மூளை தழும்பு முதல் திடீர் வலிப்பு வரை: நரம்பியல் நிபுணர் தரும் 'நச்சுனு 4' பதில்கள்!

Brain Neurology Diseases
Brain Neurology Diseases
Updated on
Kalki Strip
Kalki Strip

'நச்சுன்னு  4' கேள்வி - பதில் பகுதியில் உங்கள் கேள்விகளுக்கு நரம்பியல் மருத்துவ நிபுணர் டாக்டர் வி. சதீஷ்குமார் - Head & Senior Consultant Neuro Physician, Apollo Speciality Hospitals பதிலளிக்கிறார்.

Dr. V. Satish kumar Head & Senior Consultant Neuro Physician Apollo Speciality Hospitals
Dr. V. Satish kumar Head & Senior Consultant Neuro Physician Apollo Speciality HospitalsImg Credit: Apollo

1. Multiple Scelerosis (MS) எதனால் வருகிறது? வந்த பின் அதை எப்படி சரி செய்வது?

- சுமதி, சென்னை

மல்டிபிள் ஸ்கலரோசிஸ் (சுருக்கமாக -MS) என்பது மூளை மற்றும் முதுகுத் தண்டுவடத்தை (Central Nervous System) பாதிக்கும் ஒரு தன்னைத்தானே தாக்கும் நோய் (Autoimmune disease) ஆகும். மூளையில் வரும் தழும்பு எனலாம்.

இந்த நோய், உடலின் நோய் எதிர்ப்புக்கான  நரம்புகளை பாதுகாக்கும் மைலின் (Myelin) என்ற மேற்புற பாதுகாப்பு படலத்தைத்  தவறாகத் தாக்குகிறது.

நம் உடலில் உள்ள நியூரான்கள் (நரம்பு செல்கள்) தங்களுக்குள் மின் மற்றும் வேதியல் சமிக்ஞைகள் (Electrical and Chemical Signals) மூலம் தகவல்களைப் பரிமாறிக் கொள்ளும் நரம்பு தகவல் பரிமாற்றம் (Neural Transmission) பாதிக்கப்பட்டு பல்வேறு நரம்பியல் பாதிப்புக்கள் ஏற்படுகின்றன. நியூரான்களில் உள்ள ஆக்சன்கள் குறைவதால் மூளை பலவீனமடைந்து, தொடர்ச்சியாக உடலில் பல உறுப்புக்கள் பாதிக்கப்பட  வாய்ப்பு உண்டு.

கண்பார்வை திடீரென மங்குதல் அல்லது காட்சிகள் இரட்டையாகத் தெரிதல், கை அல்லது கால் மரத்துப் போதல் உடலின் ஒரு பக்கம் பலவீனம், நடையில் தடுமாற்றம், அதிக சோர்வு, சிறுநீர் கழிப்பதில் சிரமம் அல்லது சிறுநீர் கட்டுப்பாடின்றி வெளிப்படல், நினைவாற்றல் மற்றும் கவனக்குறைவு அசைவுகளில் பலமின்மை,  இவையெல்லாம் இந்த நோயின் அறிகுறிகள்.

நோயாளிகளுக்கு எந்த விதமான நரம்பியல் பிரச்னைகள், எவ்வளவு இடைவெளியில் ஏற்படுகின்றன, அவற்றின் வெளிப்பாடு எவ்விதம் என்பதை எல்லாம் கண்காணித்து, சிகிச்சைகள் தரப்படுகின்றன.

இதில் நான்கு வகைகள் உண்டு. ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு விதமான சிகிச்சை தர வேண்டும்.

1. Relapsing-Remitting MS (RRMS)

பொதுவாக 85 சதவீதம் காணப்படும் பாதிப்பு இது. நோயின் அறிகுறிகள் திடீரென்று தோன்றி மறையலாம் அல்லது மீண்டும் உடனே அல்லது, சில நாட்கள் கழித்தோ வரக்கூடும். சிலருக்கு முற்றிலுமாக மறைந்த போகக்கூடும். நோய் தாக்குதல் (Relapse) மற்றும் குணமடைதல் (Remission) மாறி மாறி வரும். இடையில் நோயாளி இயல்பாக இருக்கலாம்

2. Secondary Progressive MS (SPMS)

RRMS-இல் இருந்து காலப்போக்கில் மெதுவாக உருவாகலாம். தாக்குதல்கள் இல்லாவிட்டாலும் படிப்படியாக இயலாமை அதிகரிக்கும்

3. Primary Progressive MS (PPMS)

ஆரம்பத்திலிருந்தே மெதுவாக நோய் அதிகரிக்கும்.தெளிவான Relapse இல்லாமல் இருக்கும். சுமார் 10–15% நோயாளிகளில் காணப்படுகிறது.

