ஏப்பம் தானேன்னு விட்டா அப்புறம் வருத்தப்படுவீங்க! உடனே இதை செக் பண்ணுங்க...

Burp reasons and cure
Burp reasons and cure
Published on

ஏப்பம் என்பது ஒரு இயல்பான உடல் செயல்பாடு. நாம் உண்ணும்போது காற்றையும் சேர்த்து விழுங்குகிறோம். அந்த காற்று இரைப்பையில் சேர்ந்து, அழுத்தம் அதிகரிக்கும்போது ஏப்பம் வழியாக வெளியேறுகிறது.‌ ஆனால், சிலருக்கு அடிக்கடி ஏப்பம் வரும். இது தர்ம சங்கடமான உணர்வை ஏற்படுத்தும். அடிக்கடி ஏப்பம் வருவதற்கு பல காரணங்கள் இருக்கலாம். இந்தப் பதிவில் அடிக்கடி ஏப்பம் வருவதற்கான காரணங்கள், அதைத் தடுக்கக்கூடிய வழிமுறைகள் பற்றி விரிவாகப் பார்க்கலாம். 

அடிக்கடி ஏப்பம்(Burp) வருவதற்கான காரணங்கள்: 

அவசர அவசரமாக சாப்பிடுவது, பேசிக் கொண்டே சாப்பிடுவது, காற்றை அதிகமாக உள்ளே இழுத்து உணவுகளை சாப்பிடுவது, கார்பனேற்றப்பட்ட பானங்கள் அருந்துவது, புகைபிடித்தல் போன்றவை அதிக காற்றை வயிற்றுக்குள் அனுப்பி ஏப்பம் ஏற்பட காரணமாக அமையும். 

அஜீரணம், வயிற்றுப்புண்கள், குடல் வீக்கம் போன்ற செரிமான பிரச்சனைகள் வாயு உற்பத்தியை அதிகரித்து அடிக்கடி ஏப்பத்தை உண்டாக்கும். 

பால், சோயா, கோதுமை போன்ற பொருட்களுக்கு ஒவ்வாமை இருந்தாலும் அடிக்கடி ஏப்பம் வரலாம். 

சில குறிப்பிட்ட மருந்துகள், வலி நிவாரணி மற்றும் அமிலத்தன்மையை குறைக்கும் மருந்துகள் வயிற்று வாயுவை அதிகரித்து ஏப்பம் வர காரணமாக அமையும். 

மன அழுத்தம் மற்றும் பதட்டம் போன்ற காரணங்களாலும் சிலருக்கு அடிக்கடி ஏப்பம் வரும். மேலும், புகை பிடிக்கும்போது அதிகமான காற்றை விழுங்குவதாலும் அடிக்கடி ஏப்பம் வரலாம். 

ஏப்பத்தை தடுக்கும் முறைகள்: 

ஏப்பம் வருவதை தடுக்க உணவுகளை நன்றாக மென்று சாப்பிடுங்கள். சாப்பிடும் போது அதிகமாக பேச வேண்டாம். உடலுக்கு எந்த நன்மையையும் கொடுக்காத கார்பனேற்றப்பட்ட பானங்களைத் தவிர்க்கவும். புகை பிடிக்காதீர்கள். மன அழுத்தம் மற்றும் பதட்டத்தை குறைக்கும் வழிமுறைகளைப் பின்பற்றவும். தேவைப்பட்டால் மருத்துவரின் பரிந்துரைப்படி செரிமான மருந்துகளை எடுத்துக் கொள்ளுங்கள். 

எப்போது மருத்துவரை அணுக வேண்டும்? 

அடிக்கடி ஏப்பம் வருவதுடன் வயிற்று வலி, நெஞ்செரிச்சல், மலச்சிக்கல், உடல் எடை குறைந்து போதல் போன்ற உடல்நல பாதிப்புகள் இருந்தால், உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும். மேலும், நீங்கள் அடிக்கடி ஏப்பம் விடுவதால் உங்களது அன்றாட வாழ்க்கை பாதிக்கப்படுகிறது என்றால் மருத்துவரை கட்டாயம் அணுகுங்கள். ஒருவேளை நீங்கள் கர்ப்பமாக இருக்கும்போது அடிக்கடி ஏப்பம் வந்தால், மருத்துவரை அணுகி ஏப்பம் வருவதற்கான காரணத்தைக் கண்டறிந்து சிகிச்சை பெறுவது நல்லது. 

இதையும் படியுங்கள்:
மாதவிடாய் வலி முதல் கருப்பை கோளாறுகள் வரை... அசோக மரத்தின் மேஜிக்!
Burp reasons and cure

அடிக்கடி ஏப்பம் வருவது ஒரு சாதாரண பிரச்சனைதான் என்றாலும், சில சந்தர்ப்பங்களில் அது மோசமான உடல்நல பாதிப்பின் அறிகுறியாக இருக்கலாம். பெரும்பாலான நேரங்களில் உணவுமுறை மற்றும் வாழ்க்கை முறையில் சில மாற்றங்களை செய்தாலே இந்த பிரச்சனை சரியாகிவிடும் என்பதால், அதிகமாக எதைப் பற்றியும் கவலைப்பட வேண்டிய அவசியமில்லை. எந்த சந்தேகமாக இருந்தாலும் தகுந்த மருத்துவரை அணுகி ஆலோசித்து முடிவெடுப்பது நல்லது. 

-கிரி கணபதி

(முக்கிய குறிப்பு: இந்தத் தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே. மருத்துவ ஆலோசனைக்கு சரியான தகுந்த மருத்துவரை அணுகவும்)

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com