
அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்பதைப் போல, உள்ளுறுப்புகளின் ஆரோக்கியம் உங்களின் நகங்களில் தெரியும். பொதுவாக நகங்களில் புள்ளி இருந்தால் புதிதாக ஆடைகள் வாங்கப் போகிறீர்கள் என்று சொல்லுவார்கள். ஆனால், நிஜத்தில் அவ்வாறு இல்லை. நகங்கள் நமது ஆரோக்கியத்தையும் உடலில் உள்ள நோய்கள் மற்றும் ஊட்டச்சத்துக் குறைபாடுகளையும் வெளிக்காட்டும் கண்ணாடிகள் ஆகும்.
நம் உடலில் ஆரோக்கிய சீர்கேடுகள் மற்றும் நாம் உண்ணும் உணவுகளில் போதிய சத்துக்கள் இல்லாததை நகங்களில் ஏற்படும் மாறுபாடுகளை வைத்து அறியலாம். நகங்களில் உருவாகும் புள்ளிகள், வெள்ளைக் கோடுகள், அடிக்கடி நகங்கள் உடைந்து போதல், வளைந்த நகங்கள், கருமையாக மாறிய நகங்கள் எல்லாம் ஆரோக்கியத்தை பற்றி எச்சரிக்கும் மணி. உடலை பராமரிப்பது போல நகங்களையும் சுத்தமாக பராமரிக்க வேண்டும்.
ஆண்களுக்கும் பெண்களுக்கும் பொதுவாக நகங்கள் வளர்ந்த பின் சீக்கிரம் உடைந்து விடும். பெரும்பாலானவர்கள் நகங்களைப் பற்றி கவலைப் படுவதே இல்லை. பெண்கள் கூட நகங்களை வித விதமாக அழகு படுத்த நினைக்கிறார்களே தவிர, அதன் ஆரோக்கியத்தைப் பற்றி சிந்திப்பது இல்லை. நகங்களின் ஆரோக்கியம் புறக்கணிக்கப்படுகிறது. தலைமுடி உதிர்வுக்கும், முடி உடைதலுக்கும் கவலைப்படுவர்கள், நகம் என்றால் அதை மதிப்பது கூட இல்லை.
ஒரு வாரம் தலைமுடியை பராமரிக்க ஆகும் செலவுகளில் ஒருமுறைக் கூட வாழ்நாளில் நகங்களுக்காக செய்வதில்லை. அவ்வளவுதான் அதற்கான முக்கியத்துவம். நகங்களின் அறிகுறிகள் நம் ஆரோக்கியத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. நகங்களில் ஏற்படும் மாற்றங்கள் நம் ஆரோக்கியத்துடன் தொடர்பு உள்ளவை.
வெள்ளை புள்ளிகள்:
நகங்களில் ஏற்படும் வெள்ளைப் புள்ளிகள் லுகோனிசியா என்று அழைக்கப்படுகிறது. நகங்களில் வெள்ளைப் புள்ளிகள் தோன்றுவது துத்தநாகக் குறைபாடு காரணமாக உருவாகிறது. சில சமயம் பூஞ்சை தொற்றுக்கான அறிகுறியாக இருக்கலாம் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். இரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவு குறைந்தாலும், வைட்டமின் ஈ குறைபாடு ஏற்பட்டாலும் கூட இப்படி வெள்ளை புள்ளிகள் தோன்றலாம்.
மெல்லிய நகங்கள்:
எளிதில் உடையக் கூடிய மெல்லிய நகங்கள் பலருக்கு பொதுவாக உள்ளது. இது வைட்டமின் பி சார்ந்த ஊட்டச்சத்துக்கள் குறைபாட்டால் உண்டாகிறது. உடலில் கால்சியம், இரும்புச்சத்து மற்றும் கொழுப்பு அமிலங்கள் குறைவாக இருப்பதையும் அது காட்டுகிறது. நகம் வளர்வதற்குத் தேவையான கெரட்டின் குறைபாட்டால் உண்டாகிறது.
மஞ்சள் நகங்கள்:
நகங்கள் விரலோடு தோன்றும் இடத்தில் மஞ்சள் நிறத்தில் சிலருக்கு காணப்படும். இது அதிகப்படியான புகைபிடிப்பதால் ஏற்படலாம். பூஞ்சைத் தொற்று, சுவாச நோய், முடக்கு வாதம் அல்லது தைராய்டு நோய் அறிகுறிகளையும் குறிக்கலாம். மஞ்சள் நிற நகங்கள் நீரிழிவு நோயின் அறிகுறியாக இருக்கலாம். மேலும் ரத்தசோகை நோய் இருப்பதை முதன்மையாக காட்டுகிறது. நகம் முழுவதும் மஞ்சளாக இருந்தால் அது மஞ்சள் காமாலை நோயின் அறிகுறியாகவும் இருக்கலாம். இவர்கள் உடனடியாக மருத்துவரிடம் சோதனை செய்து கொள்வது நல்லது.
வளைந்த நகங்கள்:
கிளியின் நகங்களை போல சிலருக்கு கரண்டி வடிவில் நகங்கள் வளைந்து காணப்படும். இவர்களுக்கு நேராக நகங்கள் வளராமல் வளைந்த படியே வளர தொடங்குகிறது. இரத்த சோகை, ஹைப்போ தைராய்டிசம் அல்லது கல்லீரல் பிரச்சனைகளின் காரணமாக நகங்கள் இவ்வாறு இருக்கலாம்.
வெள்ளைக் கோடு நகங்கள்:
பொதுவாக இந்த நகங்கள் பெரும்பாலானவர்களுக்கு காணப்படும். இரத்த குறைபாடு மற்றும் வைட்டமின் ஈ குறைபாட்டால் இந்தக் கோடுகள் உருவாகின்றன.
நல்ல ஆரோக்கியமான நகங்கள் மெல்லிய ரோஸ் வண்ணத்தில் காணப்படும் .