
கடலை அளந்து கப்பல் மூலம் வணிகம் கண்டாயிற்று. வானை அளந்து விமானம் மூலம் வணிகம் செய்தாயிற்று. அடுத்து விண்வெளியை அளக்க வேண்டியது தானே!
அடுத்த பெரிய தாவலுக்கு மனித குலம் தயாராகிக் கொண்டிருக்கிறது. வாய் சவடால் இல்லை. வரப் போகும் நிஜமான வாய்ப்பு தான் விண்வெளி வணிகம். இதில் சவாலும் உண்டு, அபாயங்களும் உண்டு. இவற்றை எதிர்கொண்டு வென்றால் நினைக்கவே முடியாத அளவு கோடானுகோடி அளவு லாபமும் உண்டு. என்ன என்று பார்க்கலாமா?
சந்திரனில் ஹீலியம் இருக்கிறது. ஹீலியத்தை யார் எதிர்காலத்தில் கொண்டிருக்கிறார்களோ அவர்களே செல்வந்தர்கள். அந்த நாடே வளம் கொழிக்கும் நாடு. அஸ்ட்ராய்ட் (Asteroid) எனப்படும் குறுங்கோள்களில் உள்ள தாது வளத்தை கற்பனை செய்தாலே உள்ளம் குளிர்ந்து விடும். அவ்வளவு செல்வம்! வானம் எங்கும் வைரங்கள்! நிஜமான வைரங்கள்!
இவற்றை எல்லாம் பூமிக்குக் கொண்டு வர வேண்டுமென்றால் விண்வெளியில் நீண்ட தூரத்திற்குச் சென்று திரும்பும் விண்வெளிப் பயணத்திற்கான சாதனங்கள் தேவை. குறுங்கோள்களிலும் சந்திரனிலும் சுரங்கங்களைத் தோண்டும் தொழில்நுட்பம் தேவை. அதற்கு உரிய சாதனங்கள் தேவை.
சந்திரனில் சில தளங்களும் தேவைப்படும். ஆராய்ச்சி, தகவல் தொடர்பு இவற்றுக்கெல்லாம் உரிய அலுவலகம் தேவை. இங்கு பணியாளர்களும் வேண்டும். பயணிகளும் இயந்திர சாதனங்களும் மாறி மாறிச் செல்வதற்கான நிலையங்கள் தேவை. இதற்கு குறுகிய தூர ஷட்டில் சர்வீஸ் வேண்டும்.
விண்வெளிக் கலங்கள், சாடலைட்டுகள் தேவை. அதற்கான நிலையங்கள் தேவை. முக்கியமாக இவற்றிற்கான எரிபொருள் வசதி வேண்டும். சுரங்கத்தில் தோண்டி எடுக்கப்பட்ட பொருள்களை வெற்றிகரமாக பூமிக்குக் கொண்டு வர வேண்டும். ஜனத்தொகை அதிகம் இல்லாத இடத்தில் பத்திரமாக இவை இறக்கப்பட வேண்டும். அத்தோடு செலவைக் குறைக்கும் வகையில் சரியான இடத்திலும் இவை சேகரிக்கப்படும் ஸ்டோர் அமைப்புகள் வேண்டும்.
ஒருமுறை மட்டுமே செல்லும்படி விண்வெளிக் கலங்கள் இருக்கக் கூடாது. திருப்பித் திருப்பிச் செல்லும் படி இவை வடிவமைக்கப்பட வேண்டும். உலகெங்கும் பல ஏவுதளங்கள் இதற்கென தேவைப்படும். விமான நிலையங்களைப் போலக் கட்டுக்கோப்பான பாதுகாப்பு ஏற்பாடுகள், தகவல் சாதனங்கள் உள்ளிட்டவை தேவை.
இப்போதே மலைக்க வைக்கும் அளவு விண்வெளியில் குப்பைகள் சுற்றிக் கொண்டிருக்கின்றன. இவை ஒன்றின் மீது ஒன்று மோதினாலும் ஆபத்து; நம் தலையில் விழுந்தாலும் ஆபத்து. அதாவது பல்லாயிரம் பேர் மடிந்து போவர். ஏராளமான டேடா எனப்படும் தரவுகள் பல்வேறு விஷயங்களில் தேவைப்படும். தூரத்திலிருந்து இயக்க வல்ல சுரங்க சாதனங்கள் இருந்தால் தான் தாதுக்களை தோண்டி எடுப்பது பற்றி சிந்திக்கவே முடியும்.
கண்காணிப்பு சாதனங்களும் அதை 24 மணி நேரமும் கண்காணிக்கும் நிபுணர்களும் ஆயிரக்கணக்கில் தேவைப்படுவர். இதற்கென தனி விண்வெளி நிர்வாக மேலாண்மை தேவை. இதற்கான பயிற்சி தேவை.
அது போகட்டும், இவை எல்லாம் செய்ய முடியும் என்று வைத்துக் கொண்டாலும் நாடுகள் ஒன்றுடன் ஒன்று போட்டி போடுவதால் ஏற்படும் பகைமைப் போட்டியிலிருந்து உருவாகும் பிரச்சினைகள், தீவிரவாதிகளின் பிரச்சினைகள் இவற்றை சமாளிக்க முடியுமா?
நேரடியாக மோதாமல் விண்வெளி குப்பைகளை ஏவி விட்டு நாசவேலை செய்பவர்களை அடக்க வேண்டுமே! வருடம் முழுவதும் 24 மணி நேரமும் அவசரகால உதவி சில விநாடிகளில் பறந்து செல்லும்படி இருக்க வேண்டும். என்ன இருந்தாலும் மனித உயிர்கள் விலை மதிக்க முடியாத செல்வம் அல்லவா!
என்ன தலை சுற்றுகிறதா? விண்வெளியில் பறக்காமலேயே தலை சுற்றினால் இந்த பிரச்சினைகளை எல்லாம் யார் தான் தீர்ப்பதாம்?! அட, கப்பல் வணிகம் கண்டோம், விமானத்தில் பறந்தோம். ராக்கெட்டில் பறக்கிறோம். விண்வெளியை வெல்ல முடியாதா என்ன? சவாலைச் சந்திப்போம். வெற்றி கொள்வோம்! வானத்தில் இருக்கும் வைரச் சுரங்கங்கள் இனி நமதே! அவை அனைத்தும் பூமிக்கு வரும். எங்கும் இனி ஜொலி ஜொலிப்பு தான்!