
முதுமை அடையும்போது அனைவரும் எதிர்கொள்ளும் ஒரு பொதுவான பிரச்னை பார்வை குறைபாடு. இக் குறைபாடு இன்றைய காலகட்டத்தில் பிஞ்சு பருவத்தில் அதிகமாகவே காணப்படுகிறது. இதை தடுக்க முடியுமா?
நவீன யுகம்:
குழந்தைகளில் பார்வை மோசமடைவதற்கான முதன்மையான காரணங்களில் ஒன்று டிஜிட்டல் சாதனங்களை அதிகமாக சார்ந்திருப்பது. டேப்லெட்டுகள் (Tablets), ஸ்மார்ட்போன்கள் (Smart phones), மடிக்கணினிகளை அதிகம் பயன்படுத்துவதே அவர்களின் பார்வைக்கு எதிர்வினையை ஏற்படுத்துகின்றன. இந்தச் சாதனங்களால் வெளிப்புறச் செயல்பாடுகள் குறைந்து, இயற்கையாகக் கிடைக்கும் சூரிய ஒளியின் நன்மைகள் தடைப்படுகின்றன; தூரப்பார்வையின் (myopia) ஆரம்பகால தொடக்கத்திற்குப் பங்களிக்கின்றன. போகப் போக உடல் செயல்பாடு குறையும்போது கண் தசை வளர்ச்சியை நேரடியாகப் பாதிக்கும்.
உணவுகள் மூலம் கிடைக்கும் வைட்டமின் ஏ, லுடீன் (lutein), ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் போன்ற முக்கிய சத்துக்களைத் தவறவிடுவதும் கண் ஆரோக்கியத்தை எதிர்மறையாக பாதிக்கின்றன.
எப்படி தடுக்கலாம்?
இந்தப் பார்வை பிரச்னைகளை எதிர்கொள்ள மேலே குறிப்பிட்டதைபோல் வெளிப்புற விளையாட்டுகள் மூலம் பகல் வெளிச்சத்தில் கிடைக்கும் நன்மைகள் தூரப்பார்வை பிரச்னைகளைக் குறைப்பதாக அறிவியல்பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது.
இதற்கு 20-20-20 விதிபடி திரையைப் பார்க்கும் நேரத்தைக் கையாளலாம். அதாவது ஒவ்வொரு 20 நிமிடங்களுக்கும் ஒரு முறை 20 அடி தூரத்தில் உள்ள ஒன்றை 20 வினாடிகள் பார்ப்பது கண் அழுத்தத்தைக் குறைக்க உதவும்.
இதோடு சாதனங்களில் நீல ஒளி பில்டர்ஸ் (blue light filters), Adaptive brightness settings போன்ற விஷயங்கள் குழந்தைகளின் கண்களை அதீத வெளிச்சத்திலிருந்து பாதுகாக்கும்.
ஊட்டச்சத்தும் ஒரு முக்கியப் பங்கு வகிக்கிறது. கேரட், கீரை, மீன் போன்ற உணவுகள் குழந்தைகளின் தெளிவான பார்வைக்கு அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களை தருகின்றன.
மரபியல் ரீதியாக பார்வையில் பிரச்னை ஏற்படுமா?
மரபியல் ஒரு குழந்தையின் பார்வையில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்துகிறது. பெற்றோர்கள் தூரப்பார்வை போன்ற பார்வைக் கோளாறுகளால் பாதிக்கப்பட்டிருந்தால் குழந்தைகள் இந்தப் பிரச்னைகளைப் பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகம்.
எனவே, குழந்தைகளுக்கு வழக்கமான கண் பரிசோதனைகள், பார்வை சிகிச்சை பயிற்சிகள், மருத்துவரால் பரிந்துரைக்கப்பட்ட (prescribed) கண் மருந்து சொட்டுகள் போன்றவை பரம்பரை ரீதியாக சந்திக்கும் தூரப்பார்வை பிரச்னையை நிர்வகிப்பதில் பயனுள்ளதாக இருக்கும்.
இதோடு தொலைதூரப் பொருட்களில் நாம் கவனம் செலுத்துவது அல்லது கைகள் மூலம் கண்களுக்கு இதம் அளிப்பது போன்ற பயிற்சிகளை மேற்கொள்வது கண் தசைகளை வலுப்படுத்தி சிறந்த பார்வையை ஊக்குவிக்கும்.
உலகெங்கிலும் உள்ள குழந்தைகளிடையே குறிப்பாக உட்புற வாழ்க்கையில் மூழ்கி டிஜிட்டல் திரைகளை அதிகம் சார்ந்திருக்கும் நகர்ப்புறங்களில் தூரப்பார்வை (Myopia) குறைபாடு மிகவும் பொதுவானதாக இருக்கிறது.
ஒரு அறைக்குள் இருந்து வேலை செய்வது. அதனால் சூரிய ஒளி குறைவாக கிடைப்பதும் இந்தப் பிரச்னையை மேலும் துரிதப்படுத்துவதாக ஆய்வுகள் குறிப்பிடுகின்றன.
அதுபோல உலகெங்கும் கிட்டப்பார்வையைவிட மரபியல் ரீதியான தூரப்பார்வை பிரச்னைதான் குழந்தைகளை அதிகம் பாதிக்கிறது.
முக்கிய அறிவிப்பு: இக்கட்டுரையில் உள்ள தகவல்கள், பல்வேறு செய்திகளின் தொகுப்பாக மட்டுமே வழங்கப்படுகின்றன. இவை மருத்துவ நிபுணர்களின் ஆலோசனைகள் அல்ல. உடல்நலம் தொடர்பான எந்தவொரு சந்தேகத்துக்கும் பிரச்னைக்கும், அவசியம் மருத்துவரை/நிபுணரை அணுகவும்.