பித்தப்பை (Gallbladder) என்பது ஒரு சிறிய பேரிக்காய் வடிவ உறுப்பாகும். இது பித்தத்தை சேமிக்கிறது. பித்தம் என்பது நம் கல்லீரலால் உற்பத்தி செய்யப்பட்டு பித்தப்பையில் சேமிக்கப்படும் மஞ்சள் கலந்த பச்சை செரிமான திரவம். இது நாம் உண்ணும் உணவுகளில் உள்ள கொழுப்பை உடைக்க உதவுவதுடன், செரிமான நொதிகள் தங்கள் வேலையை செய்வதை எளிதாக்குகிறது. நம் கல்லீரலுக்கு கீழே வயிற்றின் வலது புறம் அமைந்துள்ள செரிமான செயல்முறைக்கு உதவும் உடலில் உள்ள முக்கியமான உறுப்புகளில் ஒன்று. இது கல்லீரலுக்கு கீழ் ஒரு சிறிய பை போன்ற அமைப்பில் இருக்கும்.
பித்தப்பை கற்கள் என்பது நம் பித்தப்பையில் உருவாகக்கூடிய செரிமான திரவத்தின் கடினமான படிவுகளாகும். இவை மணல், துகள்கள் போல் சிறியதாகவோ அல்லது கோல்ஃப் பந்து போல் பெரியதாகவோ இருக்கலாம். சிலருக்கு ஒரே நேரத்தில் பல பித்தப்பை கற்கள் கூட உருவாகும்.
காரணங்கள்: பித்தத்தில் உள்ள அதிகப்படியான கொலஸ்ட்ரால், கற்கள் உருவாக வழி வகுக்கும். பிலிரூபின் என்பது நம் உடல் இரத்த சிவப்பணுக்களை உடைக்கும் பொழுது உற்பத்தி செய்யப்படும் ஒரு ரசாயனமாகும். இது பித்தத்தில் அதிகமாக இருக்கும்பொழுது கற்கள் உருவாகின்றன. அதிக உடல் பருமன், நார்ச்சத்து குறைந்த உணவை எடுத்துக் கொள்ளுதல், அதிக கொழுப்புள்ள உணவுகளை உண்ணுதல், சர்க்கரை நோய் இருப்பது, ஹார்மோன் சிகிச்சை மருந்துகள் எடுத்துக்கொள்வது போன்றவை காரணமாக இருக்கலாம்.
அறிகுறிகள்: பொதுவாக, பித்தப்பை கற்கள் உள்ளவர்கள் எந்த அறிகுறியையும் அனுபவிப்பதில்லை. இருப்பினும் காய்ச்சல், வயிற்றின் மேல் வலது பகுதியில் தொடர்ந்து தீவிரமடையும் வலி, குமட்டல் மற்றும் வாந்தி, பசியின்மை, வலது தோள்பட்டையின் பின்புறத்தில் வலி, முதுகு வலி, சருமம் மற்றும் கண்களில் மஞ்சள் நிறம், சிறுநீர் மற்றும் மலத்தின் நிறமாற்றம் போன்ற அறிகுறிகள் இருந்தால் தாமதிக்காமல் மருத்துவரை கலந்தாலோசிப்பது நல்லது.
தடுப்பு முறை: பித்தப்பை கற்களால் ஏற்படும் அபாயத்தைக் குறைக்க உணவை சரியான நேரத்தில் எடுத்துக்கொள்வது அவசியம். உண்ணாவிரதம் இருப்பது, உணவைத் தவிர்ப்பது பித்தப்பைக் கற்களின் அபாயத்தை அதிகரிக்கும். விரைவான எடை இழப்பு பித்தப்பை கற்களின் அபாயத்தை அதிகரிக்கும். எனவே, எடை குறைப்பில் நிதானத்தை கடைபிடிக்கவும். முழு தானியங்கள், பழங்கள், காய்கறிகள் போன்ற நார்ச்சத்து மிகுந்த உணவுகளை எடுத்துக்கொள்வது நல்லது. உடல் பருமன் பித்தப்பையில் கற்கள் உருவாகும் அபாயத்தை அதிகரிக்கும். எனவே, உடல் செயல்பாடுகளின் அளவை அதிகரிப்பதுடன் எடுத்துக்கொள்ளும் கலோரிகளின் எண்ணிக்கையை குறைப்பதும் உடல் பருமனை குறைக்க உதவும்.
சிகிச்சை: எந்த அறிகுறிகளையும் ஏற்படுத்தாத பித்தப்பை கற்களுக்கு பொதுவாக சிகிச்சை தேவையில்லை. பெரும்பாலான சமயங்களில் அறிகுறிகள் தொடங்கும் வரை அறுவை சிகிச்சை தேவையிராது. அடிவயிற்று வலி கடுமையாக இருப்பதும், உட்காருவதில் சிரமம் உண்டாவதும், குளிருடன் கூடிய காய்ச்சல் இருப்பின் தகுந்த மருத்துவரை சந்தித்து சிகிச்சை பெற்றுக்கொள்வது நல்லது. பித்தப்பை கற்களின் அறிகுறிகள் இருப்பவர்களுக்கு கல் கண்டுபிடிக்கப்பட்டவுடன் அறுவை சிகிச்சை தேவைப்படும்.
பித்தப்பை கற்கள் உள்ளவர்களுக்கு வைட்டமின் பி, வைட்டமின் சி மற்றும் கால்சியம் நிறைந்த உணவுகள் சிறந்தது. எலுமிச்சை, ஆரஞ்சு போன்ற சிட்ரஸ் பழங்கள், மிளகுத்தூள், இலை காய்கறிகள் போன்றவை பித்தப்பை கற்களை குறைக்க உதவும்.