4. Progressive-Relapsing MS (PRMS)

இது அரிதான வகை நோய் தொடர்ந்து முன்னேறுவதோடு இடையிடையே தாக்குதல்களும் ஏற்படும். தற்போது பெரும்பாலும் PPMS with activity என வகைப் படுத்தப்படுகிறது. கண் நரம்பில் வரும் வீக்கம் காரணமாக, திடீரென்று ஒரே நாளில் கண் பர்வை மங்கும். டிமென்ஷியா என்னும் நினைவாற்றல் இழப்பு வரலாம். இந்த நோயைக் கண்டறிய பலவித பரிசோதனைகள் செய்யப்படுகின்றன.

MRI ஸ்கேன் செய்யும்போது மூளை மற்றும் முதுகுத்தண்டு வடத்தில் MS புள்ளிகள் (plaques) இருந்தால் நோய் பாதிப்பை கண்டறியலாம்.

Multiple scelerosis
Multiple scelerosis

லம்பார் பஞ்சர் (Lumbar Puncture) என்பது ஒரு மருத்துவப் பரிசோதனை. முதுகுத்தண்டின் கீழ் பகுதியில் ஒரு சிறிய ஊசியைச் செலுத்தி, மூளை மற்றும் தண்டுவடத்தைச் சுற்றியுள்ள செரிப்ரோஸ்பைனல் திரவத்தை (CSF) சேகரித்து சோதித்தல். இந்த பரிசோதனை நரம்பு மண்டல நோய்களைக் கண்டறியவும், சில சமயங்களில் மருந்தை நேரடியாகச் செலுத்தவும் பயன்படுகிறது. Oligoclonal bands கண்டறியப்படலாம். Evoked Potentials சோதனை மூலம், நரம்பு தகவல் கடத்தும் வேகம் பரிசோதிக்கப்படும்.

அறிகுறி அடிப்படையிலான சிகிச்சை, தசை இறுக்கத்திற்கு, நரம்பு வலிக்கு மருந்துகள், மருத்துவ சிகிச்சைகள் தரப்படுகிறது. சோர்வுக்கு, உடற்பயிற்சி, தூக்க மேலாண்மை மற்றும் தேவையான மருந்துகள் Physiotherapy மற்றும் Rehabilitation அளிக்கப் படுகிறது.

தற்போது MS-க்கு முழுமையான குணப்படுத்தும் சிகிச்சை இல்லை. ஆனால், நவீன Disease Modifying Therapies மூலம் தாக்குதல்களின் எண்ணிக்கையை குறைக்கலாம். புதிய MRI lesions உருவாவதைத் தடுக்கலாம். இயலாமை முன்னேற்றத்தை தாமதப்படுத்தலாம். இதனால் பல நோயாளிகள் நீண்ட காலம் இயல்பான வாழ்க்கையை நடத்த முடிகிறது.

முக்கியமாக வாசகர்களுக்கு ஒரு செய்தி:

பார்வை குறைதல், உடல் மரத்துப்போதல், மீண்டும் மீண்டும் வரும் நரம்பியல் அறிகுறிகள் போன்றவை இருந்தால் MS-ஐ சந்தேகித்து உடனடியாக நரம்பியல் நிபுணரை அணுகவேண்டும். ஆரம்பத்திலேயே கண்டறிந்து சிகிச்சை தொடங்குவது மிகவும் முக்கியம்.

2. எப்போதும் எதைப் பற்றியாவது கவலை, மனக்குழப்பம், அதீத மன பதற்றம், தூக்கமின்மை இவை யாவும் மூளை செயல்பாட்டை பாதிக்குமா டாக்டர்?

- மகாலட்சுமி சுப்ரமணியன், காரைக்கால்

Depression
Depression

இவை எல்லாமே ஒன்றோடொன்று தொடர்புடையவை. மனஅழுத்தம், பதட்டம், மனச்சோர்வு மற்றும் தூக்கமின்மை ஆகியவை வெறும் மனநலப் பிரச்னைகள் மட்டுமல்ல. இவை மூளையின் அமைப்பு, நரம்பியல் தகவல் கடத்திகள், நினைவாற்றல் மற்றும் அறிவாற்றலை நேரடியாக பாதிக்கும் உயிரியல் (biological) நிலைகள். ஆரம்பத்திலேயே அடையாளம் கண்டு சிகிச்சை அளித்தால் நீண்டகால நரம்பியல் பாதிப்புகளைத் தடுக்க முடியும்.

