அழும்போது குழந்தை மூச்சை நிறுத்துகிறதா? நீல நிறம், மயக்கம் வந்தால் உஷார்!

மூச்சடக்க நிகழ்வின் போது செய்ய வேண்டிய உடனடி முதலுதவி, தவிர்க்க வேண்டிய தவறுகள் மற்றும் மருத்துவ ஆலோசனை.
Child Breath Holding spell | குழந்தை மூச்சடக்க நிகழ்வு
Child Breath Holding spell | குழந்தை மூச்சடக்க நிகழ்வுImage Credit: ChatGPT
Dr K. Ravanan M.D, Paediatrics

டாக்டர். க. இராவணன் அவர்கள் செங்கல்பட்டு மருத்துவக் கல்லூரியில் M.B.B.S. பட்டப்படிப்பினையும் சென்னை மருத்துவக் கல்லூரியில் குழந்தை நல மருத்துவத்தில் M.D (Paed) உயர் பட்டப்படிப்பினையும் படித்தவர். குழந்தைகள் நல மருத்துவத்தில் 28 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். தற்போது அரக்கோணத்தில் Dr. RAV’s Child Clinic என்ற பெயரில் குழந்தைகளுக்கான மருத்துவமனையினை நடத்தி வருகிறார். Indian Medical Association, Indian Academy of Pediatrics & Infectious Disease Chapter IAP முதலான அமைப்புகளின் வாழ்நாள் உறுப்பினராவார். தமிழ் இலக்கியத்தில் பெரும் ஈடுபாடு கொண்டவர். சென்னை மருத்துவக் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த போது நடைப்பெற்ற கவிதைப் போட்டியில் வெற்றி பெற்று கவிப்பேரரசு வைரமுத்து அவர்களின் கரங்களால் முதல் பரிசினைப் பெற்றுள்ளார். இவர் எழுதிய நூல்கள் ‘குழந்தை நலம்’ மற்றும் 'ஒரு குழந்தை நல மருத்துவரின் டைரி குறிப்புகள்' ஆகும்.

Updated on: 

குழந்தை அழுதால் மூச்சை நிறுத்திக்கொள்கிறதா?

நீலமாக மாறுதல், மயக்கம், வலிப்பு போன்ற கால் கை இழுத்தல் போன்ற அறிகுறிகள் இருந்தால், பெற்றோர் என்ன செய்ய வேண்டும்?

குழந்தை கோபப்பட்டு அழும்போது திடீரென மூச்சை நிறுத்தி, முகம் நீலமாக மாறி, சில நொடிகள் மயங்குவதைக் காண்பது எந்தப் பெற்றோருக்கும் அதிர்ச்சியளிக்கும். சில குழந்தைகளுக்கு உடல் இறுகுதல் அல்லது வலிப்பு போன்ற அசைவுகளும் ஏற்படலாம். இதனை மூச்சடக்க நிகழ்வு (Child Breath Holding Spell) என்கிறோம். பெரும்பாலான நிகழ்வுகள் குறுகிய நேரத்தில் தானாகவே நின்றுவிடும். இருந்தாலும், முதல்முறை நிகழும்போது மருத்துவரிடம் ஆலோசனை செய்வது அவசியம்.

Q

மூச்சடக்க நிகழ்வு என்றால் என்ன?

A

குழந்தை அழுகை, கோபம், பயம் அல்லது வலிக்குப் பிறகு தன்னிச்சையாக மூச்சை வெளியேவிட்டு, சில நொடிகள் மூச்சுவிடாமல் அசைவில்லாமல் இருக்கலாம். இது குழந்தை வேண்டுமென்றே செய்யும் செயல் அல்ல. உடலின் தானியங்கும் எதிர்வினையாகும். பொதுவாக ஆறு மாதம் முதல் ஆறு வயது வரை காணப்படலாம். ஒன்று முதல் இரண்டு வயதுக்குள் அதிகமாக நிகழ்கிறது.

