதிகரிக்கும். எனவே உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்கள் காபி, டீ, எனர்ஜி ட்ரிங்க்ஸ் மற்றும் சில சோடா போன்ற காஃபின் அதிகம் கலந்த பானங்களை உட்கொள்வதைக் கட்டுப்படுத்த வேண்டும்.
5. மது: மற்ற உணவுகளைப் போலவே அதிக அளவு மது அருந்துவது உயர் ரத்த அழுத்தத்தை மோசமாக்கும் என சொல்லப்படுகிறது. எனவே BP பாதிப்பு இருப்பவர்கள் மது அருந்துவது முற்றிலும் தவிர்க்கப்பட வேண்டும். ஏற்கனவே மதுவின் பிடியில் சிக்கி இருப்பவர்கள் அவற்றின் அளவைக் குறைத்து, ஒரு நாளைக்கு ஒரு ட்ரிங்க்ஸ் எடுத்துக்கொள்வது போதுமானது.