அந்தக் காலத்தில் பழைய சோற்றுக்கு நாலு சின்ன வெங்காயத்தை சைட் டிஷ்சாக கடித்து சாப்பிட்டுவிட்டு உற்சாகமாக வேலைகளைப் பார்க்கக் கிளம்பி விடுவார்கள். நோய் நொடியின்றி அவர்களைக் காத்தது சின்ன வெங்காயம். சரும வியாதிகளுக்கு கைகண்ட மருந்தாகப் பயன்படும் சின்ன வெங்காயம் சமையலுக்கு அதிக ருசியும் தருகிறது. வெங்காயத்தை நறுக்கும்போது கண்களில் வரும் கண்ணீருக்கு அதில் உள்ள காரத்தன்மையைத் தரும், ‘அலைல் புரோப்பைல் டை சல்பைடு’ என்ற எண்ணெய்தான் காரணம். இதுவே வெங்காயத்தின் மணம் மற்றும் நெடிக்கும் காரணமாகிறது.
வெங்காயத்தில் சின்ன வெங்காயம், பெரிய வெங்காயம் என்று இரண்டு வகை உண்டு. பெரிய வெங்காயம் சமைக்க எளிதாக இருக்கும். ஆனால், உடல் நலம் காக்கும் சத்துக்கள் அதிகம் உள்ளது சின்ன வெங்காயத்தில்தான். 100 கிராம் சின்ன வெங்காயத்தில் சுமாராக நீர்ச்சத்து 82 சதவிகிதம், புரதம் 1.2 சதவிகிதம், கார்போஹைட்ரேட் 11.1 சதவிகிதம், 47 மில்லி கிராம் கால்சியமும், 50 மில்லி கிராம் பாஸ்பரஸ், 0.7 மில்லி கிராம் இரும்பு சத்தும், வைட்டமின் B, வைட்டமின் C, கொழுப்பு, தாது உப்புகள், நார்ச்சத்து ஆகியவை உள்ளன என்கின்றனர் ஊட்டச்சத்து நிபுணர்கள்.
ஜலதோஷம், தும்மல் வந்தால் ஒரு சின்ன வெங்காயத்தை நன்கு மென்று தின்று வெந்நீர் குடித்தால் பாதிப்பு குறையும். பெண்களுக்கு அடிக்கடி ஏற்படும் நீர்க்கடுப்புக்கு வெங்காயம் சிறந்த மருந்து. வெங்காயத்தை இரண்டாக நறுக்கி சிறிது தூய நல்லெண்ணெய் விட்டு வதக்கி, தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் இரத்த அழுத்தம் சீராகி இதயம் பலப்படும்.
குறிப்பாக, மூலநோய் பாதிப்பு உள்ளவர்கள் உணவில் அதிகமாக சின்ன வெங்காயம் சேர்ப்பது நல்லது. தினம் மோரில் சின்ன வெங்காயத்தை நறுக்கி குடிப்பது நிறைந்த பலன் தரும் ஒன்று. வெங்காயத்தை சாறாக எடுத்து அருந்துவதால் பல உடல் பாதிப்புகள் நிவாரணம் பெறுகின்றன. உதாரணமாக, பல்வலி, ஈறுவலி போன்றவை ஏற்பட்டால் சிறிது வெங்காயச் சாற்றை பஞ்சில் நனைத்து தடவி வர வலி குறையும். தேள் கொட்டிய இடத்தில் வெங்காயச் சாறை தேய்த்தால் விஷம் ஏறாது. விஷ முறிவுக்கு சின்ன வெங்காயம் சிறந்ததாக உள்ளது.
சரும பாதிப்பு குணமாக வெங்காயச் சாறு உதவுகிறது. படை, தேமல், கட்டிகள் போன்றவற்றின் மீது இந்தச் சாற்றைக் தடவினால் மாறுதல் தெரியும். வெங்காயச் சாறுடன் கடுகு எண்ணெய் கலந்து தடவினால் வாய்வு காரணமாக மூட்டுக்களில் ஏற்படும் வலி குணமாகும் என்கின்றனர்.
இவ்வளவு நன்மைகள் இருந்தாலும் ஏற்கெனவே நீரிழிவு மருந்துகளை எடுத்துக் கொள்பவர்களுக்கு வெங்காய சாறு இரத்த சர்க்கரை அளவை அதிகமாக குறைக்கும் வாய்ப்பு உண்டு என்பதால் மருத்துவரிடம் ஆலோசனை பெற்றுக்கொள்வது நல்லது.
சமையல் மூலம் உள்ளுறுப்புகளுக்கும், சாறு மூலம் உடலின் வெளிப்புற உபயோகத்துக்கும் நலன் தரும் சின்ன வெங்காயம் பல்வேறு வகைகளில் உடல் நலம் காக்கும் சஞ்சீவியாக அன்றாட வாழ்வில் அங்கம் வகிக்கிறது. எண்ணற்ற நன்மைகளுடன் உடலில் உள்ள கெட்ட நீரை வெளியேற்றும் குணத்துடன் கிருமிகளை எதிர்த்துப் போராடும் குணம் கொண்ட சின்ன வெங்காயத்தை உபயோகித்து நலம் பெறுவோம்.