
மாரடைப்பு மற்றும் கார்டியாக் அரெஸ்ட் இரண்டுமே இதயத்துடன் தொடர்புடைய பிரச்சனைகள் தான். ஆனால் அவை இரண்டும் ஒன்று அல்ல. கார்டியாக் அரெஸ்ட் என்பது இதயம் திடீரென துடிப்பதை நிறுத்துவதைக் குறிக்கிறது. ஹார்ட் அட்டாக் எனப்படும் மாரடைப்பு இதயத்திற்கு ரத்த ஓட்டம் தடைபடுவதால் ஏற்படும் ஒரு நிலையாகும். இரண்டிற்கும் இடையே உள்ள வித்தியாசங்கள், அறிகுறிகள் போன்றவற்றைப் பற்றி இந்த பதிவில் பார்ப்போம்.
1. கார்டியாக் அரெஸ்ட் (திடீர் மாரடைப்பு):
எந்தவித முன்னெச்சரிக்கையும் இல்லாமல் திடீரென ஏற்படுவது தான் கார்டியாக் அரெஸ்ட். இது ஒருவரின் இதயம் திடீரென செயலிழந்து போகும் போது, அதாவது துடிப்பதை நிறுத்தும் போது ஏற்படுவது தான் கார்டியாக் அரெஸ்ட் எனப்படுகிறது.
உடலின் முக்கிய உறுப்புகளான மூளை, நுரையீரல் மற்றும் பிற முக்கிய உறுப்புகளுக்கு செல்லும் ரத்தத்தை, இதயத்தால் பம்ப் செய்து அனுப்ப முடியாது. பாதிக்கப்பட்ட நபர் திடீரென சுயநினைவை இழந்து விடுவார். அவரது சுவாசமும் நின்று போகும். உடனே சிகிச்சை அளிக்காவிட்டால் அவருக்கு மரணம் நேரலாம்.
2. ஹார்ட் அட்டாக் (மாரடைப்பு):
இதயத்திற்கு செல்லும் ரத்த ஓட்டத்தில் ஏதேனும் அடைப்பு ஏற்பட்டால் ஏற்படுவது தான் ஹார்ட் அட்டாக் எனப்படும் மாரடைப்பு. இதயத்தில் உள்ள கரோனரி தமனிகளில் அடைப்பு ஏற்படுவதால் உண்டாகிறது. மாரடைப்பின்போது இதயத்தின் ஒரு பகுதிக்கு செல்லும் ரத்த ஓட்டத்தில் தடை ஏற்படுகிறது. அந்தப் பகுதிக்கு ஆக்ஸிஜன் மற்றும் பிற ஊட்டச்சத்துக்கள் கிடைக்காமல் போகிறது.
அப்போது அவருக்கு நெஞ்சில் வலி இருக்கும். மூச்சு விடுவதில் சிரமம் இருக்கும். உடலெல்லாம் பயங்கரமாக வியர்க்கும். மயக்கம் அடையும் நிலைக்குச் செல்வார்.
இரண்டிற்கும் உள்ள முக்கிய வேறுபாடுகள்:
கார்டியாக் அரெஸ்ட் என்பது இதயம் செயலிழந்து துடிப்பதை நிறுத்துவது. ஹார்ட் அட்டாக் என்பது இதயத்திற்கு செல்லும் ரத்த ஓட்டம் தடைபடுவதால் ஏற்படுவது. இதில் இதயம் துடித்துக் கொண்டே இருக்கும். ஆனால் ரத்த ஓட்டம் தடைபடும். கார்டியாக் அரெஸ்ட்டின் போது இதயம் செயலிழந்து துடிப்பதையே நிறுத்துகிறது.
இரண்டில் கார்டியாக் அரெஸ்ட் என்பது மிகவும் தீவிரமான நிலை. உடனே சிகச்சை அளிக்கப்பட வேண்டும். ஆனால் ஹார்ட் அட்டாக் ஏற்பட்ட நபருக்கும் விரைவில் கார்டியா அரஸ்ட்டும் ஏற்படலாம்.
ஒற்றுமைகள்:
கார்டியாக் அரஸ்ட் மற்றும் ஹார்ட் அட்டாக் இரண்டும் சில விஷயங்களில் ஒன்றோடு ஒன்று இணைக்கப்பட்டுள்ளன. ஹார்ட் அட்டாக் வந்ததற்குப் பிறகு, அல்லது குணமடையும் போது சிலருக்கு திடீரென்று கார்டியாக் அரஸ்ட் ஏற்படலாம். அப்போது இதய தசை நோய், இதயம் செயலிழப்பு போன்றவை ஏற்படலாம்.
கார்டியாக் அரஸ்ட் ஏற்பட்டுள்ளது என்பதை உணர்த்தும் மூன்று அறிகுறிகள்:
திடீரென சுயநினைவு இழந்து போதல், மூச்சு நின்று போகுதல், நாடித்துடிப்பு குறைதல் போன்றவை கார்டியாக் அரஸ்ட்டின் அறிகுறிகள். ஆனால் சில நேரங்களில் கார்டியாக் அரஸ்ட் ஏற்படுவதற்கு முன்பு சில அறிகுறிகள் தென்படலாம். மூச்சுத் திணறல், உடல் பலவீனம், வேகமாக துடிக்கும் அல்லது படபடக்கும் இதயம் போன்றவை. கார்டியாக் அரெஸ்ட் வந்த ஏற்பட்ட நபருக்கு CPR பி பி ஆர் எனப்படும் முதலுதவி செய்யலாம். மார்பின் மையத்தில் இரண்டு கையின் விரல்களையும் கோர்த்துக்கொண்டு வேக வேகமாக அழுத்த வேண்டும்.
ஹார்ட் அட்டாக்கின் அறிகுறிகள்:
மயக்கம், தாடை, தோள்பட்டை, கழுத்து வலி, நீரிழிவு நோயாளிகள் என்றால் வயிற்று வலி கூட இருக்கலாம். மூச்சுத் திணறல், விவரிக்க முடியாத அதீதக் களைப்பு, வாந்தி வருவது போல உணர்வு போன்றவை. பொதுவாக மாரடைப்பின் அறிகுறிகள் மெதுவாகத் தொடங்கும். அறிகுறி களைக் கண்டு கொண்டால் உடனே கார் போன்ற வாகனத்தில் படுக்க வைத்து மருத்துவமனைக்கு அழைத்து சென்று விட வேண்டும். அல்லது உடனடியாக ஆம்புலன்ஸை அழைக்கவும். பாதிக்கப்பட்ட நபர் வண்டியை ஓட்டக்கூடாது.
கோல்டன் அவர்ஸ் எனப்படும் முப்பது நிமிடத்திலிருந்து ஒரு மணி நேரத்திற்குள் ஹார்ட் அட்டாக் வந்தவரை மருத்துவமனையில் சேர்த்து விட வேண்டும். கார்டியாக் அரஸ்ட் ஏற்பட்ட நபரை உடனே அல்லது மிக விரைவில் சேர்த்து சிகிச்சையைத் தொடங்க வேண்டும்.
(முக்கிய குறிப்பு: இந்தத் தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே. மருத்துவ ஆலோசனைக்கு சரியான தகுந்த மருத்துவரை அணுகவும்)