
பருவநிலை மாற்றத்தால் அதிகம் பாதிக்கப்படுவது குழந்தைகள் தான். காரணம் எதிர்ப்பு சக்தி குறைபாடு. எவ்வளவுதான் பார்த்து பார்த்து சத்தான பொருட்களை தந்தாலும், ஏதேனும் சிறு சிறு உடல்நல பாதிப்பு குழந்தைகளுக்கு இருப்பது இயல்பானதே. குழந்தைகள் வளர வளர எதிர்ப்பு சக்தியின் அளவு கூடும் போது இது போன்ற உடல் நல பாதிப்புகள் குறையும் வாய்ப்பு உண்டு .
அதிலும் காய்ச்சல் வந்து விட்டால், அவர்கள் துவண்டு போய்விடுவார்கள். அப்போது என்ன செய்வது என்று ஒரு சிலருக்கு புரியாது. 'ஐயோ பாவம்! குழந்தை இப்படி இருக்கிறதே' என கவலைப்படுவார்கள். குழந்தைகளுக்கு காய்ச்சல் ஏற்பட்டால் என்ன செய்யலாம் அது பற்றிய ஒரு சிறு விளக்கப் பதிவு தான் இது.
பொதுவாக காய்ச்சல் என்பதே உடலில் புகுந்த கிருமிகளை கொல்வதற்காக இயற்கை உண்டாக்கும் ஒரு பாதுகாப்பு முறை என்கிறது மருத்துவம். எனவே, குழந்தைகளுக்கு காய்ச்சல் வந்த முதல் இரண்டு நாட்களில் மாத்திரைகளை கொடுத்தாலும், காய்ச்சல் குறையுமே தவிர முழுவதும் நீங்காது. அது போன்ற சமயங்களில் மேலும் அதிக மருந்துகள் கொடுத்து பக்க விளைவுகளை உண்டாக்குவதை தவிர்க்க வேண்டும்.
அதிக காய்ச்சல் என்றால் குழாய் தண்ணீரில் துணியை நனைத்து தலை, உடல் போன்ற பகுதிகளில் ஒத்தடம் கொடுத்தால் காய்ச்சல் குறையும். பொதுவாகவே சிறு குழந்தைகளுக்கு முன் நெற்றி சற்று சூடாகத்தான் இருக்கும். எனவே, இரண்டு வயதுக்குட்பட்ட குழந்தைகளை நெற்றியில் தொட்டு பார்த்து உடனே காய்ச்சல் என பயப்பட வேண்டாம்.
அதேபோல் குழந்தைகளுக்கு காய்ச்சல் இருக்கும் போது சரியாக பசி இருக்காது. செரிமானமும் சற்று குறைவாகத்தான் இருக்கும். எனவே, எளிதில் ஜீரணம் ஆகக்கூடிய திரவ நிலை ஆகாரம் கொடுப்பதே நல்லது.
இன்னொரு விஷயம்... காய்ச்சல் ஏற்படும் போது குளிர் உண்டாவது இயற்கை. இதுவும் காய்ச்சலுக்கு ஏற்ப உடல்நிலை செய்யும் ஒரு தற்காப்பு ஏற்பாடு தான். ஒரு சிலர் ஸ்வெட்டர் அணிவார்கள். இது தவறு. ஏனெனில், ஸ்வெட்டரின் வேலையே உடலில் சூடு வெளியேறாமல் உள்ளே பாதுகாத்து வைப்பதுதான். எனவே, காய்ச்சல் குறைந்தாலும் உடலின் சூடு வெளியேறாமல் தடுக்கப்படுவதால் பாதிப்பு அதிகமாகுமே தவிர குறையாது.
மூன்று நாட்களுக்கு மேல் காய்ச்சல் நீடித்தால், மீண்டும் ஒருமுறை மருத்துவரிடம் சென்று நோயின் தாக்கம் குறைந்துள்ளதா அல்லது தொடர்ச்சியாக தொடர்நிலை பாக்டீரியாவின் தாக்கம் வந்துள்ளதா அல்லது சிறுநீர் மண்டல நோய் தாக்கம் ஏற்பட்டுள்ளதா? என அறிந்து அதன் பிறகு அவர் தரும் மருந்துகளை பின்பற்றலாம்.
ஐந்து அல்லது ஆறு நாட்களுக்கு மேல் காய்ச்சல் தாக்கம் குறையாமல் இருந்தாலோ அல்லது தொடர்ந்து நீடித்தாலோ ரத்தப் பரிசோதனை செய்வது மிகவும் நல்லது.
காய்ச்சல் இருக்கும் போது குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பாமல் ஓய்வில் இருக்க செய்வது அவர்களுக்கு நல்லது உடன் பயிலும் குழந்தைகளுக்கும் நல்லது . ஏனெனில், குழந்தைகளின் பகிர்ந்து கொள்ளும் பழக்கத்தினால் காய்ச்சல் விரைவாக பரவும் வாய்ப்பு அதிகம்.
காய்ச்சல் குறையும் போது உடல் சூடு நீராவியாக வெளியே வரும். வெளியே செல்வதால் நிறைய தண்ணீர் கொடுக்க வேண்டும். இல்லையெனில் நீர் கடுப்பு உண்டாகும் வாய்ப்புகள் அதிகம். தற்போது நீரினால் கிருமிகள் பரவும் வாய்ப்பு உள்ளதால் கொதிக்க வைத்து ஆறு வைத்த நீரை தருவது நல்லது. இப்படி அடிப்படை விஷயங்களை கடைபிடித்தால், காய்ச்சல் கண்டு கவலைப்பட வேண்டியதில்லை.
(முக்கிய குறிப்பு: இந்தத் தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே. மருத்துவ ஆலோசனைக்கு சரியான தகுந்த மருத்துவரை அணுகவும்)