

குழந்தைகளைக் காய்ச்சி எடுக்கும் ஆபத்தான நான்கு காய்ச்சல்கள்:
டெங்கு
பன்றிக்காய்ச்சல்
உண்ணிக் காய்ச்சல்
எலிக் காய்ச்சல்
காய்ச்சல் என்பது ஒரு நோய் அல்ல. உடலில் ஏதோ ஒரு பாதிப்பு நிகழ்கிறது என்பதை உணர்த்தும் எச்சரிக்கை மணி. குழந்தைகளுக்குக் காய்ச்சல் வந்தவுடன் வெப்பநிலையைக் குறைப்பதில் மட்டுமே பெற்றோர் கவனம் செலுத்தக் கூடாது. குறிப்பாக மழைக்காலத்திலும் அதற்குப் பிந்தைய காலத்திலும் பரவும் சில தொற்றுகள் குழந்தைகளின் உடல்நலத்தைப் பெரிதும் பாதிக்கக்கூடும். காய்ச்சலின் பின்னணியில் இருக்கும் காரணத்தைக் கண்டறிந்து, உரிய நேரத்தில் சிகிச்சை அளிப்பதே சிறந்த வழியாகும்.
காய்ச்சலுக்குப் பின்னால் மறைந்திருக்கும் நோய்கள்
வைரஸ், பாக்டீரியா, ஒட்டுண்ணிகள் எனப் பல நுண்ணுயிரிகள் காய்ச்சலை ஏற்படுத்துகின்றன. சாதாரண சளி, இருமல் முதல் இன்ஃப்ளூயன்ஸா, டெங்கு, ஸ்க்ரப் டைபஸ், லெப்டோஸ்பைரோசிஸ் போன்ற தீவிரத் தொற்றுகள் வரை பல காரணங்கள் இருக்கலாம். இவற்றின் ஆரம்ப அறிகுறிகள் ஒன்றுபோலத் தோன்றுவதால், காய்ச்சலின் அளவை மட்டும் வைத்து நோயின் தன்மையை முடிவு செய்ய முடியாது.
இன்ஃப்ளூயன்ஸா – சுவாசத்தைப் பாதிக்கும் தொற்று
இன்ஃப்ளூயன்ஸா என்பது காய்ச்சல், இருமல், தொண்டைவலி, தலைவலி, உடல்வலி போன்ற அறிகுறிகளை ஏற்படுத்தும் வைரஸ் தொற்று. இது இருமல், தும்மல் மற்றும் பாதிக்கப்பட்டவரின் சுவாசத் துளிகள் மூலம் பரவுகிறது. சில குழந்தைகளுக்கு நிமோனியா, மூச்சுத்திணறல் போன்ற சிக்கல்கள் ஏற்படலாம். குறிப்பாக இளம் குழந்தைகள் மற்றும் ஏற்கெனவே உடல்நலப் பிரச்சினைகள் உள்ளவர்கள் கூடுதல் கவனத்துடன் கண்காணிக்கப்பட வேண்டும்.
டெங்கு – காய்ச்சல் குறைந்தாலும் கவனம் தேவை
ஏடிஸ் கொசுக்கள் மூலம் பரவும் டெங்கு, திடீர் அதிகக் காய்ச்சல், கடுமையான தலைவலி, உடல்வலி, கண்களுக்குப் பின்னால் வலி, வாந்தி போன்ற அறிகுறிகளை ஏற்படுத்தலாம். சில குழந்தைகளுக்கு வயிற்றுவலி, தொடர்ந்து வாந்தி, இரத்தக்கசிவு, சோர்வு போன்ற எச்சரிக்கை அறிகுறிகள் தோன்றலாம். காய்ச்சல் குறையும் நேரத்தில்கூட டெங்கு தீவிரமடைய வாய்ப்புள்ளதால், மருத்துவர் அறிவுறுத்தும் கண்காணிப்பு மிகவும் அவசியம்.
