Child Health - Dr. K. Ravanan M.D (Paed)
Child Health - Dr. K. Ravanan M.D (Paed)

Interview: "குழந்தைகளுக்கு தடுப்பூசி போட்ட பின்னர் பத்து நாட்களுக்கு மாட்டுப்பால் கொடுக்கக் கூடாதாமே... இது உண்மையா?"

டாக்டர்.க. இராவணன் M.D (Paed) குழந்தைகள் நல மருத்துவர்
Published on
Mangayar malar strip
Mangayar Malar

டாக்டர் க.இராவணன் குழந்தைகள் நல மருத்துவத்தில் 21 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். அரக்கோணத்தில் Dr.RAV’s Child Clinic என்ற பெயரில் குழந்தைகளுக்கான மருத்துவமனையினை நடத்தி வருகிறார். குழந்தைகள் நலம் தொடர்பான பல்வேறு கருத்தரங்களில் கலந்து கொண்டவர். மிகுந்த பணிகளுக்கிடையிலும் கல்கி வாசகர்களுக்காக குழந்தைகள் நலம் தொடர்பாக அவர் அளித்த நேர்காணல் இதோ உங்களுக்காக:

Dr. K. Ravanan M.D (Paed)
Dr. K. Ravanan M.D (Paed)
Q

ஒரு குழந்தையின் அழுகையை வைத்து அது பசியால் அழுகிறதா அல்லது உடல்நலம் சரியில்லாமல் அழுகிறதா என்பதை எப்படி கண்டுபிடிப்பது?

A

ஒரு குழந்தையின் அழுகையை வைத்து அது பசியால் அழுகிறதா அல்லது வேறு ஏதாவது காரணத்தால் அழுகிறதா என்பதை ஒரு மருத்துவரை விட சிறப்பாக அந்தந்த தாயால் கண்டுபிடிக்க இயலும். இதற்கு முன்னால் எப்போது பால் கொடுத்தார்கள் என்பதை வைத்தும் அவர்களுடைய மார்பகங்களில் பால் சுரந்து கனமாக இருப்பதை வைத்தும் இது பால் கொடுக்கும் நேரம் என்பதை முடிவு செய்யலாம். குழந்தை வாயை சப்பு கொட்டுதல், துணியைப்பிடித்து இழுத்தல், வயிறு தொய்ந்து போயிருத்தல் என்பதையெல்லாம் வைத்து குழந்தை பசியால் அழுகிறது என்பதைத் தெரிந்து கொள்ள முடியும். மற்ற காரணங்களால் அழுதால், அந்த சமயங்களில் தாய் பால் கொடுக்க முயற்சிக்கும் போது குழந்தை பால் குடிக்காது. திரும்பிக் கொண்டு கையை கால்களை உதைத்து வீறிட்டு அழும். அந்த சமயங்களில் வேறு என்ன காரணம் என்பதைப் பார்க்க வேண்டும். ஒருவேளை காய்ச்சல், காதுவலி, பூச்சிக்கடி, வயிற்றுவலி முதலான பிரச்னைகளாலும் குழந்தை அழலாம்.

குழந்தையை தோளில் போட்டு முதுகைத் தட்டிக் கொடுத்தால் ஏப்பம் வரும். அல்லது ஆசன வாயில் காற்று பிரியும். இப்படி நடந்தால் குழந்தை சகஜமாகிவிடும். மேலும் டயப்பர் ஈரமாக இருந்தாலோ அல்லது உறுத்தலாக இருந்தாலோ குழந்தை அழுது கொண்டே இருக்கும்.

பெரும்பாலான நேரங்களில் குழந்தை பசியால் அழும். தாய்மார்களால் அவர்கள் படித்தவர்களாக இருந்தாலும் சரி அல்லது படிக்காதவர்களாக இருந்தாலும் சரி, உள்ளுணர்வின் வழியாக குழந்தை பிறந்த சில நாட்களிலேயே எதற்காக அழுகிறது என்பதை அவர்களால் சுலபமாகப் புரிந்து கொள்ள முடியும். அனுபவத்தை வைத்து தாய்மார்களால் குழந்தை எதற்காக அழுகிறது என்பதைத் துல்லியமாக கண்டுபிடித்து விடஇயலும்.

இப்படியாக எந்த ஒரு காரணத்தையும் அவர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை என்றால் உடனடியாக மருத்துவரை அணுகவேண்டும். குழந்தை காய்ச்சல், சளியால் மூக்கடைப்பு, காதுவலி, மூச்சுவிடுதலில் சிரமம் போன்ற காரணங்களால் அழுதால் அதை மருத்துவர் கண்டுபிடித்து விடுவார். சில சமயங்களில் எதற்காக அழுகிறது என்பதை மருத்துவர்களாலும் சரியாக கண்டுபிடிக்க முடியவில்லை என்றால் இரத்த பரிசோதனை, யூரினரி இன்பெக்சன் காரணமாக அழுகிறதா என்பதை சிறுநீர் பரிசோதனைகளை செய்து பார்த்து கண்டுபிடிப்பார்கள்.

