மூச்சினை பட்டினி போட முடியுமா? அப்படி முடிந்தால்?

Meditation
Can you starve the breath? Is that possible?

நம் உடலும் மனமும் வாழ்க்கையும் நல்ல விதமாகப் போவதற்கு நம் முன்னோர்கள் நான்கு பட்டினிகளைக் கடைபிடிக்க அறிவுறுத்தி இருக்கிறார்கள். அவை என்னவென்று பார்ப்போம்.

ஆரஞ்சு பழத்தின் மேல் தோலியை உரித்தால் உள்ளே பின்னிப்பிணைந்த நரம்புகள் போல் வெள்ளையாய் ஒன்று இருக்குமே.. அது போலத்தான் நம் உடல்நலமும் மனநலமும் நலவாழ்வும் ஒன்றோடொன்று தொடர்புடையவை. ஒன்றின் நலன் மற்றதையும் நலமாக்கும்; ஒன்றின் கேடு மற்றவற்றையும் கெடுக்கும்.

உடலும் மனமும் வாழ்க்கையும் நன்றாக இருக்க வேண்டுமா? இந்த நான்கு பட்டினிகளைப் பயிற்சி செய்து பாருங்கள்.

1. Langhanam of Stomach (வயிற்றைப் பட்டினி போடுதல்):

பட்டினி என்று சொன்னாலே நாம் புரிந்து கொள்வது இந்த முதல் வகை பட்டினியைத்தான். ஏகாதசியோ, ஈஸ்டர் நோண்போ, ரமலானோ. எந்த மதமாக இருந்தாலும் சரி, இடையிடையே வயிற்றைப் பட்டினி போட சில நாட்களை குறிப்பிட்டுச் சொல்கின்றன அல்லவா? மருத்துவமும் கூட இன்டர்மிட்டென்ட் ஃபாஸ்டிங் இருக்கப் பரிந்துரைக்கிறதே. லங்கணம் பரம ஔஷதம் என்பார்கள். பட்டினி போடுவதே ஆகச்சிறந்த மருந்து. வயிற்றுக்கு மாதம் ஓரிரு முறை விடுமுறை அளிப்பது மாயாஜாலம் போல் நம் உடலில் பல நல்ல வளர்சிதை மாற்றங்களை ஊக்குவிப்பதாக ஆய்வுகளில் தெரியவந்திருக்கிறது. Detox எனப்படும் விஷமுறிவு இடையிடையே வயிற்றைப் பட்டினி போடுவதால் உந்தப்படுகிறது. வயிற்றைப் பட்டினிபோடுதல் நம் உடலுக்கு நலம் பயக்கும் முதலாவது லங்கணம்.

2. Langhanam of Breath (மூச்சைப் பட்டினி போடுதல்):

அதாவது பிராணாயாமம், மூச்சுப்பயிற்சி, யோகா போன்றவை. உலகில் உள்ள ஜீவராசிகளுள் அதிக ஆண்டுகள் ஆயுள் கொண்டது கடல் ஆமை. இந்தக் கடல் ஆமை ஒரு நிமிடத்துக்கு நான்கிலிருந்து ஆறு முறை தான் சுவாசிக்குமாம். ஒரு நிமிடத்தில் நாம் சுவாசிக்கும் எண்ணிக்கையைத் தொடர் பயிற்சிகள் செய்து எந்த அளவுக்குக் குறைத்துக் கொள்கிறோமோ அந்த அளவுக்கு அது நம் ஆயுள் நீட்டிப்பில் உதவும் என்கிறார்கள் விஷயம் தெரிந்தவர்கள். ஒரு நிமிடத்திற்குள் நீங்கள் எத்தனை முறை சுவாசிக்கிறீர்கள் என்று எண்ணிவிட்டீர்களா.

மூச்சுப் பயிற்சி, பிராணயாமம் போன்றவற்றைச் செய்து நம் மூச்சைப் பட்டினி போடுவதற்கு முயன்றால் அது நம் வாழ்நாட்களை அதிகரிக்கச் செய்யும். ஆழ்ந்த சுவாசம் என்கிற பயிற்சியான பிராணாயாமம் நம் உடலின் ஒவ்வொரு செல்லுக்கும் பிராணவாயு சென்று சேர உதவுவதனால் செல் இறப்பு குறைந்து வயதாகும் ப்ராஸெஸ் மெதுவாகிறது என்கிறார்கள். ஒரு குறிப்பிட்ட தோரணையில் உடலை நிறுத்தி மூச்சு உள்ளிழுத்து வெளிவிடும் யோகப்பயிற்சிகள் உடல்நலனுக்கும் மனநலத்துக்கும் பெரிதும் உதவுபவை. மூச்சடக்கி நீந்துவதும் இதில் அடக்கம். மொத்தத்தில் மூச்சினைப் பட்டினி போட்டுப் பழக்கிவைத்தல் நலவாழ்வை நோக்கி நம்மை அழைத்துப்போகும் ஒன்றாகும்.