ஸ்க்ரப் டைபஸ் – மறைந்திருக்கும் ஆபத்து
புதர்கள், புல்வெளிகள் போன்ற இடங்களில் வாழும் சிறிய உண்ணிகளால் பரவும் ஸ்க்ரப் டைபஸ், குழந்தைகளில் நீடித்த காய்ச்சல், தலைவலி, உடல்வலி, வாந்தி, இருமல் போன்ற அறிகுறிகளை ஏற்படுத்தும். கடித்த இடத்தில் கருமையான புண் போன்ற அடையாளம் (Eschar) காணப்படலாம். ஆனால் அது எல்லாக் குழந்தைகளிடமும் தென்படுவதில்லை. உரிய நேரத்தில் சிகிச்சை அளிக்காவிட்டால் நுரையீரல், கல்லீரல், சிறுநீரகம் உள்ளிட்ட உறுப்புகள் பாதிக்கப்படலாம்.
லெப்டோஸ்பைரோசிஸ் – மழைநீரில் மறைந்திருக்கும் தொற்று
எலிகள் உள்ளிட்ட விலங்குகளின் சிறுநீரால் மாசுபட்ட நீர் அல்லது மண்ணுடன் தொடர்பு ஏற்படும்போது லெப்டோஸ்பைரோசிஸ் பரவலாம். காய்ச்சல், கடுமையான தசைவலி, தலைவலி, கண்கள் சிவத்தல் போன்றவை இதன் அறிகுறிகள். சிலருக்கு மஞ்சள் காமாலை, சிறுநீரகப் பாதிப்பு, மூளைக்காய்ச்சல் போன்ற தீவிரச் சிக்கல்களும் ஏற்படலாம். வெள்ளநீர் அல்லது கழிவுநீரில் விளையாடும் குழந்தைகளுக்கு இத்தொற்று ஏற்படும் அபாயம் அதிகம்.
ஆபத்தை உணர்த்தும் அறிகுறிகள்
மூச்சுத்திணறல், மயக்கம், வலிப்பு, தொடர்ந்து வாந்தி, கடுமையான வயிற்றுவலி, இரத்தக்கசிவு, சிறுநீர் குறைதல், குழந்தையை எழுப்புவதில் சிரமம் போன்றவை உடனடி மருத்துவ உதவி தேவைப்படும் அறிகுறிகள். மூன்று மாதங்களுக்குக் குறைவான குழந்தைக்கு 38°C அல்லது அதற்கு மேல் காய்ச்சல் இருந்தால் அவசர மருத்துவப் பரிசோதனை அவசியம்.
சுயமருத்துவம் வேண்டாம்
காய்ச்சலைக் குறைக்கும் மருந்துகள் குழந்தையின் அசௌகரியத்தைத் தணிக்க உதவினாலும், நோயின் காரணத்தை நீக்குவதில்லை. மருத்துவரின் ஆலோசனையின்றி நுண்ணுயிர்க்கொல்லி மருந்துகளையோ, பல மருந்துகளின் கலவைகளையோ கொடுக்கக் கூடாது. போதுமான திரவ உணவு, ஓய்வு, சிறுநீர் வெளியேற்றத்தைக் கண்காணித்தல் ஆகியவை முக்கியம்.
தடுப்பதே சிறந்த பாதுகாப்பு
கொசுக்கள் பெருகும் இடங்களை அகற்றுதல், குடிநீரைச் சுத்தமாகப் பராமரித்தல், வெள்ளநீரில் குழந்தைகள் விளையாடுவதைத் தடுத்தல், கைகளை அடிக்கடி கழுவுதல், இருமல் மற்றும் தும்மல் ஒழுக்கத்தைக் கடைப்பிடித்தல் ஆகியவை தொற்றுகளைத் தடுக்கும். இன்ஃப்ளூயன்ஸாவுக்கு உரிய தடுப்பூசி குறித்து குழந்தை மருத்துவரிடம் ஆலோசனை பெறலாம்.
காய்ச்சல் தணிவது மட்டுமே குழந்தை குணமடைந்துவிட்டதற்கான அடையாளமல்ல. குழந்தையின் சுறுசுறுப்பு, உணவு உட்கொள்ளுதல், மூச்சுவிடும் தன்மை, சிறுநீர் வெளியேற்றம் ஆகியவற்றைக் கவனிப்பதே பெற்றோரின் முக்கியப் பொறுப்பு. காய்ச்சலைக் கண்டு அஞ்ச வேண்டாம். அதன் பின்னால் இருக்கும் ஆபத்தை அலட்சியப்படுத்தாமல் ஆரம்பத்திலேயே மருத்துவ உதவியை நாடி குழந்தைகளைப் பாதுகாப்போம்!