மனிதர்களைப் போலவே செல்லப் பிராணிகளுக்கும், குறிப்பாக நாய்கள் மற்றும் பூனைகளுக்கும் நீரிழிவு நோய் வரலாம். இது ஒரு பொதுவான நாளமில்லாக் கோளாறு ஆகும். செல்லப் பிராணிகளுக்கு நீரிழிவு நோய் ஏன் வருகிறது? அதற்கான காரணங்கள் மற்றும் அதைத் தடுப்பதற்கான சாத்தியமான வழிகளைப் பற்றி செல்லப் பிராணிகளின் உரிமையாளர்கள் அவசியம் தெரிந்துகொள்ள வேண்டிய விஷயமாகும்.
செல்லப் பிராணிகளுக்கு நீரிழிவு நோய் ஏன் வருகிறது?
செல்லப் பிராணிகளுக்கு ஏற்படும் நீரிழிவு நோய் போதுமான இன்சுலின் உற்பத்தி அல்லது இன்சுலினை திறம்பட பயன்படுத்த உடலால் இயலாமல் போகும்போது ஏற்படுகிறது. மனிதர்களைப் போலவே இவற்றிற்கும் வகை 1 நீரிழிவு நோய் மற்றும் வகை 2 நீரிழிவு நோய் ஏற்படலாம்.
வகை 1 நீரிழிவு நோய், கணையம் இன்சுலினை சிறிதளவு உற்பத்தி செய்யும்போது நிகழ்கிறது. குறிப்பாக, நாய்களுக்கு இது ஏற்படுகிறது. வகை 2 நீரிழிவு நோய் பூனைகளுக்கு அதிகமாக பரவுகிறது. அவற்றிற்கு இயல்பான அல்லது அதிக உற்பத்தி இருந்தபோதும் இன்சுலினை எதிர்க்கிறது.
செல்லப் பிராணிகளுக்கு நீரிழிவு நோய் ஏற்படுவதற்கான காரணங்கள்:
1. உடல் பருமன்: அதிகப்படியான உணவு உட்கொள்ளல் மற்றும் உடல் இயக்கம் இன்றி சுறுசுறுப்பு இல்லாமல் இருக்கும்போது அதிகப்படியான கொழுப்பு வயிற்றைச் சுற்றி சேர்கிறது. இது இன்சுலின் எதிர்ப்புக்கு வழிவகுக்கிறது.
2. மரபியல்: சில வகையான மினியேச்சர், ஷ்னாசர்ஸ், பூடில்ஸ் மற்றும் டச்ஷண்ட்ஸ் போன்ற நாய்கள் இனங்களும், பர்மிஸ் போன்ற பூனை இனங்களும் பாதிக்கப்படுகின்றன.
3. வயது: வயதான செல்லப் பிராணிகளுக்கு உடல் செயல்பாடு குறைவதன் காரணமாகவும் வளர்சிதை மாற்றங்களின் காரணங்களாலும் நீரிழிவு நோய் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம்.
4. ஹார்மோன் கோளாறுகள்: சில பிராணிகளுக்கு கணைய அழற்சி போன்ற நிலைமைகள் இன்சுலின் உற்பத்தியை சீர்குலைத்து நீரிழிவுக்கு வழிவகுக்கிறது.
5. மோசமான உணவு முறை: கார்போஹைட்ரேட்டுகள் மற்றும் சர்க்கரை அதிகம் உள்ள உணவுகள் உடல் பருமன் மற்றும் இன்சுலின் எதிர்ப்பிற்கு பங்களிக்கும். குறைந்த தரமற்ற வணிக செல்லப்பிராணி உணவுகளில் போதுமான ஊட்டச்சத்துக்கள் இல்லாமல் இருக்கலாம்.
6. மருந்துகள்: கார்டிகோ ஸ்டீராய்டுகள் போன்ற சில மருந்துகள் இரண்டாம் நிலை நீரிழிவு நோய்க்கு வழி வகுக்கிறது.
தடுப்பதற்கான தீர்வுகள்:
எடை மேலாண்மை: ஆரோக்கியமான உணவுகளை செல்லப் பிராணிகளுக்கு அளிக்க வேண்டும். அவற்றின் வயது, அளவு மற்றும் செயல்பாட்டு நிலைக்கு ஏற்ற சமச்சீரான உணவு, உயர்தர குறைந்த கார்ப் உணவுகள் போதுமானவை. செல்லப்பிராணிகளின் எடையை கண்காணித்து அவ்வப்போது கால்நடை மருத்துவரை அணுகி ஆலோசனை கேட்க வேண்டும்.
வழக்கமான உடல் செயல்பாடுகள்: செல்லப்பிராணிகளை வழக்கமான உடல் செயல்பாடுகளில் ஈடுபடுத்த வேண்டும். நடைப்பயிற்சி, விளையாட்டு மற்றும் ஓடியாடி சுற்றித் திரிதல் போன்றவை அவற்றை சுறுசுறுப்பாக வைத்திருக்கும்.
வழக்கமான பரிசோதனைகள்: வருடாந்திர அல்லது அரையாண்டு கால்நடை பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டும். வழக்கமான இரத்தப் பரிசோதனைகள், குளுக்கோஸ் அளவையும் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் தீர்மானிக்கலாம்.
நீரிழிவு நோய் உள்ள செல்லப்பிராணிகளுக்கு இன்சுலின் சிகிச்சை தேவைப்படலாம். சரியான அளவு மற்றும் அட்டவணையை நிறுவ கால்நடை மருத்துவரை கலந்து ஆலோசிக்க வேண்டும். அவற்றுக்கான நீரிழிவு நோயின் அறிகுறிகளை புரிந்துகொள்ள வேண்டும். அடிக்கடி சிறுநீர் கழித்தல், நீர் அருந்துதல், எடை இழப்பு, சோம்பல் போன்றவை இதன் அறிகுறிகள் ஆகும். சரியான உணவு மற்றும் கண்காணிப்பு மூலம் செல்லப் பிராணிகளின் நீரிழிவு நோயை சமாளிக்க முடியும். ஆரம்பகால கண்டறிதல் மிகவும் முக்கியமானது.