Q

குழந்தை பிறந்தது முதல் ஐந்து வயது வரை பலவிதமான தடுப்பூசிகள் போடப்படுகின்றன. இவை எல்லாமே அவசியமானதா ?

A

மருத்துவர்கள் தேவையின்றி தடுப்பூசிகளைப் போடுகிறார்கள் என்று தற்காலத்தில் பொதுமக்கள் நினைக்கிறார்கள். உலகெங்கும் ஆயிரமாயிரம் நோய்கள் உள்ளன. எல்லாவற்றிற்கும் தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்படவில்லை. அதிக அளவில் பாதிப்புகளை ஏற்படுத்தும் நோய்களுக்கும் உயிருக்கே ஆபத்தை விளைவிக்கும் நோய்களுக்கும் மட்டுமே தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. எனவே பிறந்தது முதல் ஐந்து வயது வரை முறையாக தடுப்பூசிகளை தவறாமல் போட வேண்டும். பெரும்பாலான தடுப்பூசிகள் அரசு மருத்துவமனைகளில் இலவசமாகவே கிடைக்கின்றன. சில தடுப்பூசிகள் அதாவது இன்ப்ளுயன்யா, டைபாய்ட், ஹெப்படைடிஸ் ஏ, சிக்கன்பாக்ஸ் முதலானவை அரசுமருத்துவமனைகளில் இன்னும் வரவில்லை. ஆனால் இவை மிகவும் அவசியமான தடுப்பூசிகள். அதனால் தடுப்பூசிகளைப் பற்றி யாருக்கும் எந்தவிதமாக சந்தேகமும் தேவையில்லை. ஏராளமான ஆராய்ச்சிகளுக்குப் பின்னர் பயன்பாட்டிற்கு வந்துள்ள தடுப்பூசிகள் எத்தனையோ ஆயிரம் உயிர்களைக் காப்பாற்றியுள்ளன. தடுப்பூசிகளைப் பற்றிய உங்களது சந்தேகங்களை உங்கள் மருத்துவரிடம் கேட்டு தெளிவுப்படுத்திக் கொள்ளலாம்.

Q

தடுப்பூசி போட்ட பின்னர் பத்துநாட்களுக்கு மாட்டுப்பால் கொடுக்கக் கூடாது என்ற ஒரு கருத்து நிலவுகிறது. இது உண்மையா ?

A

இது தவறான கருத்து. மாட்டுப்பாலுக்கும் தடுப்பூசிகளுக்கும் எந்த ஒரு தொடர்பும் இல்லை. தடுப்பூசி போட்ட பின்னர் வழக்கமாகத் தரும் உணவுகளைக் கொடுக்கலாம். அதில் தாய்ப்பால் உடனடியாகவும் கொடுக்கலாம். மாட்டுப்பாலும் கொடுக்கலாம். தடுப்பூசி போட்ட பின்னர் அந்த இடத்தில் வீக்கமோ வலியோ அல்லது காய்ச்சலோ ஏற்படலாம். அத்தகைய சமயங்களில் பாராசிட்டாமால் கொடுத்தால் போதும். எனவே தாராளமாக மாட்டுப்பாலைத் தரலாம்.

Q

மழைக் காலங்களில் குழந்தைகளைத் தாக்கும் நோய்கள் யாவை?

A

மழை, குளிர், பனிக்காலங்களில் குளிர்ச்சியான சூழல் நிலவும். காலநிலை வேறுபாடுகளால் பலவிதமான நோய்கள் ஏற்பட வாய்ப்புண்டு. ப்ளு காய்ச்சல், சளி, இருமல், தலைவலி, மூக்கடைப்பு முதலான பிரச்னைகளும் வீசிங் அதாவது ஆஸ்துமா முதலான பிரச்னைகளும் குழந்தைகளுக்கு ஏற்படும். கூடுமானவரை மழையில் நனையாமல் அல்லது பனி நேரத்தில் வெளியே செல்லாமல் தவிர்ப்பது நல்லத. ஒருவேளை செல்ல நேரிட்டால் குடை கொண்டு செல்லுதல், குல்லா அணிதல், மழைக் கோட்டுகளை அணிந்து செல்லுதல் முதலான தற்காப்பு ஏற்பாடுகளோடு செல்ல வேண்டும். பனிக்காற்று மூக்கில் நுழைவதன் மூலம் சில நோய்கள் குழந்தைகளுக்கு ஏற்படலாம். சிறிய அளவில் காய்ச்சல், சளி, இருமல் முதலானவை ஏற்பட்டால் உடனடியாக குழந்தை நல மருத்துவரை அணுகி எளிதில் சரி செய்து கொள்ளலாம்.