Stress → Anxiety → Insomnia → Depression இந்த நான்கு நிலைகளும் ஒன்றை ஒன்று மோசமாக்கும் ஒரு தீய சுழற்சியை உருவாக்குகின்றன.

மனஅழுத்தம் தூக்கமின்மையை ஏற்படுத்தும் தூக்கமின்மை பதட்டத்தை அதிகரிக்கும் நீண்டகால பதட்டம் மனச்சோர்வை ஏற்படுத்தும். மனச்சோர்வு மீண்டும் தூக்கத்தை பாதிக்கும். நீண்டகால நரம்பியல் சிக்கல்களுக்கு வழி செய்யும்.

மனஅழுத்தம் (Stress) ஏற்படும்போது மூளையில் என்ன நடக்கிறது?

உடலின் HPA Axis (Hypothalamic-Pituitary-Adrenal Axis) செயல்பட்டு Cortisol போன்ற மனஅழுத்த ஹார்மோன்களை அதிகமாக சுரக்கச் செய்கிறது. இதனால், நரம்பியல் விளைவுகள். தலைவலி மற்றும் மைக்ரேன் அதிகரிப்பு, நினைவாற்றல் குறைவு, கவனக்குறைவு தலைச்சுற்றல், தசை இறுக்கம் கழுத்து வலி, மற்றும் தூக்கக் கோளாறுகள் உருவாகின்றன. வலிப்பு (Epilepsy) இருப்பவர்களுக்கு அது அதிகரிக்கும் வாய்ப்பு உண்டு.

பதற்றம் (Anxiety) வரும்போது,

மூளையின் Amygdala அதிகமாக செயல்படுவதால் "அபாயம்" இருப்பதாக உடல் தொடர்ந்து உணர்கிறது.

கை, கால் நடுக்கம், முகம் அல்லது கைகள் மரத்துப்போதல் தலைச்சுற்றல், அதிக வியர்வை, இதயத்துடிப்பு அதிகரிப்பு, கவனச்சிதறல் இவையெல்லாம் ஏற்படும். நீண்டகால பதட்டம் நினைவாற்றல் மற்றும் நிர்வாகத் திறன்களை பாதிக்கக்கூடும்.

மனச்சோர்வு (Depression) வந்தால்,

மூளையில் Serotonin, Norepinephrine, Dopamine போன்ற நரம்பியல் தகவல் கடத்திகள் (Neurotransmitters) குறைகின்றன. இதனால், நினைவாற்றல் குறைவு, கவனக்குறைவு, சிந்தனை மந்தம், முடிவெடுக்கும் திறன் குறைவு உடல் வலி மற்றும் சோர்வு Dementia (Pseudodementia) பாதிப்புக்கள் வர வாய்ப்பு உண்டு. மூளையின் நினைவக மையமான Hippocampus அளவு குறையலாம். முதியவர்களில் அறிவாற்றல் வீழ்ச்சி அபாயம் அதிகரிக்கலாம். தூக்கமின்மை (Insomnia)யால் பலரும் அவதிப்படுகிறோம்.

இதனால் மூளை எவ்விதம் பாதிப்படைகிறது?

தூக்கத்தின் போதுதான்  மூளையில் தேங்கும் நச்சு புரதங்கள் அகற்றப்படுகின்றன. தூக்கமின்மை இந்த செயல்முறையை பாதிக்கிறது.

நினைவாற்றல் குறைவு, கவனக்குறைவு, பகல் நேர தூக்க கலக்கம், எதிர்வினை நேரம் குறைதல், மைக்ரேன் மற்றும் வலிப்பு அபாயம் அதிகரிப்பு இவையெல்லம் தூக்கமின்மையால் வரும் பாதிப்புக்கள்.

3. அனியூரிசம் (Aneurysm) என்றால் என்ன? அது எதனால் வருகிறது?

- வல்லபன், திருவனந்தபுரம்

Epilepsy disease
Epilepsy disease

மூளைக்குச் செல்லும் ரத்தக் குழாய்களில் பொதுவாக மூன்றடுக்கு சுவர் இருக்கும். நடுப்பகுதியில் பலவீனமடைந்து பலூன் போல  வீக்கம் வரும் (balloon like bulge in the wall) இது பொதுவாக ஆபத்தானது அல்ல என்றாலும், பலவீனமான அல்லது இயல்புக்கு மாறான  இத்தகைய இரத்த நாளத்தால் தமனியின் சுவரில் ஏற்படும் பலூன் போன்ற இதற்கு சிகிச்சை அளிக்கப்படாவிட்டால், இந்த வீக்கங்கள் பெரிதாகி வெடித்து, உயிருக்கு ஆபத்தான உள் இரத்தப்போக்கை ஏற்படுத்தலாம், (Hemorrhage) அல்லது இரத்த ஓட்டத்தைத் தடுக்கும் இரத்தக் கட்டிகளைத் தூண்டலாம்.

