

நம் உடல் முழு ஆரோக்கியத்துடன் விளங்க அனைத்து வகையான ஊட்டச்சத்துக்களும் சரியான விகிதத்தில் உடலுக்குக் கிடைப்பது அவசியம். அதற்கு நாம் அரிசி, பருப்பு, காய்கறி என பல வகையிலான உணவுகளை உட்கொள்கிறோம். இவற்றில் பல, உடல் நலக்குறைபாடுகளை நீக்கவும் உதவி புரிகின்றன. வயது முதிர்வு காரணமாக உண்டாகும் பார்வைக் குறைபாட்டை நீக்க பிஸ்தா பருப்பு (Pistachios for elders) உதவுவதாக சமீபத்திய ஆய்வுகள் கூறுகின்றன. அது எவ்வாறு என்பதை இப்பதிவில் பார்க்கலாம்.
தினசரி கொஞ்சம், உப்பு சேர்க்காத பிஸ்தா பருப்புகளை உட்கொள்வது உடலின் மொத்த ஆரோக்கியத்தை பாதுகாப்பதுடன், முதியவர்களுக்கு கண்களில் மாக்குலர் டீ ஜெனரேஷன் மற்றும் கேட்டராக்ட்ஸ் போன்ற கோளாறுகள் உண்டாகும் அபாயத்தை குறைக்கவும் உதவி புரிகின்றன.
பிஸ்தாச்சியோக்களில் உள்ள லூடீன் (Lutein) மற்றும் ஸியாக்சாந்தின் (Zeaxanthin) ஆகிய ஆன்டிஆக்ஸிடன்ட்கள் கண்களின் ரெட்டினாவை சுற்றிலும் நிறைந்து, ரெட்டினாவை ஆக்ஸிடேட்டிவ் ஸ்ட்ரெஸ் மற்றும் ப்ளூ லைட்டினால் உண்டாகும் சிதைவிலிருந்து பாதுகாக்கின்றன.
தினசரி பிஸ்தா உட்கொண்டு வருபவரின் இரத்தத்தில், விழித்திரையில் உள்ள மஞ்சள் நிறப்புள்ளியின் அடர்த்தியை அதிகரிக்க உதவும் கரோட்டினாய்டுகளின் அளவு அதிகம் உள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது முதியோர்களின் பார்வை, குறைபாடடைவதை தடுக்க உதவி புரிகிறது.
லூடீன் மற்றும் ஸியாக்சாந்தின் ஆகியவை தீங்கிழைக்கும் ஒளியை வடிகட்டியனுப்பி ரெட்டினாவை பாதுகாக்கின்றன. அவை உற்பத்தி பண்ணும் வைட்டமின் A, ஆக்ஸிடேட்டிவ் ஸ்ட்ரெஸ்ஸினால் கண்களின் செல்களில் கோளாறு உண்டாகாமல் பாதுகாக்க உதவுகிறது.
பிஸ்தா பருப்பில் உள்ள, மோனோ அன்சாச்சுரேடட் மற்றும் பாலி அன்சாச்சுரேடட் போன்ற ஆரோக்கியமான கொழுப்புகள் ஊட்டச்சத்துக்கள் சிறந்த முறையில் உடலுக்குள் உறிஞ்சப்பட உதவி புரிகின்றன. பாலிஃபினோல்ஸ் மற்றும் ஃபிளவனாய்ட்ஸ் போன்ற ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உடலில் உண்டாகும் வீக்கங்கள் மற்றும் ஆக்ஸிடேட்டிவ் ஸ்ட்ரெஸ்ஸை எதிர்த்துப் போராடி, பார்வைத் திறனில் குறைபாடு உண்டாகாமல் பாதுகாக்க உதவுகின்றன. கண்களின் ரெட்டினா மற்றும் லென்ஸ்களுக்கிடையிலான இணைப்பை பாதுகாத்துப் பராமரிக்கவும் செய்கின்றன.
தினசரி முப்பது கிராம், உப்பு சேர்க்காத பிஸ்தா பருப்பை உட்கொண்டு வந்தால் அது உடலில் நன்மை தரும் ஆன்டிஆக்ஸிடன்ட்களின் அளவை சம நிலையில் வைத்துப் பராமரிக்கவும், கண்களைச் சுற்றியுள்ள திசுக்களின் செல்கள் மூப்பின் காரணமாக வலுவிழந்து போவதை தடுக்கவும் உதவும். இதனால் வயோதிகர்களின் பார்வைத்திறன் கூர்மை பெற்று நீண்ட நாள் நிலைத்திருக்கும்.
(முக்கிய குறிப்பு: இந்தத் தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே. மருத்துவ ஆலோசனைக்கு சரியான தகுந்த மருத்துவரை அணுகவும்)