குழந்தைகளுக்கு காய்ச்சல் வலிப்பு வந்தால் செய்யக்கூடாத ஆபத்தான தவறுகள்!

வாயில் கரண்டி வைப்பதா? கை கால்களை பிடிப்பதா? மருத்துவர் எச்சரிக்கும் முதலுதவி உண்மைகள்.
Child Febrile Seizures | குழந்தைகளுக்கு காய்ச்சல் வலிப்பு
Child Febrile Seizures | குழந்தைகளுக்கு காய்ச்சல் வலிப்பு
Dr K. Ravanan M.D, Paediatrics

டாக்டர். க. இராவணன் அவர்கள் செங்கல்பட்டு மருத்துவக் கல்லூரியில் M.B.B.S. பட்டப்படிப்பினையும் சென்னை மருத்துவக் கல்லூரியில் குழந்தை நல மருத்துவத்தில் M.D (Paed) உயர் பட்டப்படிப்பினையும் படித்தவர். குழந்தைகள் நல மருத்துவத்தில் 28 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். தற்போது அரக்கோணத்தில் Dr. RAV’s Child Clinic என்ற பெயரில் குழந்தைகளுக்கான மருத்துவமனையினை நடத்தி வருகிறார். Indian Medical Association, Indian Academy of Pediatrics & Infectious Disease Chapter IAP முதலான அமைப்புகளின் வாழ்நாள் உறுப்பினராவார். தமிழ் இலக்கியத்தில் பெரும் ஈடுபாடு கொண்டவர். சென்னை மருத்துவக் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த போது நடைப்பெற்ற கவிதைப் போட்டியில் வெற்றி பெற்று கவிப்பேரரசு வைரமுத்து அவர்களின் கரங்களால் முதல் பரிசினைப் பெற்றுள்ளார். இவர் எழுதிய நூல்கள் ‘குழந்தை நலம்’ மற்றும் 'ஒரு குழந்தை நல மருத்துவரின் டைரி குறிப்புகள்' ஆகும்.

Updated on: 

இளம் பிள்ளைகளுக்கு வரும் காய்ச்சலுடன் கூடிய வலிப்பு பெற்றோர் பதற்றப்படாமல் தெரிந்துகொள்ள வேண்டியவற்றை குழந்தைகள் நல மருத்துவர் க. இராவணன் M.D. விளக்குகிறார்.

குழந்தைக்கு காய்ச்சல் அதிகரிக்கும் நேரத்தில் திடீரென கை, கால்கள் சுண்டி இழுக்க, கண்கள் மேல்நோக்கிச் செல்ல, குழந்தை சுயநினைவின்றி இருப்பதைக் காணும் பெற்றோருக்கு அந்த நேரம் மிகுந்த மன உளைச்சலை ஏற்படுத்தும் . ஆனால், முதலில் பதற்றத்தைத் தவிர்ப்பது அவசியம். மருத்துவத்தில் காய்ச்சல் வலிப்பு என்று அழைக்கப்படும் இந்நிலை, பொதுவாக 6 மாதம் முதல் 5 வயது வரையிலான குழந்தைகளில் காணப்படுகிறது. பெரும்பாலான குழந்தைகளுக்கு இது தற்காலிகமானது. வாழ்நாள் முழுவதும் வலிப்பு நோய் ஏற்படும் என்று அர்த்தமல்ல.

காய்ச்சல் வலிப்பின் தன்மை

மூளையில் நேரடியாகத் தொற்று இல்லாத நிலையில், காய்ச்சலுடன் தொடர்புடையதாக ஏற்படும் வலிப்பே காய்ச்சல் வலிப்பு. வளரும் குழந்தையின் மூளையின் தன்மை, மரபியல் காரணிகள் ஆகியவை இதன் பின்னணியில் இருக்கலாம். உடல் முழுவதும் வலிப்பு ஏற்பட்டு, 15 நிமிடங்களுக்குள் தானாக நின்று, அதே 24 மணி நேரத்தில் மீண்டும் ஏற்படாமல் இருந்தால் அது எளிய காய்ச்சல் வலிப்பு எனப்படுகிறது. இது பெரும்பாலும் தீவிரமான பாதிப்பை ஏற்படுத்துவதில்லை.