திடீரென கடுமையான தலைவலி, குமட்டல், வாந்தி, குழப்பம், சுயநினைவு இழப்பு  இவை போன்ற பாதிப்புக்கள் அனியூரிசத்தால்  ஏற்படும்.

சில சமயம் எந்த அறிகுறியும் இல்லாமல், அருகிலிருக்கும் நரம்பை அழுத்தும்படி வீக்கம் இருக்கும். அந்த நரம்பு சம்பந்தப்பட்ட உறுப்புக்கள் அப்போது பாதிக்கப்படலாம்.

ஆண்களைவிட பெண்களிடம்தான் இந்த நோயின் தாக்கம் அதிகம் காணப்படுகிறது. வீக்கம் உள்ள பகுதியை நவீன அறுவை சிகிச்சை மூலம் நீக்கிவிட்டால் அப்புறம் நோயாளி நார்மலாக இருக்கலாம்.

4. ஃபிட்ஸ் என்னும் வலிப்பு  எதனால் வருகிறது? காக்காய் வலிப்பு என்பது எதனால் வருகிறது? அதை குணப்படுத்த முடியுமா? அப்போது மூளையில் என்ன நடக்கிறது?

- டி. ரமணி, சென்னை

மூளையில் உள்ள நரம்பு செல்கள் (Neurons) திடீரென, கட்டுப்பாடின்றி மற்றும் அதிக அளவில் மின்சாரச் செயல்பாட்டை (Abnormal Electrical Discharge) உருவாக்கும்போது ஏற்படுவது வலிப்பு (Seizure) ஆகும். வலிப்பு என்பது ஒரு அறிகுறி (symptom) அது தனியாக ஒரு நோய் அல்ல.

காக்காய் வலிப்பு நோய் (Epilepsy) என்பது, மீண்டும் மீண்டும் தானாக ஏற்படும் வலிப்புகளால் வரையறுக்கப் படும் ஒரு நீண்டகால நரம்பியல் நோயாகும். இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட காரணமற்ற (unprovoked) வலிப்புகள், அல்லது எதிர்காலத்தில் வலிப்பு ஏற்படும் அபாயம் அதிகமாக இருக்கும் ஒரு வலிப்பு இருந்தால் Epilepsy எனக் கருதப்படுகிறது.

ஒரு நரம்புக்கும் மற்றோர் நரம்புக்கும் இடையே நடக்கும் தகவல் பரிமாற்றம்தான் நமது அசைவுகள் எல்லாமே. பொதுவாக மூளையில் தூண்டும் நரம்பியல் தகவல் கடத்தி (Excitatory neurotransmitter) Glutamate தடுக்கின்ற தகவல் கடத்தி (Inhibitory neurotransmitter) –GABA (Gamma Aminobutyric Acid) இரண்டிற்கும் சமநிலை இருக்கும்.

வலிப்பு வரும்போது Glutamate சக்தி அதிகரிக்கலாம். அல்லது GABA வின் திறன் குறையலாம். நரம்பு செல்கள் ஒரே நேரத்தில் அதிக மின்சார அலைகளை உருவாக்கும். இதுவே வலிப்பை உண்டாக்குகிறது.

பிறவிக் குறைபாடுகள், பரம்பரை மரபணுக் காரணங்கள், பிரசவ நேரத்தில் குழந்தைக்கு ஏற்படும் ஆக்ஸிஜன் குறைபாடு, இவை தவிர சிலருக்கு காய்ச்சல் காரணமாகவும் வலிப்பு (Febrile Seizure) வரக்கூடும்.

விபத்துக்களால் ஏற்படும் தலைக்காயம், மூளையில் ஏற்படும் தொற்றுக்கள், மரபணு சார்ந்த Epilepsy, மூளைக் கட்டிகள், திடீரென மதுபானம் குடிப்பதை நிறுத்துதல் (Alcohol withdrawal) போன்றவையும் காரணமாகலாம்.

