

“டாக்டர், குழந்தைக்கு இப்போ சளி இருக்கு… தடுப்பூசியை அடுத்த மாதம் போட்டுக்கலாமா?”
“ஒரு தடுப்பூசி தவறிப் போய்விட்டது… இனிமேல் போட வேண்டிய அவசியம் இருக்கிறதா?”
“ஒரே நாளில் இரண்டு தடுப்பூசி போட்டால் குழந்தையின் உடம்பு தாங்குமா?”
இப்படிப்பட்ட கேள்விகள் குழந்தை நல மருத்துவர்களிடம் அடிக்கடி கேட்கப்படுகின்றன. ஆனால் அறிவியல் கூறுவது மிகவும் தெளிவானது. தடுப்பூசியை தேவையின்றி தாமதப்படுத்துவதோ அல்லது தவிர்ப்பதோ, குழந்தையை ஆபத்தான தொற்றுநோய்களுக்கு ஆளாகிட நேரும் என்று விளக்குகிறார் குழந்தைகள் நல மருத்துவர் க. இராவணன்.
தடுப்பூசிகள் ஒரு குறிப்பிட்ட வயதில் போடப்படுவதற்குக் காரணம் உண்டு. அந்த வயதில்தான் சில தொற்றுநோய்கள் குழந்தைகளை மிகவும் கடுமையாகப் பாதிக்கும் அபாயம் அதிகம். எனவே, தேசிய தடுப்பூசி அட்டவணையும் இந்திய குழந்தை மருத்துவ சங்கத்தின் (IAP) பரிந்துரைகளும் அறிவியல் ஆய்வுகளின் அடிப்படையிலேயே உருவாக்கப்பட்டுள்ளன.
பல பெற்றோர்கள், “குழந்தை வீட்டில்தான் இருக்கிறது; பள்ளிக்குப் போகவில்லை. அதனால் தடுப்பூசியை தள்ளிப் போடலாம்” என்று நினைக்கிறார்கள். இது தவறான கருத்து. தட்டம்மை (Measles), கக்குவான் இருமல் (Pertussis), நிமோனியா, ஹெப்படைட்டிஸ்-பி போன்ற பல தொற்றுகள் குடும்ப உறுப்பினர்கள், உறவினர்கள் மூலமாகவே காற்று, நேரடி தொடர்பு ஆகியவற்றால் பரவக்கூடும்.
மேலும், ஒரு தடுப்பூசி தவறிவிட்டால் ஆரம்பத்திலிருந்து மீண்டும் போட வேண்டியதில்லை. Catch-up Vaccination எனப்படும் சிறப்பு அட்டவணை மூலம் மருத்துவரின் ஆலோசனையுடன் மீதமுள்ள தடுப்பூசிகளை பாதுகாப்பாக நிறைவு செய்யலாம். எனவே, தாமதமானாலும் தடுப்பூசியை முழுமையாக முடிப்பது கட்டாயம்.
உலக சுகாதார நிறுவனம் (WHO) கூறுவதாவது...
ஆண்டுதோறும் உலகம் முழுவதும் பல மில்லியன் குழந்தைகளின் உயிரை தடுப்பூசிகள் காப்பாற்றுகின்றன. தடுப்பூசி போடப்படாத அல்லது முழுமையாக போடப்படாத குழந்தைகளுக்கே மிக அதிகமாக தொற்றுநோய்கள் ஏற்படுகின்றன.
சில பெற்றோர்கள், “ஒரே நாளில் இரண்டு அல்லது மூன்று தடுப்பூசிகள் போடுவது பாதுகாப்பானதா?” என்று அச்சப்படுகிறார்கள். அறிவியல் ஆதாரங்கள் கூறுவது, குழந்தையின் நோய் எதிர்ப்பு அமைப்பு தினமும் ஆயிரக்கணக்கான கிருமிகளை சமாளிக்கும் திறன் கொண்டது. எனவே பரிந்துரைக்கப்பட்ட பல தடுப்பூசிகளை ஒரே நாளில் அளிப்பது பாதுகாப்பானதும், பயனுள்ளதுமாகும். குழந்தையின் உடல் நிச்சயம் தாங்கும்.
பெற்றோர் நினைவில் கொள்ள வேண்டியவை:
தடுப்பூசி தேதியை ஒருபோதும் தவறவிடாதீர்கள்.
லேசான சளி, இருமல் அல்லது குறைந்த அளவு காய்ச்சல் இருந்தாலும் பெரும்பாலான தடுப்பூசிகளை தள்ளிப் போட வேண்டிய அவசியமில்லை.
ஒரு தடுப்பூசி தவறிவிட்டால் மருத்துவரை அணுகி Catch-up Vaccination திட்டத்தைப் பின்பற்றுங்கள்.
சமூக வலைத்தளங்களில் வரும் தவறான தகவல்களை நம்பாமல், குழந்தை நல மருத்துவரின் ஆலோசனையை மட்டும் பின்பற்றுங்கள்.
தடுப்பூசி பதிவேட்டை (Immunization Record) பாதுகாப்பாக வைத்திருந்து ஒவ்வொரு முறை மருத்துவரை பார்க்கும்போதும் எடுத்துச் செல்லுங்கள்.
முடிவுரை
தடுப்பூசியை தாமதப்படுத்துவது என்பது ஒரு தேதியை மட்டும் தள்ளிப் போடுவது அல்ல; அந்தக் காலத்தில் குழந்தையை தொற்றுநோய்களுக்கு எதிராக பாதுகாப்பின்றி விடுவதுமாகும்.
தடுப்பூசிகளை தவறவிடாதீர்கள்…
தள்ளிப் போடாதீர்கள்…
சரியான வயதில், சரியான தடுப்பூசியே குழந்தைக்கு சிறந்த பாதுகாப்பு.
ஏனெனில்…
தொற்றுநோய் வருமா என்று காத்திருப்பதைவிட, தடுப்பூசி மூலம் முன்கூட்டியே பாதுகாப்பது அறிவார்ந்த பெற்றோரின் அடையாளம்.
'வந்தபின் பார்ப்போம்' என்பதுஅசட்டுத்தனம்
'வருமுன் காப்போம்' என்பது புத்திசாலித்தனம்!