Bruxism - தூக்கத்தில் 'நறநற' ன்னு பற்களைக் கடிக்கும் குழந்தைகள்! என்ன செய்யலாம்?

Bruxism
Bruxism
Published on

இரவு நேரம். வீடு அமைதியா உறங்குது. ஆனா, உங்க குழந்தையோட அறையிலிருந்து ஒரு சத்தம்... ஒரு கவனிக்க வைக்கும் சத்தம்—'நறநற... நறநற...' தூக்கத்துல பற்களை அரைக்குது! இது Bruxism, அதாவது தூக்கத்தில் பல் கடிக்கும் பழக்கம்.

இந்த 'நறநற' சத்தம் உங்களை பதற வைக்குதா? நானும் ஒரு முறை என் உறவுக்காரக் குட்டிப்பையனோட இந்த சத்தத்தைக் கேட்டு “என்ன இது?”னு திகைச்சிருக்கேன். ஆனா, அறிவியல் இதுக்கு ஒரு தெளிவான, சுவாரசியமான பதிலை வைச்சிருக்கு. இந்த 'நறநற' விஷயத்தோட காரணங்களை 'மள மள'ன்னு படிப்போம் வாங்க!

Bruxism-னா என்ன?

குழந்தைகள் தூக்கத்தில் பற்களை இறுக்கி அரைக்குறது அல்லது கடிக்குறது. 3 -12 வயசு குழந்தைகளுக்கு இது ரொம்ப சகஜமான விஷயம். ஒரு ஆய்வு (Journal of Oral Rehabilitation, 2022) சொல்றது, 15-30% குழந்தைகளுக்கு இந்தப் பழக்கம் இருக்கு, ஆனா பெரும்பாலும் இது தற்காலிகமா இருக்கும்னு. சரி, இந்த 'நறநற' சத்தம் எதனால வருது? இதோ, அறிவியல் சொல்லும் காரணங்கள்!

1. மன அழுத்தத்தோட சேட்டை: குழந்தைகளுக்கு ஸ்ட்ரெஸ் இல்லைன்னு நினைச்சா தப்பு! பள்ளியில வீட்டுப்பாடம், நண்பர்களோட சின்ன சண்டை, புது டீச்சரோட பயம் - இவை எல்லாம் அவங்க மனசை குழப்பும். மன அழுத்தம் மூளையில செரோடோனின், டோபமைன் அளவுகளை மாற்றி, தூக்கத்தில் தாடையை அசைக்க வைக்குது (Sleep Medicine Reviews, 2020). உங்க குழந்தை சமீபத்துல கொஞ்சம் பதட்டமா இருக்குதா? இதுவே ஒரு காரணமா இருக்கலாம்.

2. பற்களோட வளர்ச்சி டிராமா: குழந்தைகளோட பற்கள் மாறுற பருவம்—பால் பற்கள் விழுந்து, புது பற்கள் முளைக்கும்போது—பல் அமைப்பு சில சமயம் சரியில்லாம போகலாம். இது Bruxism-க்கு ஒரு டிக்கெட். ஒரு ஆய்வு (Pediatric Dentistry, 2019) சொல்றது, 25% குழந்தைகளுக்கு பல் ஒழுங்கின்மை இதோட தொடர்பு உள்ளது.

மூச்சுக்குழாய் பிரச்சினைகள், மூக்கடைப்பு இவையும் இந்த 'நறநற' சத்தத்துக்கு ஒரு காரணம்.

3. தூக்கத்துல சிக்கல்: தூக்கத்தில் மூச்சு தடைபடுதல் (Sleep Apnea) இருக்குற குழந்தைகளுக்கு Bruxism வர வாய்ப்பு அதிகம். இது மூளையோட ஆக்ஸிஜன் விநியோகத்தை பாதிச்சு, தாடையை அசைக்க வைக்குது (Journal of Clinical Sleep Medicine, 2021). இப்படி ஒரு 30% குழந்தைகளுக்கு தூக்கக் கோளாறுகள் Bruxism-த்துடன் கைகோர்க்குது.

இதையும் படியுங்கள்:
விண்வெளி வணிகம்: வானத்தில் இருக்கும் வைரச் சுரங்கங்கள் இனி யாருக்கு சொந்தம்?
Bruxism

4. மரபணு மற்றும் பிற காரணங்கள்: ஆச்சரியமா இருக்குது, இல்ல? Bruxism மரபணு வழியாவும் வரலாம். அம்மா-அப்பாவுக்கு இந்தப் பழக்கம் இருந்தா, குழந்தைகளுக்கு 50% வாய்ப்பு இருக்கு (Dental Research Journal, 2020). இதோட, அதிகமா சாக்லேட், கோலா (காஃபின்), சில மருந்துகள் (ADHD மருந்துகள்) இதைத் தூண்டலாம்.

என்ன செய்யலாம்?

முதல்ல பதறாதீங்க. பெரும்பாலும் இது குழந்தைகளோட வளர்ச்சியோட ஒரு பகுதி, தானா அடங்கிடும். ஆனா, பற்களுக்கு சேதம், தலைவலி, தாடை வலி இருந்தா, பல் டாக்டரை பாருங்க.

படுக்கைக்கு முன்னாடி கதை சொல்றது, இதமான பாட்டு கேட்க வைக்குறது மன அழுத்தத்துக்கு உதவும். தூக்கக் கோளாறு இருந்தா, ENT டாக்டர் ஒரு வழி சொல்லுவார்.

என் உறவுக்காரக் குட்டிப்பையனுக்கு ஒரு 'மவுத் கார்ட்' பயன்படுத்தி, இப்போ அந்த 'நறநற' சத்தம் ஓய்ஞ்சு போச்சு!

இது ஒரு சின்ன பயணம், ஆனா சரியான பாதையில போனா, உங்க குழந்தையோட புன்னகையைப் பாதுகாக்கலாம்.

இதையும் படியுங்கள்:
சிப்பி காளான் குழம்பு சாப்பிட்டு இருக்கீங்களா மக்களே?
Bruxism

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com