பள்ளி மாணவன் மயங்கி விழுந்தால் என்ன செய்ய வேண்டும்? தெரிந்து கொள்ளுங்கள் முதலுதவி!

காலையில் சாப்பிடாமல் சென்ற மாணவன் திடீரென மயக்கம்; மருத்துவர் தரும் அத்தியாவசிய முதலுதவி வழிகாட்டுதல்கள்.
Student First Aid | முதலுதவி
Student First Aid | முதலுதவிAI Image
Updated on

காலையுணவு சாப்பிடாமை, நீரிழப்பு, வெயிலில் நீண்ட நேரம் நிற்பது, பயம், ரத்தசோகை போன்ற காரணங்களால் பள்ளி மாணவர்கள் மயங்கி விழலாம். அரிதாக இதய நோய், வலிப்பு, மூளைக் கோளாறுகளும் காரணமாக இருக்கலாம். எனவே அனைவரும் அறிந்திருக்க வேண்டிய முதலுதவியை மருத்துவர் க. இராவணன் குழந்தைகள் நல மருத்துவர் விளக்குகிறார்.

ஒரு நாள் காலை சுமார் 10 மணியளவில், ஒரு பள்ளி ஆசிரியர் பதற்றத்துடன் 10 வயது சிறுவனை என் கிளினிக்கிற்கு அழைத்து வந்தார்.

“டாக்டர், காலையில பள்ளி பிரேயர் பரேட்ல நின்னுகிட்டு இருந்தான். திடீர்னு மயங்கி கீழே விழுந்துட்டான். ஒரு நிமிஷத்துக்குள்ள முழிச்சுட்டான். ஆனா எங்களுக்கு ரொம்ப பயமாயிடுச்சு. அதான் நேரா கூட்டிட்டு வந்துட்டோம்,” என்றார்.

நான் அந்தச் சிறுவனைப் பரிசோதித்தேன்.

“இப்போ எப்படி இருக்கே?”

“நல்லா இருக்கேன் டாக்டர்.”

“வாந்தி எடுத்தியா?”

“இல்ல.”

“கை, கால் இழுத்துச்சா?”

“இல்ல சார்,” என்றார் ஆசிரியர்.

காய்ச்சல் இல்லை.

ரத்த அழுத்தம் சரியாக இருந்தது.

நாடித்துடிப்பு சீராக இருந்தது.

ரத்த சர்க்கரை அளவும் இயல்பாக இருந்தது.

எல்லா நரம்பியல் பரிசோதனைகளும் நன்றாக இருந்தன.

பெற்றோரின் பதற்றத்தைக் கருத்தில் கொண்டு, தேவையான இரத்தப் பரிசோதனைகள் மற்றும் மூளை MRI பரிசோதனையும் செய்தோம்.

நல்லவேளையாக அனைத்தும் இயல்பாக இருந்தன.

அது ஒரு Simple Syncope — அதாவது, சில நொடிகளுக்கு மூளைக்கு செல்லும் இரத்த ஓட்டம் குறைவதால் ஏற்படும் சாதாரண மயக்கம்.

அந்த ஆசிரியர் பெருமூச்சு விட்டார்.

“எதனால டாக்டர் இப்படியாச்சு?”

“காலையில சாப்பிடாம வந்தானா?”

சிறுவன் மெதுவாகத் தலையசைத்தான்.

“கொஞ்சம் வெயிலும் அதிகமா இருந்துச்சு.”

அதுவே காரணமாக இருந்திருக்கலாம்.

Student First Aid | முதலுதவி
Student First Aid | முதலுதவி

உண்மையில், பள்ளிகளில் குழந்தைகள் மயங்கி விழுவதற்கு பல காரணங்கள் இருக்கலாம்.

சில நேரங்களில் காலையுணவு சாப்பிடாமல் வருவது, நீரிழப்பு, வெயிலில் நீண்ட நேரம் நிற்பது, பயம், அதிக உணர்ச்சி வசப்படுதல், ரத்தசோகை போன்ற சாதாரண காரணங்களால் மயக்கம் ஏற்படலாம்.

