
புற்றுநோய். இந்த வார்த்தையைக் கேட்டு பயப்படாத மனிதர் எவரும் இந்த உலகில் இல்லை. புற்றுநோய் பற்றிய ஆராய்ச்சிகள் உலகெங்கிலும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
நமது உடலானது கோடிக்கணக்கான செல்களால் ஆனது. செல்கள் நன்றாக இயங்க வேண்டுமானால் அவற்றின் அமைப்பானது சரியாக இருக்க வேண்டும். செல்லின் மையக்கருவில் திடீரென மாற்றம் ஏற்பட்டு செல்கள் அளவிற்கதிகமாக உற்பத்தியாகும் போது புற்றுநோய் உண்டாகிறது. பாதிப்படைந்த இத்தகைய செல்கள் குறுகிய காலத்தில் அதிக அளவில் பெருகத் தொடங்கிவிடுகின்றன. இதன் காரணமாக செல்லின் மையக்கரு மாற்றமடைந்து அதனால் சரியாக செயல்பட இயலாமல் போய்விடுகிறது.
இவ்வாறு அளவுக்கு அதிகமாக பெருகத் தொடங்கும் செல்கள் இயங்கத் தேவையான சக்தியை நம் உடலில் இருந்து மெல்ல மெல்ல எடுக்கத் தொடங்குகின்றன. இதனால் நமது உடல் எடையும், நோய் எதிர்ப்புசக்தியும் நாளடைவில் குறையத் தொடங்கி தொற்று நோய்கள் எளிதாக நம் உடலைத் தாக்குகின்றன. இத்தகைய செயல்களின் காரணமாக நமது உடலானது மிகவும் நலிவடைந்து நாளடைவில் மரணம் சம்பவிக்கிறது.
புற்றுநோயை ஆரம்ப கட்டத்தில் அடையாளம் காண்பது சற்று கடினம் என்றாலும், அது நமது உடலைத் தாக்கத் தொடங்கிய உடன் சில அசாதாரணமான அறிகுறிகள் நிச்சயம் தோன்றும். தொடர்ந்த, கட்டுப்படுத்த இயலாத இருமல், திடீரென்று உடல் எடை குறைதல், அளவிற்கு அதிகமான சோர்வு, உடலில் தோன்றும் வலியற்ற கட்டிகள். இதில் ஏதேனும் ஒரு விஷயம் உங்களைத் தாக்கினால் தாமதிக்காமல் உடனடியாக மருத்துவரை அணுகி ஆலோசிக்க வேண்டும். சென்னையில் அடையாறு மற்றும் காஞ்சிபுரத்தில் அறிஞர் அண்ணா புற்றுநோய் ஆராய்ச்சி மையம் என மிகச்சிறந்த புற்றுநோய் மருத்துவமனைகள் உள்ளன.
காற்று மாசு மற்றும் புகைபிடித்தல், புகையிலை, மூக்குப்பொடி உபயோகித்தல் போன்றவை புற்றுநோயை எளிதாக தோற்றுவிக்கக்கூடிய காரணிகளாகும். பான்பராக் மற்றும் புகையிலையைத் தொடர்ந்து உபயோகிப்பவர்களை வாய் மற்றும் தொண்டைப் புற்றுநோய் எளிதாகத் தாக்கிவிடுகிறது.
தரமற்ற பிளாஸ்டிக் கப் மற்றும் மெழுகு பூசப்பட்ட பேப்பர் கப் முதலானவற்றில் அடிக்கடி சூடான பானங்களை அருந்துபவர்கள் புற்றுநோய் தாக்கத்திற்கு எளிதில் ஆளாகக்கூடும். தரமற்ற பிளாஸ்டிக் கப்புகள் மற்றும் பாலிதீன் பைகளில் உள்ள வேதிப்பொருட்கள் புற்றுநோயினைத் தோற்றுவிக்கும் தன்மை கொண்டவை.
எனவே தரமற்ற பிளாஸ்டிக் மற்றும் பேப்பர் கப்புகளில் தேநீர் அருந்தும் வழக்கத்தை உடனே கைவிடவேண்டும். உணவுவிடுதிகளுக்குச் செல்லும்போது மறக்காமல் பாத்திரங்களைக் கொண்டு சென்று உணவுகளை அதில் வாங்கிக் கொண்டு வரும் வழக்கத்தை மேற்கொள்ளுங்கள். இதன் மூலம் புற்றுநோய் தாக்குதலிலிருந்து நாம் தப்பிக்கக் கூடும்.
அதிகாலை தவறாமல் நடைபயிற்சியினை மேற்கொள்ளுங்கள். அடிக்கடி கொய்யா, நெல்லிக்காய், வாழைப்பழம் போன்ற பழங்களை உட்கொள்ளுங்கள். முடியும்போதெல்லாம் எலுமிச்சை சாற்றை அருந்தப் பழகிக் கொள்ளுங்கள். எலுமிச்சை சாறு இரத்தத்தை சுத்தப்படுத்தி புத்துணர்ச்சியை அளிக்கும் வல்லமை மிக்கது. எலுமிச்சை சாற்றில் உள்ள வைட்டமின் சி புற்றுநோயை வராமல் தவிர்க்கும் ஆற்றல் உடையது.
பூண்டு, திராட்சை, கேரட், பூசணி, சோளம், தக்காளி, ஆரஞ்சுப்பழம், குடைமிளகாய், வால்நட் போன்ற உணவுகளில் ஆன்டிஆக்சிடெண்ட்ஸ் சத்துக்கள் நிறைந்துள்ளன. இத்தகைய உணவுகளை முடியும்போதெல்லாம் சாப்பிடுங்கள். தற்காலத்தில் ஆப்பிள் மீது அவை நீண்ட நாட்களுக்கு கெடாமல் பாதுகாக்க மெழுகு பூசப்படுகிறது. இதன் மூலம் கல்லீரல் புற்றுநோய் உண்டாகும் என்று கண்டுபிடித்திருக்கிறார்கள்.
பச்சைக்காய்கறிகளில் காணப்படும் குளோரோபில் நிறமிகளுக்கு செல்களின் மாற்றத்தை கட்டுப்படுத்தித் தடுக்கும் ஆற்றல் உண்டு. காய்கறிகளில் பீட்டா கரோட்டின் என்ற சத்தும் நிறைந்துள்ளது. இவற்றுக்கு புற்றுநோயை வராமல் தடுக்கும் ஆற்றல் நிறைய உண்டு.
உப்பில் ஊறவைத்த பொருட்களை உண்பதாலும் புற்றுநோய் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம். ஊறுகாய், கருவாடு போன்ற உணவு வகைகளை கூடுமானவரை தவிர்த்தல் நல்லது. ஆசைப்பட்டால் எப்போதாவது எடுத்துக்கொள்ளலாம்.
கூடுமானவரை மனதை மகிழ்ச்சியான நிலையில் வைத்துக் கொள்ளப் பழகுங்கள். புற்றுநோயைக் கண்டு அச்சப்படத் தேவையில்லை. தற்காலத்தில் ஒருவரை புற்றுநோய் தாக்கி அதை முதல் நிலை அல்லது இரண்டாம் நிலையில் கண்டுபிடித்துவிட்டால் முழுமையாக குணப்படுத்தக்கூடிய நவீன மருத்துவ வசதிகள் வந்துவிட்டன.
வலிமிகுந்த கொடிய புற்றுநோயை இந்த உலகில் இருந்து முழுமையாக அகற்றுவதற்கு நாம் ஒவ்வொருவரும் ஒற்றுமையாக இணைந்து முடிந்த வரை செயல்படுவோம்.