

இரத்த தானம் செய்வது உயிர்களைக் காக்கும் உன்னதப் பணியாகும். நல்ல ஆரோக்கியத்துடன் இருக்கும் மக்கள் எப்போது வேண்டுமானாலும் இரத்த தானம் செய்யலாம். இரத்தம் தானமாக 350 மிலி வழங்கப்படும்போது, அது சிவப்பணுக்கள், வெள்ளையணுக்கள், தட்டணுக்கள் எனப் பிரிக்கப்பட்டு, 3 பேரின் உயிரைக் காப்பாற்றப் பயன்படுகிறது. மேலும் இரத்தம் தானம் செய்பவரின் உடல் 24 மணி நேரத்திற்குள் அதை ஈடு செய்துவிடும். ஒருவர் 3 மாதங்களுக்கு ஒருமுறை இரத்த தானம் செய்யலாம் என்று கூறப்படுகிறது.
18 முதல் 65 வயதுக்குட்பட்ட ஆண்களும், பெண்களும் இரத்த தானம் செய்யலாம். பெண்களும் இரத்த தானம் செய்யலாம் என்றாலும் சில நிபந்தனைகளுக்கு உட்பட்டு, ஆரோக்கியமாக இருக்கும் எந்தவொரு பெண்ணும் இரத்த தானம் செய்ய தகுதியுடையவர்.
சிலர் மாதவிடாய் காலத்தில் பெண்கள் ரத்த தானம் செய்யக்கூடாது என்று கூறுவதற்கு, 'இவ்வாறான அச்சங்கள் கட்டுக்கதைகளே' என டாக்டர்கள் விளக்குகின்றனர்.
* மாதவிடாய் காலத்தில் இரத்த தானம் செய்வது முற்றிலும் பாதுகாப்பானது.
* தானம் செய்யும் ரத்தம் வேறு, மாதவிடாய் ரத்தம் வேறு. இதனால் எந்த பாதிப்பும் ஏற்படாது.
* மாதவிடாயின் சமயத்தில் பெண்களுக்கு சராசரியாக 30-80 மிலி இரத்தம் மட்டுமே வெளியேறுகிறது. ஆனால் இரத்த தானத்தின் போது சுமார் 500 மிலி இரத்தம் எடுக்கப்படுகிறது.
* இரத்த தானம் அளிக்க ஹீமோகுளோபின் 12.5g/dL-க்கு மேல் இருக்க வேண்டும்
* பெண்களிடம் இரத்தம் தானமாக பெறப்படும் போது, ஒருவரின் ஹீமோகுளோபின் அளவு மற்றும் ஒட்டுமொத்த உடல்நலனைப் பொறுத்தே தகுதி தீர்மானிக்கப்படுகிறதே தவிர, மாதவிடாய் சுழற்சியைப் பொறுத்து அல்ல.
* இரத்த தானம் செய்தால் Cramps அதிகமாகாது. ஆனால், Cramps, ரத்தப்போக்கு அதிகம் இருந்தால் தானத்தை தவிர்க்கலாம்.
* மிதமான இரத்தப்போக்கு இருக்கும் பெண்களுக்கு இரத்த தானம் செய்யும் போது எந்தப் பிரச்சனையும் ஏற்படாது. அதுவே அதிகளவு இரத்தப்போக்கு இருக்கும் பெண்கள் மருத்துவரின் அறிவுரையின் படி இரத்த தானம் செய்யலாம்.
* சில பெண்களுக்கு மாதவிடாய் காலங்களில் அதிளவு சோர்வு இருக்கும். அப்படிப்பட்டவர்கள் மாதவிடாய் காலம் முடிந்த பின்னர் அல்லது மருத்துவரின் ஆலோசனை பெற்று இரத்த தானம் செய்யலாம்.
* மாதவிடாய் காலத்தில் தானமாக பெறப்படும் இரத்தம் அசுத்தமானது என்ற மூடநம்பிக்கை பலரிடையே நிலவுகிறது. ஆனால் தானமான பெறப்படும் இரத்தம் நரம்புகளில் இருந்து மட்டுமே எடுக்கப்படுகிறது. கருப்பையில் இருந்து அல்ல என்பதால் மாதவிடாய் சமயத்தில் தானமாக பெறப்படும் இரத்தம் சுத்தமானதே.
மாதவிடாய் சுழற்சி என்பது பெண்களுக்கு மாதந்தோறும் ஏற்படும் ஒரு இயற்கையான நிகழ்வாகும். அதற்கும் இரத்த தானம் செய்வதற்கும் சம்பந்தமில்லை. இரத்த தானம் செய்வது உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. அதனால் உடல் ஆரோக்கியமான பெண்கள் 3 மாதத்திற்கு ஒருமுறை எப்போது வேண்டுமானாலும் இரத்த தானம் செய்யலாம்.
கூடுதல் தகவல்:
* கர்ப்பிணிப் பெண்கள், பாலூட்டும் தாய்மார்கள் மற்றும் இரத்த சோகை உள்ளவர்கள் இரத்த தானம் செய்யக்கூடாது.
* புதிதாக பச்சை குத்திய (டாட்டூ) பிறகு மூன்று மாதங்கள் காத்திருந்து மருத்துவரின் ஆலோசனையின் பேரில் இரத்த தானம் செய்யலாம். இந்த காத்திருப்பு காலம், டாட்டூ குத்தியபோது ஏதேனும் தொற்று (ஹெபடைடிஸ், எச்ஐவி போன்றவை) ஏற்பட்டிருந்தால், அதன் முடிவுகள் இரத்தப் பரிசோதனையில் தெரியவரும் வரை பாதுகாப்பாக இருக்க உதவுகிறது.