Q

குழந்தை நீலமாக மாறுவதும் மயங்குவதும் ஏன்?

A

அழுகைக்குப் பிறகு மூச்சு தற்காலிகமாக நின்றுவிடுவதால் உதடுகளும் முகமும் நீலமாக மாறலாம். சில குழந்தைகள் வெளிறிப்போய் மயங்கி விடலாம். சில நொடிகள் உடல் இறுகுதல் அல்லது கை, கால்கள் உதறுவது போன்ற அசைவுகளும் ஏற்படலாம். இவை பார்ப்பதற்கு வலிப்பு போலத் தோன்றினாலும், எல்லா நிகழ்வுகளும் காக்காய் வலிப்பு நோய் கிடையாது. சரியான காரணத்தை மருத்துவர் பரிசோதித்து கண்டறிவார்.

Child Breath Holding spell | குழந்தை மூச்சடக்க நிகழ்வு
Child Breath Holding spell | குழந்தை மூச்சடக்க நிகழ்வு
Q

குழந்தைக்கு இப்படி ஏற்பட்டால் உடனடியாக என்ன செய்ய வேண்டும்?

A
  • குழந்தையைத் தரையில் அல்லது பாதுகாப்பான சமதளத்தில் படுக்கவையுங்கள்.

  • அருகிலுள்ள கடினமான அல்லது கூர்மையான பொருட்களை அகற்றுங்கள்.

  • குழந்தையின் மூச்சையும் உடல் நிறத்தையும் கவனியுங்கள்.

  • நேரத்தைக் கணக்கிடுங்கள். சில நொடிகள் பெற்றோருக்கு மிக நீண்ட நேரமாகத் தோன்றலாம்.

  • குழந்தை சுயநினைவின்றி இருந்தால், பாதுகாப்பாகப் பக்கவாட்டில் திருப்பி படுக்க வைப்பது அவசியம்.

  • குழந்தையை உலுக்காதீர்கள், அடிக்காதீர்கள், முகத்தில் தண்ணீர் தெளிக்காதீர்கள். வாய்க்குள் விரல், கரண்டி அல்லது வேறு பொருட்களை வைக்காதீர்கள்.

Q

குழந்தைக்கு வலிப்பு வந்தால் என்ன செய்வது?

A

முதலில் குழந்தையின் பாதுகாப்பை உறுதிப்படுத்துங்கள். கைகள், கால்களைப் பிடித்து அசைவுகளை நிறுத்த முயற்சிக்காதீர்கள். வாயில் எதையும் திணிக்காதீர்கள். குழந்தை விரைவாகச் சுயநினைவுக்குத் திரும்பி இயல்பாக மூச்சுவிட்டால் அமைதியாகக் கண்காணியுங்கள்.

மூச்சு திரும்பவில்லை, குழந்தை இயல்பாக மூச்சுவிடவில்லை அல்லது பதிலளிக்கவில்லை என்றால் உடனடியாக அவசர மருத்துவ உதவியை அழைக்கவும். இயல்பான மூச்சு இல்லாத நிலையில், பயிற்சி பெற்றவர் அவசர உயிர்காக்கும் முதலுதவியைத் தொடங்க வேண்டும். ஒரு நிமிடத்திற்கும் மேலாக மூச்சு திரும்பாமல் இருப்பதோ, நீடித்த வலிப்போ ஏற்பட்டால் அவசரச் சிகிச்சை அவசியம்.

Q

நிகழ்வு முடிந்த பிறகு பெற்றோர் என்ன செய்ய வேண்டும்?

A

குழந்தை இயல்பான மூச்சுடன் முழுமையாகச் சுயநினைவுக்குத் திரும்புகிறதா என்பதைப் பாருங்கள். முதல் நிகழ்வாக இருந்தால், விரைவாகக் குழந்தை மருத்துவரிடம் அழைத்துச் செல்லுங்கள். நிகழ்வு எதற்குப் பிறகு ஏற்பட்டது, எவ்வளவு நேரம் நீடித்தது, குழந்தையின் முகம் நீலமானதா அல்லது வெளிறியதா, மயக்கம் அல்லது உடல் உதறல் இருந்ததா என்பவற்றை தெளிவாக மருத்துவரிடம் கூறுங்கள்.

