அன்றைய நாட்களில் ஒரு அலுமினிய பாத்திரத்தில் செக்கில் ஆட்டப்பட்ட எண்ணெய்களை எடுத்து வீதி வீதியாக விற்பார்கள். அதுதான் நம் தாத்தா பாட்டி வாங்கி உபயோகித்தார்கள். அந்த நல்ல எண்ணெய்களின் மணமும் ருசியும் தனித்தன்மையுடன் இருக்கும்.
ஆனால் அறிவியல் கண்டுபிடிப்புகள் பெருக பெருக நமது ஆரோக்கியத்திற்கு வேட்டு வைக்கும் பல உணவுகள் நம் சமையலறையில் நுழைந்து விட்டன. அதில் ஒன்றுதான் ரீஃபைண்ட் ஆயில் எனப்படும் சுத்திகரிக்கப்பட்ட சமையல் எண்ணெய்கள்.
ரீஃபைண்ட் ஆயில் (Refined oil) மற்ற எண்ணெய்களை விட விலை குறைவு என்பதால் பெரும்பாலான வீடுகளில் பயன்படுத்தப்படுகிறது. விதவிதமான வண்ணக் கவர்களில் நீர் போல் தெளிவாக இருக்கும் எண்ணெய்கள் ஆரோக்கியம் என்று நினைத்துக் கொள்கிறோம். மேலும் விளம்பரங்களில் இந்த எண்ணெய் இதய ஆரோக்கியம் பேணும், கொழுப்பற்றது என்று வலியுறுத்தி சொல்லப்படுவதில் மயங்கி அனைவரும் சந்தேகமே இல்லாமல் ரீபைண்ட் ஆயில் வாங்கி பயன்படுத்துகிறார்கள்.
ஆனால் இது உண்மைதானா என ஆராயும்போது இது வெறும் விளம்பர உத்தி என்பதை மட்டுமே நாம் அறிய முடிகிறது . இது ஆரோக்கியத்திற்கு பல கடுமையான தீமைகளை ஏற்படுத்தும் என்பதும் மறுக்க முடியாத உண்மையாக ஆய்வுகளில் வெளிப்படுகிறது . உடல் பருமன் உயர் ரத்த அழுத்தம் போன்ற தீவிர நோய்களின் அபாயத்தை அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளதாக பல உணவு வல்லுனர்கள் எச்சரிக்கின்றனர். இதன் தீங்குகள் பற்றி அவ்வப்போது விழிப்புணர்வு வந்தாலும் விலை மற்றும் சுவை காரணமாக இதையே நாம் தேர்வு செய்கின்றோம்.
இங்கு ரீஃபைண்ட் ஆயில் பற்றிய சில தகவல்களைக் காண்போம்.
ரீபைண்ட் ஆயில் என்றால் என்ன?
சாதாரணமாக எண்ணெயை செக்கில் ஆட்டுவதைவிட இந்த சுத்திகரிக்கப்பட்ட எண்ணெயை உருவாக்கும் இயந்திரங்களின் செயல்முறை முற்றிலும் வேறுபட்டது. வழக்கத்தை விட அதிக வெப்பம் தேவைப்படுவதால் கொட்டைகள் மற்றும் விதைகள் சூடேற்றப்படுகின்றன. இதனால் அவற்றின் ஊட்டச்சத்துக்கள் அழிக்கப்படுகிறது.
அதுமட்டுமின்றி எண்ணெய் வித்துகளில் இருந்து எண்ணெயை பிரிக்க ஹெக்சேன் போன்ற உடலுக்கு தீங்கு விளைவிக்கும் நச்சு வேதிப்பொருள் பயன்படுத்தப்படுகிறது. அதிக வெப்பம் காரணமாக மாறிய நிறத்தை மேம்படுத்த ப்ளீச் எனும் உடல்நலம் பாதிக்கும் முறை செயல்படுத்தப்படுகிறது .
சரி இந்த ரீஃபைண்ட் ஆயில் சாப்பிடுவதால் என்னென்ன தீமைகள் வரும் ?
இதை தொடர்ந்து பயன்படுத்துவதால் உடலில் கொழுப்பு மற்றும் எல்டிஎல் கொழுப்பின் அளவு அதிகரிக்கிறது என்றும், அதன் உற்பத்தியில் பயன்படுத்தப்படும் ரசாயனங்கள் புற்றுநோயை ஏற்படுத்தும் வாய்ப்பு உள்ளது என்றும், இதை அதிகமாக பயன்படுத்தினால் இதயம் தொடர்பான பாதிப்பு மற்றும் உடல் எடை அதிகரிக்கும் எனவும் உணவுத்துறை வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர் .
சுகாதார நிபுணர்களின் கூற்றுப்படி சுத்திகரிக்கப்பட்ட எண்ணெயை பயன்படுத்துவதற்கு பதிலாக மரச்செக்கு எண்ணெய்கள், நாட்டு நல்லெண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெய் , ஆலிவ் எண்ணெய், கடலை எண்ணெய் போன்றவற்றை பயன்படுத்துவது ஆரோக்கியத்திற்கு சிறந்தது.
தவிர்க்க இயலாத பட்சத்தில் அதிக நபர்கள் உள்ள இடத்தில் ஏதோ ஒரு முறை செய்யும் பலகாரங்களுக்காக வேண்டுமானால் நாம் இந்த சுத்திகரிக்கப்பட்ட எண்ணெயை வாங்கி ஒரு முறை மட்டும் உபயோகித்து அதை தவிர்த்து விடுவது நல்லது. தினசரி சமையலுக்கு நாம் செக்கு எண்ணெய்களை உபயோகிப்பது சிறந்தது. மரச்செக்கு எண்ணெய்களை விலை காரணமாக சிறிது குறைவாக பயன்படுத்தி செய்யும் போது நமது பட்ஜெட்டிற்குள் அடங்கும். நமது ஆரோக்கியம் காக்கப்படும்.
(முக்கிய குறிப்பு: இந்தத் தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே. மருத்துவ ஆலோசனைக்கு சரியான தகுந்த மருத்துவரை அணுகவும்.)