

டாக்டர்… குழந்தைக்கு பசும்பால் கொடுக்கலாமா?
எருமைப்பால் அதிக சத்து என்று சொல்கிறார்களே!
பாக்கெட் பால் நல்லதா? கெட்டதா?
குழந்தையின் உணவைப் பற்றிப் பெற்றோர் அடிக்கடி கேட்கும் கேள்விகள் இவை.
மூன்று வகைப் பாலுமே ஒன்றல்ல. ஆனால் 'அதிக கலோரி’ என்றால் 'குழந்தைக்கு சிறந்தது' என்று பொருளல்ல.
குழந்தையின் வயது, செரிமானத் திறன், உடல் எடை, பால் ஒவ்வாமை போன்றவற்றைப் பொறுத்து கவனமாக தேர்வு செய்வது எப்படி என்பதை விளக்குகிறார் குழந்தைகள் நல மருத்துவர் க. இராவணன் M.D.
பசும்பால் – புனிதமானதா?
பசும்பாலில் பொதுவாக 100 மில்லியில் சுமார் 3 – 3.5 கிராம் புரதம், 3 – 4 கிராம் கொழுப்பு, 120 மில்லிகிராம் அளவில் கால்சியம் கிடைக்கிறது. எலும்பு மற்றும் பற்களின் வளர்ச்சிக்கு தேவையான கால்சியம், புரதம், பாஸ்பரஸ், வைட்டமின் பி வகை உயிர்ச்சத்துகள் ஆகியவற்றை வழங்குகிறது.
கொழுப்பு குறைவாக இருப்பதால், எருமைப்பாலுடன் ஒப்பிடும்போது பசும்பால் அடர்த்தி குறைவான பாலாக இருக்கலாம். என்றாலும் 'பசும்பால் எளிதில் செரிமானமாகும்' என்பது எல்லாக் குழந்தைகளுக்கும் பொருந்தும் விதி அல்ல.
எருமைப்பால் – அதிக ஆற்றலும் அதிக கொழுப்பும் உள்ளதால் அதிக சிறப்பானதா?
எருமைப்பாலில் புரதமும் கால்சியமும் பொதுவாக பசும்பாலை விட அதிகமாக இருக்கும். சுமார் 100 மில்லியில் 4 - 4.5 கிராம் புரதமும் 200 மில்லிகிராம் வரை கால்சியமும் கிடைக்கக்கூடும். ஆனால் அதன் மிகப் பெரிய வித்தியாசம் கொழுப்பு. எருமைப்பாலின் கொழுப்பு பசும்பாலை விட கிட்டத்தட்ட இரு மடங்கு இருக்கலாம். அதனால் இது அதிக கலோரி கொண்ட, அடர்த்தியான பாலாகிறது.
எனவே எருமைப்பால் 'அதிக சத்து' கொண்டது என்றாலும், எல்லாக் குழந்தைகளுக்கும் அதுவே சிறந்தது என்றும் சொல்ல முடியாது. அதிக கொழுப்பு காரணமாக சில குழந்தைகளுக்கு செரிமான பிரச்சனை ஏற்படலாம்.
பாக்கெட் பால் - என்ன சிறப்பு?
பாக்கெட் பால் என்பது தனி வகை மாட்டுப் பால் அல்ல. பொதுவாக பசு அல்லது எருமைப் பாலைக் காய்ச்சி நுண்ணுயிர் நீக்கி பாதுகாப்புடன் பதப்படுத்தி பாக்கெட்டில் அடைத்து விற்பனை செய்யப்படும் பால் அது. பால் எந்த விலங்கிலிருந்து கிடைக்கிறது என்பதுடன், அது முழுக் கொழுப்பு கொண்டதா, கொழுப்பு குறைக்கப் பட்டதா அல்லது முற்றிலும் கொழுப்பு நீக்கப் பட்டதா? போன்றவை தான் முக்கியம்.
நம்பகமான நிறுவனத்தின் பதப்படுத்தப்பட்ட பாலைத் தேர்வு செய்வது, சுகாதாரக் கோணத்தில் பாதுகாப்பானது தான். வீட்டிற்கு வரும் பாலை முறையாகக் காய்ச்சி பயன்படுத்துவது நல்லது.
ஒவ்வாமை இருந்தால்?
பசும்பால், எருமைப்பால் இரண்டிலுமே பால் புரதங்கள் இருப்பதால், பசும்பால் புரத ஒவ்வாமை உள்ள குழந்தைக்கு எருமைப்பால் பாதுகாப்பான மாற்று என எடுத்துக் கொள்ள முடியாது. பால் ஒவ்வாமை என்பது நம் உடலில் ஏற்படும் புரதத்திற்கான எதிர்வினை, பால் வகையை மாற்றுவது முழு தீர்வாகாது.
இரும்புச்சத்து எங்கே?
இங்கே ஒரு முக்கியமான உண்மை இருக்கிறது. பசும்பாலாக இருந்தாலும் எருமைப்பாலாக இருந்தாலும் இரும்புச்சத்து மிகவும் குறைவு. எனவே 'தினமும் நிறைய பால் குடித்தால் குழந்தைக்கு தேவையான எல்லாச் சத்துகளும் கிடைத்துவிடும்' என்பது தவறான எண்ணம்.
பருப்பு, கீரை, முட்டை, இறைச்சி போன்ற இரும்புச்சத்து நிறைந்த உணவுகளும் குழந்தையின் உணவில் இடம்பெற வேண்டும்.
ஒரு வயதுக்கு முன் குழந்தைகளுக்கு சிறந்தது ஒரே பால் அது தாய்ப்பால் தான்!
ஆறு மாதம் வரை தாய்ப்பால் மட்டுமே சிறந்த உணவு. ஆறு மாதத்திற்குப் பிறகு தாய்ப்பாலுடன் இணைந்து சத்தான இணை உணவு தொடங்க வேண்டும்.
ஒரு வயதுக்குக் குறைவான குழந்தைக்கு பசும்பால், எருமைப்பால் அல்லது பாக்கெட் பால் இவற்றை எதையும் கொடுக்க கூடாது, ஏனெனில் இரும்புச்சத்து குறைபாடு, பால் புரத ஒவ்வாமை, வயிற்றுப் போக்கு உள்ளிட்ட பல பிரச்சினைகள் ஏற்படலாம்.
முடிவாக…
ஒரு வயதைக் கடந்த பிறகு குழந்தைக்கு, தரமான பதப்படுத்தப்பட்ட பசும்பால், எருமைப்பால் அல்லது பாக்கெட் பால் ஏதாவது ஒன்றை மட்டும் கொடுக்கலாம். அதில் பிரச்சினை ஏற்பட்டால் மருத்துவரின் ஆலோசனை பெற்று மாற்றிக் கொள்ளலாம். ஆனால் குழந்தையின் உடல் எடை, உணவுப் பழக்கம், செரிமானம், ஒவ்வாமை போன்றவற்றைப் பார்த்து தேர்வு செய்வதே நல்லது.