Child Febrile Seizures | குழந்தைகளுக்கு காய்ச்சல் வலிப்பு
Child Febrile Seizures | குழந்தைகளுக்கு காய்ச்சல் வலிப்பு

ஆனால், 15 நிமிடங்களுக்கு மேல் வலிப்பு நீடிப்பது, உடலின் ஒரு பகுதியில் மட்டும் வலிப்பு ஏற்படுவது, 24 மணி நேரத்திற்குள் மீண்டும் வலிப்பு வருவது அல்லது வலிப்பு முடிந்த பின்னரும் குழந்தை நீண்ட நேரம் சுயநினைவுக்குத் திரும்பாமல் இருப்பது போன்றவை சிக்கலான காய்ச்சல் வலிப்பாக இருக்கலாம். இத்தகைய நிலையில் குழந்தையை உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று மதிப்பீடு செய்வது அவசியம்.

வலிப்பு வரும் நேரத்தில் பெற்றோர் செய்ய வேண்டிய முதலுதவி

வலிப்பு ஏற்பட்டவுடன் குழந்தையை பாதுகாப்பான தரையில் ஒருபக்கமாகத் திருப்பிப் படுக்க வைக்க வேண்டும். அருகிலுள்ள ஆபத்தான பொருட்களை அகற்ற வேண்டும். வலிப்பு தொடங்கிய நேரத்தைக் குறித்துக்கொள்வது மிகவும் முக்கியம். குழந்தையின் வாயில் விரல், கரண்டி, துணி, தண்ணீர் அல்லது வேறு எந்தப் பொருளையும் திணிக்கக் கூடாது. நாக்கை கடித்து கொண்டு காயம் ஏற்படும் என்ற அச்சமும் தேவையில்லை. அதுபோல, கை, கால்களை இறுக்கமாகப் பிடித்து வலிப்பை நிறுத்த முயற்சிக்கக் கூடாது.

வலிப்பு 5 நிமிடங்களுக்கும் மேல் நீடித்தால் உடனடியாக அவசர மருத்துவ உதவியை நாட வேண்டும். சுவாசிப்பதில் சிரமம், தொடர்ந்து சுயநினைவு இல்லாமை, மீண்டும் மீண்டும் வலிப்பு அல்லது மூளைத் தொற்றை சந்தேகிக்கச் செய்யும் அறிகுறிகள் இருந்தாலும் தாமதிக்கக் கூடாது.

இதையும் படியுங்கள்:
பசும்பால் vs எருமைப்பால் vs பாக்கெட் பால்: குழந்தைகளுக்கு எது உண்மையிலேயே சிறந்தது?
Child Febrile Seizures | குழந்தைகளுக்கு காய்ச்சல் வலிப்பு

காய்ச்சல் மருந்தைப் பற்றிய உண்மை

பாராசிட்டமால் போன்ற காய்ச்சல் குறைக்கும் மருந்துகள் குழந்தையின் உடல் அசௌகரியத்தைக் குறைக்க உதவும். ஆனால், அவை காய்ச்சல் வலிப்பு மீண்டும் ஏற்படுவதை முழுமையாகத் தடுக்காது. எனவே மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் வலிப்பு தடுப்பு மருந்துகளைத் தொடர்ந்து கொடுப்பது தவறு.

சில குழந்தைகளுக்கு காய்ச்சல் வலிப்பு பலமுறை வரலாம். குறிப்பாக முதல் வலிப்பு இளம் வயதில் ஏற்பட்டிருந்தாலோ குடும்பத்தில் இதுபோன்ற பின்னணி இருந்தாலோ வாய்ப்பு அதிகமாக இருக்கலாம். இருப்பினும், பெரும்பாலான குழந்தைகளுக்கு 6 வயதுக்கு பிறகு வருவதில்லை. எளிய காய்ச்சல் வலிப்பு குழந்தையின் அறிவுத்திறன், மூளை வளர்ச்சி அல்லது எதிர்கால இயல்பான வாழ்க்கையை பாதிப்பதில்லை.

இதையும் படியுங்கள்:
40 வயதை தாண்டிவிட்டதா? உங்கள் பார்வையை பறிக்கும் 3 கண் நோய்கள்... தப்பிப்பது எப்படி?
Child Febrile Seizures | குழந்தைகளுக்கு காய்ச்சல் வலிப்பு

முடிவுரை

காய்ச்சல் வலிப்பு என்பது பெற்றோருக்கு மிகவும் மன அழுத்தத்தை தருவதாக இருக்கும். ஆனால் அந்த நேரத்தில் பதற்றத்தைவிட தெளிவான முதலுதவியே குழந்தைக்கு பாதுகாப்பு.

வலிப்பு வந்தபோது பயப்பட வேண்டாம், நேரத்தைக் கணியுங்கள், குழந்தையைப் பாதுகாப்பாகப் படுக்க வையுங்கள், தேவையான நேரத்தில் மருத்துவ உதவியைப் பெறுங்கள். பயப்பட ஏதுமில்லை.

logo
Kalki Online
kalkionline.com