அரிதாக, இதய நோய்கள், வலிப்பு நோய், மூளைக் கோளாறுகள், குறைந்த ரத்த சர்க்கரை, கடுமையான தொற்று போன்ற காரணங்களாலும் மயக்கம் ஏற்படலாம். எனவே ஒவ்வொரு குழந்தையையும் மருத்துவர் பரிசோதிப்பது அவசியம்.

ஒரு குழந்தை பள்ளியில் மயங்கி விழுந்தால் ஆசிரியர்கள் என்ன செய்ய வேண்டும்? ✅

முதலில் பதற்றப்படாமல் குழந்தையை தரையில் மல்லாந்து படுக்க வைக்க வேண்டும்.

கால்களை சுமார் 30 செ.மீ. உயரமாகத் தூக்கி வைக்கலாம். இதனால் மூளைக்கு இரத்த ஓட்டம் அதிகரிக்கும்.

கழுத்தை இறுக்கும் டை, பெல்ட் அல்லது இறுக்கமான ஆடைகளை தளர்த்த வேண்டும்.

குழந்தை சுவாசிக்கிறதா, நாடித்துடிப்பு இருக்கிறதா என்பதை கவனிக்க வேண்டும்.

நன்கு காற்றோட்டம் உள்ளவாறு பார்த்துக்கொள்ள வேண்டும்.

என்ன செய்யக் கூடாது? ❌

மயக்கத்தில் இருக்கும் குழந்தையின் வாயில் தண்ணீர், பால் அல்லது எந்த திரவத்தையும் ஊற்றக் கூடாது.

முகத்தில் தண்ணீர் அடிக்க வேண்டாம்.

கூட்டமாகச் சூழ்ந்து நிற்க வேண்டாம்.

கன்னத்தில் அறையவோ, பலமாக உலுக்கவோ கூடாது.

இதையும் படியுங்கள்:
தனியாக இருக்கும்போது மாரடைப்பு வந்தால் உயிர் தப்புவது எப்படி?
Student First Aid | முதலுதவி

எப்போது உடனடியாக ஆம்புலன்ஸ் அழைக்க வேண்டும்?

மயக்கம் ஒரு நிமிடத்திற்கு மேல் நீடித்தால்.

கை, கால் இழுக்கும் வலிப்பு ஏற்பட்டால்.

மூச்சு விடுவதில் சிரமம் இருந்தால்.

தலையில் பலமாக அடிபட்டிருந்தால்.

மார்பு வலி அல்லது இதயத் துடிப்பு அதிகமாக இருந்தால்.

மயக்கம் தெளிந்த பிறகும் குழந்தை குழப்பமாக இருந்தால்.

நீரிழிவு, இதய நோய் அல்லது வலிப்பு நோய் வரலாறு இருந்தால்.

அன்று அந்தச் சிறுவனிடம் நான் ஒரு கேள்வி கேட்டேன்.

“காலையில என்ன சாப்பிட்டே?”

அவன் வெட்கத்துடன் சிரித்துக்கொண்டே,

“சாப்பிடல டாக்டர்… லேட் ஆயிடுச்சு,” என்றான்.

அதைக் கேட்ட ஆசிரியர் அவன் தோளில் கை வைத்து,

“இனிமேல் காலை சாப்பாடு சாப்பிடாம ஸ்கூலுக்கு வந்தா, முதல்ல என்னைத் தான் பார்க்கணும்!” என்றார்.

அறையில் இருந்த அனைவரும் சிரித்தோம்.

இதையும் படியுங்கள்:
காபியில் நெய்யா? ஃபிட்னஸ் பிரியர்களை ஈர்க்கும் 'புல்லட் காபி'யின் மிரட்டலான பலன்கள்!
Student First Aid | முதலுதவி

முதலுதவி தெரிந்திருப்பது மருத்துவருக்கு மட்டுமல்ல…

ஆசிரியர்களுக்கும்…

பெற்றோருக்கும்…

ஏன், மாணவர்களுக்கும் கூட அவசியம்.

ஒரு நிமிடத்தில் செய்யப்படும் சரியான முதலுதவி…

ஒரு குழந்தையின் உயிரைக் காப்பாற்றலாம்.

மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வது முக்கியம்…

ஆனால், அதற்கு முன் செய்யப்படும் சரியான முதலுதவிதான் அதைவிட முக்கியம்.

logo
Kalki Online
kalkionline.com