சென்னையை மிரட்டும் 'மெட்ராஸ் ஐ' மற்றும் 'சின்னம்மை பரவல்': தப்பிப்பது எப்படி? வீட்டில் செய்ய வேண்டிய முன்னெச்சரிக்கைகள்!

காலநிலை மாற்றத்தால் ஏற்படுகின்ற மெட்ராஸ் ஐ மற்றும் சின்னம்மை வருவதற்கான காரணங்கள் அறிகுறிகள் மற்றும் தடுப்பு முறைகள்
madras eye and chickenpox
madras eye and chickenpox Img credit: AI Image
கே.எஸ்.கிருஷ்ணவேனி

Iam a graduate from Vaishnav College in the year 1984. My writings were published in Mangayar Malar,Aval Vikadan,Kumudham Sneghethi since 1992 and received many prizes. Now I am writing in Kalki Publications. Cooking, writing, playing Shuttle cock & making fur dolls are my passions.

Updated on

காலநிலை மாற்றத்தால் ஏற்படும் அதீத வெப்பம், ஈரப்பதம் மற்றும் காற்று மாசுபாடு காரணமாக சென்னையில் மெட்ராஸ் ஐ (கண்வலி-Conjunctivitis) மற்றும் சின்னம்மைை (Chickenpox) பரவல் அதிகரித்து வருகிறது. மழை மற்றும் குளிர் காலத்தில் வைரஸ் தொற்று காரணமாகவும், வெயில் காலத்தில் அதிக வெப்பத்தாலும் இந்த நோய்கள் எளிதில் பரவுகின்றன. சுகாதாரம் மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளே இதற்கு சிறந்த தீர்வாகும்.

மெட்ராஸ் ஐ (Conjunctivitis):

மெட்ராஸ் ஐ என்பது கண்கள் சிவத்தல், அரிப்பு, நீர் வடிதல் மற்றும் கண் இமை வீக்கம் ஆகியவற்றை ஏற்படுத்தும் பொதுவான ஒரு தொற்று நோயாகும். இது முக்கியமாக வைரஸ், பாக்டீரியா அல்லது அலர்ஜியால் பரவுகிறது.

1) அறிகுறிகள்:

  • கண்ணில் ஏதோ தூசி விழுந்தது போன்ற உணர்வு ஏற்படுவதுடன் கண் கூச்சம் மற்றும் உறுத்தல் ஏற்படுதல்.

  • கண் இமைகள் வீங்கி லேசான வலி அல்லது அசௌகரியம் ஏற்படுதல்.

  • கண் எரிச்சல், கண்களில் அரிப்பு, வலி, வெள்ளை அழுக்கு போல பீளை தள்ளுவது.

  • விழிப்பகுதி சிவந்து காணப்படுவது, நீர் சுரந்து கொண்டே இருப்பது

  • அதிகாலையில் கண் இமைப்பகுதி ஒட்டிக் கொண்டு மஞ்சள் அல்லது வெள்ளை நிறத்தில் பிசுபிசுப்பான திரவம் வெளியேறுதல்.

  • அதிக வெளிச்சத்தை பார்க்க முடியாமல் இருப்பது போன்றவை மெட்ராஸ் ஐ பாதிப்பின் அறிகுறிகளாகும். சமீப காலமாக இது போன்ற அறிகுறிகளுடன் மருத்துவமனைக்கு வருவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

2) காரணங்கள்:

  • அடினோவைரஸ் (Adenovirus) போன்ற வைரஸ்களால் எளிதில் பரவுகிறது.

  • பாக்டீரியா தொற்றினாலும் கண் சிவத்தல், வீக்கம் மற்றும் சீழ் வடிதல் ஏற்படுகிறது.

  • தூசி, மகரந்தம், பூஞ்சை காளான்கள் அல்லது கெமிக்கல் காரணிகளால் ஏற்படும் அலர்ஜி காரணமாகவும் உண்டாகும்.

  • கண் விழியையும், இமையையும் இணைக்கும் ஜவ்வு படலத்தில் ஏற்படும் வைரஸ் தொற்றான 'மெட்ராஸ் ஐ' பாதிப்பு காற்று மூலமாக ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்கு எளிதில் பரவக்கூடியது.

இதையும் படியுங்கள்:
"வாக்கிங் போயிட்டு இதெல்லாம் சாப்பிட்டா எப்படீங்க?" - உங்க 'இதயம் பேசுகிறது'... கேளுங்க!
madras eye and chickenpox

3) தீர்வுகள் மற்றும் தடுப்பு முறைகள்:

கைகளை அடிக்கடி சோப்பு போட்டு கழுவி சுத்தமாக இருக்கவும்.

பாதிக்கப்பட்டவர்கள் பயன்படுத்திய துண்டு, தலையணை, கண் கண்ணாடி போன்றவற்றை மற்றவர்கள் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்.

சுத்தமான துணியைக் குளிர்ந்த நீரில் நனைத்து கண்களின் மேல் வைத்தால் எரிச்சல் சற்று குறையும்.

கண் மருத்துவரை அணுகி பரிந்துரைக்கப்பட்ட லூப்ரிகேட்டிங் சொட்டு மருந்துகளை பயன்படுத்தவும். பாக்டீரியா தொற்றாக இருந்தால் ஆண்டிபயாட்டிக் தேவைப்படலாம்.

கண்களை தேய்ப்பதை தவிர்க்கவும். இந்த சமயத்தில் காண்டாக்ட் லென்ஸ்களை பயன்படுத்துவதை நிறுத்திவிட்டு கண்ணாடி அணியவும்.