இதுமட்டுமின்றி மழைக்காலங்களில் தண்ணீர் மூலமாக காலரா (Cholera), லெப்டோஸ்பைரோசிஸ் (Leptospirosis) (எலிக்காய்ச்சல்), அமீபியாசிஸ் (Amebiasis), ஹெப்படைட்டிஸ் சி (Hepatitis C) முதலான நோய்கள் பரவக்கூடும்.

மழைக்காலங்களில் தண்ணீரை காய்ச்சி ஆறவைத்து அருந்துவது சிறந்தது. இதன் மூலம் பல நோய்கள் குழந்தைகளைத் தாக்காமல் தடுத்துவிட முடியும். மழைக்காலங்களில் பூச்சிகளால் குறிப்பாக கொசுக்களால் பரவும் மலேரியா, டெங்கு, சிக்கன்குனியா முதலான நோய்களைத் தடுத்துக் கொள்ள கொசுவலையைப் பயன்படுத்த வேண்டும். முடிந்தவரை உடைகளால் உடலை முழுவதுமாக மறைப்பதன் மூலம் கொசுக்கடியினைத் தவிர்க்கலாம். ஐஸ்கிரீம் கூல்டிரிங்க்ஸ் முதலானவற்றைக் கூடுமானவரைத் தவிர்த்து வீட்டில் தயாரிக்கப்பட்ட உணவுகளை உண்ணுவதன் மூலம் மழைக்கால நோய்களை நாம் தடுக்க முடியும். இதுமட்டுமின்றி இன்புளூயன்சா (Influenza), நிமோனியா (Pneumonia) முதலான தடுப்பூசிகளை எடுத்துக் கொள்ளும் போது அந்த நோய்களையும் குழந்தைகளைத் தாக்காமல் தடுத்துவிட முடியும்.

Q

குழந்தைக்கு எந்த வயது வரை தாய்ப்பால் கொடுக்கலாம்?

A

தாய்ப்பாலைப் பொருத்தவரை உலக சுகாதார அமைப்பு (World Health Organization) ஒரு தெளிவான வழிகாட்டுதலை வரையறுத்துள்ளது. உலகில் உள்ள அனைத்து நாடுகளிலும் பிறக்கும் குழந்தைகளுக்கு அவர்கள் எந்த மொழி மதம் இனத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் முதல் ஆறு மாதங்களுக்கு தாய்ப்பால் மட்டுமே போதுமானது. முதல் ஆறு மாதங்களுக்குத் தண்ணீர் கூட அவசியம் இல்லை. ஆறு மாதங்களுக்குப் பின்னர் வீட்டில் தயாரிக்கும் உணவினை மெல்ல மெல்ல கொடுக்க ஆரம்பிக்கலாம். ஆனாலும் தாய்ப்பால் தருவதை நிறுத்தவே கூடாது. தொடர்நது இரண்டு வயது வரை தாய்ப்பாலைக் கொடுக்க வேண்டும்.

தடுப்பூசிகள் சில நோய்களை அதாவது பத்து அல்லது பதினைந்து நோய்களை மட்டுமே தடுக்கும் ஆற்றலை உடையவை. ஆனால் உலகில் ஆயிரக்கணக்கான நோய்கள் உள்ளன. இவ்வாறாக எல்லாதவிதமான நோய்களையும் தடுக்கக்கூடிய ஆன்டிபாடீஸ் அதாவது நோய் எதிர்ப்புசக்தி தாய்ப்பாலில் மட்டுமே உள்ளது என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். இரண்டு வருடங்கள் தொடர்ந்து தாய்ப்பால் கொடுப்பதன் மூலம் பலவிதமான நோய்களிலிருந்து அது குழந்தைகளைக் காக்கும். குழந்தையும் ஆரோக்கியமாக மகிழ்ச்சியான சூழ்நிலையில் வளரும்.

இதையும் படியுங்கள்:
உலக தாய்ப்பால் வாரம் - 1: தந்தையின் பங்கு என்ன?
Child Health - Dr. K. Ravanan M.D (Paed)
Q

ஒரு குழந்தை நாணயத்தையோ அல்லது வேறு ஏதோ ஒரு சிறு பொருளையோ விழுங்கிவிட்டால் பெற்றோர் உடனே செய்ய வேண்டிய விஷயம் என்ன ?

