
தற்போது உள்ள பரபரப்பான வாழ்க்கை முறையில் இரவு உணவு எடுத்துக் கொள்வது என்பது தாமதமாக மாறிவிட்டது. மருத்துவர்கள் உணவை தாமதமாக எடுத்துக் கொள்ளக்கூடாது என்று சொன்னாலும் அதை பலராலும் பின்பற்ற முடியவில்லை. இரவு நேரம் கடந்து சாப்பிடுவதால் அது உடலில் ஏற்படுத்தும் பாதிப்புகள் என்னவென்தை விரிவாக இந்தப் பதிவில் காண்போம்.
1. செரிமானப் பிரச்னை:
நம் உடலில் மெட்டபாலிசத்தை ஒழுங்குப்படுத்தும் வேலையை Circadian rhythm தான் செய்கிறது. நம் உடலில் பகலில் ஜீரணமாகும் சக்தி அதிகமாகவும், இரவில் ஜீரணமாகும் சக்தி குறைவாகவும் இருக்கும். எனவே, இரவு தாமதமாக சாப்பிடும் போது உணவு சீக்கிரம் ஜீரணம் ஆகாது. இதனால் சாப்பிட்ட உணவு வயிற்றில் அதிக நேரம் இருப்பது போன்ற உணர்வு, வயிறு உப்புசம், கேஸ் போன்ற பிரச்னைகள் உண்டாகும்.
2. சர்க்கரை நோய்:
ரத்தத்தில் சர்க்கரையின் அளவு சீராக இருக்க இன்சுலின் ஹார்மோன் தேவை என்பது நம் அனைவருக்குமே தெரியும். கணையத்தில் இருந்து சுரக்கும் இன்சுலின் ஹார்மோன் பகல் நேரத்தில் தான் அதிக அளவு சுரக்கும். இரவு ஆக ஆக இன்சுலின் சுரப்பது குறைய ஆரம்பிக்கும்.
எனவே, இரவு உணவுகளை எடுத்துக் கொள்ளும் போது இரத்தத்தில் குல்கோஸின் அளவு அதிகமாகி நீண்ட நேரம் இருக்கும். கணையத்திற்கு ஓய்வேயில்லாமல் இன்சுலின் ஹார்மோன் தூண்டப்படும் போது கணையத்தில் இருக்கும் இன்சுலின் ஹார்மோன் எளிதாக சேதமடைந்து டைப் 2 டையாபிடிஸ் நோய் வருகிறது.
3. உடல் பருமன்:
உடல் பருமன் உண்டாவதற்கு கலோரிகள் அதிகம் நிறைந்த உணவுகள் எடுத்துக்கொள்வதும், கலோரிகள் எரிக்கப்படாமல் இருப்பதுமே உடல் எடை அதிகரிக்க காரணமாக இருக்கிறது. இரவு தூங்கும் போது கலோரிகள் எரிக்கப்படாது. அது உடலில் கொழுப்பாக சேர்ந்துவிடும். அதுவும் visceral fat ஆக அடிவயிற்றிலேயே போய் சேரும். எனவே, இரவில் தாமதமாக சாப்பிடுவதால் உடல் பருமன் மற்றும் தொப்பை இரண்டுமே அதிமாகும்.
4. மாரடைப்பு:
இரவு நேரம் கடந்து சாப்பிடுவதால் உடலில் கொழுப்புகள் அதிகரிப்பது மட்டுமில்லாமல் ரத்தத்தில் LDL, triglycerides போன்ற கெட்டக் கொழுப்புகளும் அதிகரிக்கும். இதோடு ரத்தக்குழாயில் Inflammation அதிகரிக்கும். இந்த இடங்களில் கெட்டக் கொழுப்புகள் படிந்து அடைப்புகளை உண்டாக்கும். இதனால் மாரடைப்பு போன்ற அபாயகரமான பிரச்னைகள் உண்டாகும்.
(முக்கிய அறிவிப்பு: இக்கட்டுரையில் உள்ள தகவல்கள், பல்வேறு செய்திகளின் தொகுப்பாக மட்டுமே வழங்கப்படுகின்றன. இவை மருத்துவ நிபுணர்களின் ஆலோசனைகள் அல்ல. உடல்நலம் தொடர்பான எந்தவொரு சந்தேகத்துக்கும் பிரச்னைக்கும், அவசியம் மருத்துவரை அணுகவும்.)