சின்னம்மை:

சின்னம்மை (chickenpox) என்பது வெரிசெல்லா ஜோஸ்டர் வைரசால் ஏற்படும் அரிப்புடன் கூடிய கொப்புளங்களாகும். இது எளிதில் பரவக்கூடிய வைரஸ் தொற்றாகும். பாதிக்கப்பட்டவரின் இருமல், தும்மல் அல்லது கிருமிகள் நிறைந்த நீர்க் கொப்புளங்களைத் தொடுவதன் மூலம் பரவுகிறது.

1) முக்கிய அறிகுறிகள்:

a) முகத்தில் தொடங்கி மார்பு, முதுகு மற்றும் உடலின் மற்ற பகுதிகளுக்கு பரவக்கூடிய, அரிப்புடன் கூடிய சிவப்பு நிற தடிப்புகள்.

b) சிறிய நீர்த் திவலைகள் போன்ற கொப்புளங்கள் தோன்றி உடலெங்கும் பரவும்.

c) லேசான காய்ச்சல், அரிதான சந்தர்ப்பங்களில் குமட்டல் மற்றும் வாந்தி ஏற்படலாம்.

d) சோர்வு, தளர்ச்சி, பசியின்மை, தலைவலி மற்றும் தசை வலி

2) காரணங்கள்:

a) நேரடித் தொடர்பு:

சின்னம்மை நோயால் பாதிக்கப்பட்டவரின் தோலில் உள்ள கொப்புளங்களில் இருந்து வெளியாகும் திரவத்தைத் தொடுவதன் மூலம் வைரஸ் பரவுகிறது.

b) காற்று வழி பரவல்:

பாதிக்கப்பட்டவர் தும்மும்பொழுதோ அல்லது இருமும் பொழுதோ காற்றில் கலக்கும் நுண்துகள்கள் மூலம் ஆரோக்கியமான நபர்களுக்கு நோய் தொற்றுகிறது.

c) பொருட்கள் மூலம்:

நோயாளிகள் பயன்படுத்திய படுக்கை விரிப்புகள், உடைகள் அல்லது இதர பொருட்களைத் தொடுவதன் மூலமும் பரவலாம்.

இதையும் படியுங்கள்:
நாம் அறியாமலேயே நம் உடலை அழிக்கும் சைலண்ட் கில்லர்... தப்பிக்க சிம்பிள் வழி இதோ!
madras eye and chickenpox

d) வைரஸ் பரவும் காலம்:

ஒருவருக்கு கொப்புளங்கள் தோன்றுவதற்கு ஒன்றிரண்டு நாட்களுக்கு முன்பிருந்தே, அந்த கொப்புளங்கள் காய்ந்து குணமாகும் வரை இந்த நோய் மற்றவர்களுக்குப் பரவக்கூடும்.

3) யாருக்கெல்லாம் நோய் ஏற்படும் அபாயம் அதிகம்?

நோய் எதிர்ப்பு சக்தி குறைபாடு கொண்டவர்கள், குழந்தைகள், வயதானவர்கள், கர்ப்பிணிகள் மற்றும் நீண்ட கால நோயின் பாதிப்பில் உள்ளவர்களுக்கு இந்த வைரஸ் தொற்று ஏற்படும் அபாயம் அதிகம்.

4) தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்:

a) வெரிசெல்லா தடுப்பூசி போட்டுக் கொள்வது நோயை முற்றிலும் தவிர்க்க உதவும்.

b) அம்மை பாதித்த நபர் கொப்புளங்கள் காய்ந்து போகும் வரை சுமார் 5-7 நாட்கள் தனி அறையில் இருக்க வேண்டும். அதாவது இவர்கள் முற்றிலும் குணமாகும் வரை தனிமைபடுத்தப்படுவது நல்லது. இது நோய் பரவாமல் தடுக்கப்படும்.

c) கைகளை அடிக்கடி சோப்பு போட்டு கழுவ வேண்டும். இருமல், தும்மலின் பொழுது வாயை மூடிக் கொள்ளுதல். அத்துடன் பாதிக்கப்பட்டவர் இருக்கும் அறையை சுத்தமாகவும் காற்றோட்டமாகவும் வைத்திருப்பது அவசியம்.

d) பாதிக்கப்பட்டவரின் ஆடைகள், படுக்கை விரிப்புகள், பாத்திரங்கள் போன்றவற்றை மற்றவர்கள் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்.

e) நோயாளி பயன்படுத்திய ஆடைகள் மற்றும் படுக்கை விரிப்புகளை சுடுதண்ணீரில் துவைக்க வேண்டும்.

f) நோய் உள்ள குழந்தைகள் பள்ளிக்கோ அல்லது நோயுள்ள பெரியவர்கள் பொது இடங்களுக்கோ செல்வதை தவிர்க்க வேண்டும்.

g) உடலில் நீர்ச்சத்து குறையாமல் இருக்க நிறைய தண்ணீர், இளநீர், பழச்சாறுகள் மற்றும் மூலிகைத் தேநீர் குடிக்கலாம். இது உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்ற உதவும்.

h) சுத்தமான, தளர்வான ஆடைகளை அணிவதும், கொப்புளங்களை சொரிவதை தவிர்க்கவும் வேண்டும். இல்லையெனில் வடுக்கள் ஏற்படும். அத்துடன் நகங்களை வெட்டி சுத்தமாக வைத்திருப்பது அவசியம். இது கொப்புளங்களை சொரிவதை தடுக்க உதவும்.

i) உடலுக்கு குளிர்ச்சி தரும் உணவுகளை எடுத்துக் கொள்வதும், காரமான மற்றும் அமில உணவுகளை தவிர்க்கவும் வேண்டும்.

அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுகி முறையான சிகிச்சை பெறுவது அவசியம்.

logo
Kalki Online
kalkionline.com