3. Langhanam of Words (மௌனம்):

வயிற்றுக்கும் மூச்சுக்கும் பட்டினி போடக் கற்ற பின்பு, அடுத்தபடியாக வார்த்தைகளைப் பட்டினி போடப் பயிற்சி செய்ய வேண்டுமாம். முதல் இரு லங்கணங்களைக் கூட எப்படியோ முட்டி மோதி கடைபிடித்துவிடலாம். ஆனால் இது கொஞ்சம் கடினம் தான் என்கிறீர்களா? இதை கடைபிடிக்கத் துவங்குங்களேன். என்னால்தான் உலகமே இயங்குகிறது, நான் பேசிக்கொண்டே இருப்பதால் தான் சூரியன் உதித்து விழுகிறது, எல்லாம் சரியாக நடக்கிறது என்ற மாயைக்குள் சிக்கியிருக்கும் உங்களுக்குச் சட்டென்று சுதந்திரம் கிடைத்துவிடும்.

மாதம் ஒரு நாள் மௌன‌விரதம் என்று ஆரம்பியுங்களேன். மெல்ல மெல்ல அது உங்களுக்குச் அள்ளித்தரும் நன்மைகளை உணர்ந்து வாரம் ஒருமுறை என்று ஆரம்பிப்பீர்கள். பிறகு அதுவே உங்கள் பழக்கமாகி குணமாகவே மாறிவிடும். சொல்வது வீண் என்று தெரிந்தும் அறிவுரை சொல்வதை நிறுத்திவிடுவீர்கள். குறை கூறுவதும் புறம் பேசுவதும் காணாமல் போய்விடும். அடுத்தவர் மனம் புண்படும் பேச்சுகள் பேசுவது குறைந்துவிடும். எத்தனை ஆற்றலைப் பேசிப்பேசியே வீணாக்கியிருக்கிறோம் என்று புரியும்.

பேச்சு ஒரு வெளியீடு திறன். தெரிந்ததைத்தான் உங்களால் பேச முடியும். உங்கள் பேச்சினால் நீங்கள் யார் என்று எதிராளி எளிதாய்க் கண்டுபிடித்துவிடுவார். வார்த்தைகளைப் பட்டினி போடப் போட அவற்றின் அருமை புரிந்து நல்லதுக்காக மட்டுமே பயன்படுத்த ஆரம்பிப்பீர்கள். வார்த்தை விரயம் குறையும். நிம்மதி கிட்டும். தேடப்படுவீர்கள். பேசிப் பேசி வீணான நேரத்தைக் கண்டுபிடித்து அதைப் பயனுள்ள விதத்தில் திருப்பிக்கொள்வீர்கள். மனப்பான்மையில் பெருத்த முன்னேற்றம் தர வல்லது இந்த லங்கணம்.

இதையும் படியுங்கள்:
யோகா செய்யும் முன் சாப்பிட வேண்டிய ஏழு வகையான உணவுகள்!
Meditation

4. Langhanam of Thoughts. (எண்ணங்களைப் பட்டினி போடுதல்):

இந்த பட்டியலை நிறைவு செய்கிறது எண்ணங்களை நிறுத்திப் பட்டினி கிடப்பது. எந்த எண்ண ஓட்டமும் இல்லாமல் வெற்று நிலையில் மனதை வைப்பது. மேற்சொன்னவைகளை விட எத்தனை கடினம் இந்த நான்காவது? குரங்கு மனம் இந்தப் பட்டினிக்கு ஒத்து வருமா? நொடிப் பொழுதில் நூறு சிந்தனைகள் சூழ்ந்துகொள்ளும் மனித மனத்தினைக் கட்டுப்படுத்தி காற்றில்லா வெற்றிடம் போல தினமும் சில நிமிடங்களாவது இருப்பது நம் மனநலத்துக்கு வியக்கத்தக்க நன்மைகளைச் செய்யகூடியதாகும். பிரபஞ்சத்தில் அதிகம் இருப்பது வெற்றிடம்தான். வெற்றிடமே பிரபஞ்ச சக்தி. மனதை வெற்று நிலையில் நிறுத்துவது நமக்குள்ளிருக்கும் சக்தியை அதிகரித்துவிடவல்லது. தவம் போன்றதாகும் இந்த லங்கணம்.

தொடர் பயிற்சிகளால் இந்த நான்கு லங்கணங்களையும் சாத்தியமாக்கினால் நலவாழ்வு கேரண்டிதான். உடல் நலமாகி, மனம் பக்குவமாகி, நடத்தை ஒழுங்காகி ஞானநிலை அடையலாம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com