A

குழந்தைகள் நாணயங்கள், பட்டன் பேட்டரீஸ், நட்டு, போல்ட்டு, சிறுசிறு விளையாட்டு சாமான்கள் முதலானவற்றை வாயில் போட்டுக்கொள்ளுவது இயல்பாக அடிக்கடி நடக்கும் சம்பவங்களாகும். இது பெரும்பாலும் நமது கவனமின்மையின் காரணமாக நடைபெறும் விஷயமாகும். குழந்தைகள் பொதுவாக ஆறு மாதம் முதல் இரண்டு வயது வரை எதையும் வாயில் வைக்கும் இயல்புடையவை. இவ்வாறு வாயில் வைக்கும் போது அவை அவர்கள் அறியாமல் வாய்க்குள் சென்று விடும். இவ்வாறு உள்ளே செல்லும் பொருள்கள் தொண்டையிலோ அல்லது சுவாசக்குழாயிலோ சிக்கிக் கொள்ளும். இது மிகவும் ஆபத்தான விஷயம். இப்படி நடந்தால் உடனடியாக குழந்தையை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல வேண்டும். மருத்துவர் உடனடியாக எக்ஸ்ரே அல்லது ஸ்கேனை எடுத்து உள்ளே சென்ற பொருள் எங்கு எந்த நிலையில் இருக்கிறது என்பதைக் கண்டறிந்து உடனடியாக சிகிச்சை அளிப்பார்கள். இது ஒரு மெடிக்கல் எமர்ஜென்சி. எனவே குழந்தை எதையாவது விழுங்கிவிட்டாலோ அல்லது விழுங்கிவிட்டது என்ற சந்தேகம் எழுந்தாலோ யோசிக்காமல் உடனடியாக மருத்துவரை சந்திக்க வேண்டும்.

இதையும் படியுங்கள்:
குழந்தைகளுக்கான ஓர் உலகம்! படிக்கவும் எழுதவும் ஊக்குவிக்கும் உன்னத தளம்!
Child Health - Dr. K. Ravanan M.D (Paed)
Q

குழந்தைகளின் மன ஆரோக்கியம் பேணுவது எப்படி ?

A

தற்காலத்தில் டிஜிட்டல் அடிமைத்தனம் (Digital Addiction) அல்லது திரைநேரம் (Screen Time) என்பது ஒரு முக்கியமான பிரச்னையாக உள்ளது. குழந்தைகளுக்கு ஆரோக்கியமான உணவுகளைக் கொடுப்பதைப் போல அவர்களுக்கு ஆரோக்கியமான பழக்க வழக்கங்களைக் கற்றுத்தர வேண்டும். மொபைல் போன்களை அதிக அளவில் பயன்படுத்துவதன் மூலம் கண் பாதிப்பு ஏற்படுகிறது. இவ்வாறாக டிஜிட்டல் அடிமைத்தனம் காரணமாக வீட்டிற்குள்ளேயே தொடர்ந்து பலமணிநேரம் முடங்கி இருப்பதன் மூலம் உடல்பருமன் முதலான பிரச்னைகளும் ஏற்படுகின்றன. திரைநேரத்தின் போது தங்களையும் அறியாமல் ஜங்க்புட் எனப்படும் துரித உணவுகளைச் சாப்பிடுவதன் மூலம் பல உடல்நலக் கோளாறுகள் ஏற்படுகின்றன. இன்றைய இணைய உலகத்தில் சிறுவர்கள் பல நல்ல விஷயங்களையும் தெரிந்து கொள்ளுகிறார்கள். சிறுவர்கள் தங்கள் படிப்பு தொடர்பாக மொபைல் அல்லது இணையத்தை அரைமணி நேரம் மட்டுமே பயன்படுத்தலாம். பெற்றோர்கள் சிறுவர்கள் பயன்படுத்தும் திரைநேரத்தை கண்காணிப்பது மிகவும் அவசியமாகும். குழந்தைகள் ஒன்றாகக் கூடி விளையாடும் வழக்கத்தை ஏற்படுத்துவதன் மூலம் இந்த பிரச்னையை சமாளிக்கலாம்.

குழந்தைகள் எட்டு வயதை அடைந்ததும் நல்ல கதைப் புத்தகங்களைப் படிக்கும் வழக்கத்தை ஏற்படுத்த வேண்டும். தினசரி செய்தித்தாள் தலைப்புச் செய்திகளை படிக்க பழக்கத்தையும் ஏற்படுத்த வேண்டும். விளையாட்டுகளில் அவர்களை ஈடுபடச் செய்து அதில் ஈடுபடுத்த வேண்டும். வயலின் கிடார் முதலான இசைக்கருவிகளை கற்கச் செய்வதும் நல்லது. இதையெல்லாம் செய்தால் நல்ல ஆரோக்கியத்தோடு நல்ல குடிமகனாகவும் வளர்ந்து பெற்றோருக்கும் நாட்டுக்கும் பெருமை சேர்ப்பார்கள்.

logo
Kalki Online
kalkionline.com