முதியோருக்கு வரும் வலிப்புக்களுக்கு, Stroke, Dementia மூளையில் வரும்  கட்டி போன்ற காரணங்கள் இருந்தாலும்,  தூக்கமின்மை, மனஅழுத்தம், காய்ச்சல், மருந்துகளை தவறவிடுதல், அதிக வெளிச்சம் தரும் விளக்குகள் (Photosensitivity), இரத்த சர்க்கரை அள்வு குறைவது இவையும் வலிப்பைத் தூண்டும் காரணங்களாகிறது.

வலிப்பு நோயில் பல வகைகள் காணப்படுகின்றன. முதல் வகையான Focal Seizure என்பது மூளையின் ஒரு பகுதியில் தொடங்குவது.

Focal Aware Seizure என்ற நிலையில் நினைவு மற்றும் விழிப்புணர்வு இருக்கும். ஆனால் கை அல்லது காலில் துடிப்பு காணப்படும்.

Focal Impaired Awareness Seizure என்னும் வகை வலிப்பில், விழிப்புணர்வு குறைந்துவிடும். எங்காவது வெறித்துப் பார்ப்பது உதடு சப்புதல், கைகளைத் தேய்த்தல் போன்ற செயல்கள் காணப்படும்.

அடுத்ததாக, மூளை முழுவதையும் பாதிக்கும்  Generalized Seizure என்னும் வலிப்பு. உடல் இறுகுதல், கை, கால் துடித்தல், நாக்கு கடித்தல், சிறுநீர் கழித்தல், பின்னர் ஒரு குழப்ப நிலை ஏற்படும். சில விநாடிகள் வெறித்துப் பார்ப்பது (Absence Seizure) இதெல்லாம் காணப்படும்

குழந்தைகளை அதிகம் பாதிப்பது Myoclonic Seizure வகை. அதிர்ச்சி போன்ற குறுகிய நேரத் தசைத்துடிப்புகளை ஏற்படுத்துகிறது. அவை பொதுவாக ஒரு வினாடிக்கும் குறைவாக நீடிக்கும், முதலில்  உடலின் மேற்பகுதியைப் பாதிக்கும்.

நவீன மருத்துவத்தில் வலிப்பு எத்தகையதாக இருந்தாலும் அதைக் கண்டறிய, MRI Brain, EEG (Electroencephalogram), Electroencephalogram  போன்ற கருவிகள் உள்ளன. இவற்றின் மூலம் மூளையின் மின்சார செயல்பாட்டைப் பதிவு செய்யமுடியும்.

epilepsy disease treatment
epilepsy disease treatment

வலிப்பு வந்துவிட்டால், குடும்பத்தினர் செய்ய வேண்டியவை:

நோயாளியை பக்கவாட்டில் படுக்கவைக்கவும். தலையை பாதுகாக்கவும். வலிப்பு எவ்வளவு நேரம் நீடிக்கிறது என்று கவனிக்கவும். வாயில் கரண்டி அல்லது பொருள் வைக்கக்கூடாது.  தண்ணீர் கொடுக்கக்கூடாது. வலுக்கட்டாயமாக பிடிக்கக்கூடாது.

நோயாளிக்கு மருத்துவ முறை, வயது, பாலினம், கர்ப்பம், பிற நோய்கள் ஆகியவற்றைப் பொறுத்து மாறுபடும். 5 நிமிடங்களுக்கு மேல் நீடிக்கும் வலிப்பு அல்லது இடையில் முழுமையாக நினைவு திரும்பாமல் தொடர்ந்து வரும் வலிப்பு ஒரு நரம்பியல் அவசரநிலை. அவசர சிகிச்சை தேவைப்படும்.

Epilepsy நோயாளிகள், மருந்துகளை தவறாமல் எடுத்துக்கொள்ள வேண்டும். தூக்கமின்மை, மதுபானம் தவிர்க்கவேண்டும். நீச்சல், உயரத்தில் வேலை போன்றவற்றில் முன்னெச்சரிக்கை தேவை. மருத்துவர் ஆலோசனை இல்லாமல் மருந்தை நிறுத்தக்கூடாது.

வலிப்பு என்பது மூளையின் தற்காலிக மின்சார கோளாறு. ஆனால் மீண்டும் மீண்டும் காரணமின்றி வலிப்பு ஏற்படுவது Epilepsy எனப்படும் நீண்டகால நரம்பியல் நோயாகும். சரியான மதிப்பீடு மற்றும் பொருத்தமான சிகிச்சையால் சுமார் 70% நோயாளிகளில் வலிப்புகளை முழுமையாக கட்டுப்படுத்த முடியும்.

logo
Kalki Online
kalkionline.com