Q

இரும்புச்சத்துக் குறைபாட்டுக்கும் இதற்கும் தொடர்பு உண்டா?

A

ஆம். இரும்புச்சத்துக் குறைபாடும் ரத்தசோகையும் மூச்சடக்க நிகழ்வுகளுடன் தொடர்புடையவை. மருத்துவர் தேவைக்கேற்ப ஹீமோகுளோபின், முழு ரத்த அணு எண்ணிக்கை, இரும்புச் சேமிப்பைக் குறிக்கும் ஃபெரிட்டின் போன்ற பரிசோதனைகளைப் பரிந்துரைக்கலாம். குறைபாடு உறுதிசெய்யப்பட்டால் இரும்புச்சத்து டானிக் சில மாதங்களுக்கு தர வேண்டும். மருந்தின் அளவும் காலமும் மருத்துவரால் தீர்மானிக்கப்பட வேண்டும்.

Q

மருத்துவர் என்னென்ன மதிப்பீடுகளைச் செய்வார்?

A

நிகழ்வின் வரலாறு, குழந்தையின் உடல் பரிசோதனை, வளர்ச்சி மற்றும் நரம்பியல் நிலை ஆகியவற்றை மருத்துவர் மதிப்பிடுவார். வழக்கமான மூச்சடக்க நிகழ்வுகளில் எல்லாக் குழந்தைகளுக்கும் அதிகமான பரிசோதனைகள் தேவையில்லை. ஆனால் நிகழ்வு வழக்கத்திற்கு மாறாக இருந்தால், உடற்பயிற்சியின்போது ஏற்பட்டால், குடும்பத்தில் இதயத் துடிப்பு கோளாறு இருந்தால் அல்லது வலிப்பு நோய் குறித்த சந்தேகம் இருந்தால் இதய மின்னலைப் பதிவு (ECG), இதய செயல்பாடு ஸ்கேன் (ECHO) உள்ளிட்ட பரிசோதனைகள் தேவைப்படலாம்.

இதையும் படியுங்கள்:
உங்கள் குழந்தைக்குக் காய்ச்சலா? இந்த 4 ஆபத்தான தொற்றுகள் பற்றி உங்களுக்குத் தெரியுமா?
Child Breath Holding spell | குழந்தை மூச்சடக்க நிகழ்வு
Q

இதைத் தடுக்க பெற்றோர் என்ன செய்யலாம்?

A

குழந்தையின் கோபம், பயம், ஏமாற்றம் போன்ற உணர்வுகளைப் புரிந்துகொண்டு அமைதியாக அணுகுங்கள். தூக்கம், உணவு, விளையாட்டு ஆகியவற்றில் சீரான பழக்கங்களை உருவாக்குங்கள். பெரும்பாலான குழந்தைகளுக்கு வயது அதிகரிக்கும்போது 4 வயதிற்கு பிறகு இந்த நிகழ்வுகள் குறைந்து மறைந்துவிடும்.

பெற்றோரே, குழந்தை மூச்சை நிறுத்திக் கொள்வது பார்க்க அதிர்ச்சி தரலாம், ஆனால் பதற்றம் வேண்டாம். பாதுகாப்பான முதலுதவி, சரியான மருத்துவ மதிப்பீடு, இரும்புச்சத்துக் குறைபாட்டைக் கவனித்தல் ஆகியவையே முக்கியம்.

இதையும் படியுங்கள்:
பறவைக் காய்ச்சல் குழந்தைகளுக்கு ஆபத்தா? பெற்றோர்கள் தெரிந்து கொள்ள வேண்டிய உண்மைகள்!
Child Breath Holding spell | குழந்தை மூச்சடக்க நிகழ்வு