
பெண்களுக்கு ஷாப்பிங் செல்வது மிகவும் பிடித்த பொழுதுபோக்காகும். ஷாப்பிங் என்று சொன்னாலே குஷியாகி விடுவார்கள். எந்நேரமும் வீட்டிலேயே இருந்துவிட்டு வெளியில் செல்ல வேண்டும் என்றால் புத்துணர்ச்சியுடனும், உற்சாகத்துடனும் கிளம்பிவிடுவார்கள்.
நமக்கு பிடித்த பொருட்களை வாங்க வேண்டும் என்று நினைத்து அதை வாங்க செல்வதில் தவறில்லை. நாம் எந்த பொருளை வாங்க சென்றோமோ அதை மறந்துவிட்டு நமக்கு தேவையில்லாத, உபயோகப்படாத பொருட்களை வாங்கிக் குவிக்கும் மனநிலையே தவறானதாகும். ஏற்கனவே பெண்களிடம் நிறைய ஆடை, அணிகலன்கள் இருந்தாலுமே இன்னும் வாங்கி குவிக்க வேண்டும் என்று சிலர் விரும்புவார்கள். இந்த மனநிலைக்கு பெயர் தான் compulsive buying disorder(CBD) என்று கூறுகிறார்கள்.
இந்த மனநிலையைக் கொண்டவர்களுக்கு எந்த பொருளை வாங்கினாலும் திருப்தி இருக்காது. தன்னுடைய மனதிருப்திக்காக மட்டுமே தேவையே இல்லாத பொருட்களை வாங்கி குவிப்பார்கள். அந்த பொருள் அவர்களுக்கு பிடித்திருந்தால் மட்டுமே போதுமானதாகும். இந்த மனநிலை காரணமாக இவர்கள் ஷாப்பிங்கிற்கு அடிமைகளாகவே மாறிவிடுவார்கள். இந்த பிரச்னை ஆண்களை விட பெண்களையே அதிகம் பாதிக்கிறது.
இத்தகைய மனநிலைக் கொண்டவர்கள் தினமும் ஷாப்பிங் சென்று ஏதேனும் வாங்க வேண்டும் என்று நினைப்பார்கள். மன அழுத்தம், ஸ்ட்ரெஸ் போன்ற பிரச்னையை போக்க ஷாப்பிங் போக வேண்டும் என்று எண்ணுவார்கள். இவர்களுக்கு ஏதேனும் பொருள் பிடித்துவிட்டால் அதை வாங்கியே தீர வேண்டும் என்ற பிடிவாத குணம் இருக்கும். ஷாப்பிங் செல்வதற்காக பொய் பேசுவது, கடன் வாங்குவது போன்ற காரியங்களை செய்ய தயங்கமாட்டார்கள்.
பட்ஜெட் போட்டு செலவு செய்ய நினைத்தாலும், பட்ஜெட்டை மீறி அதிகமாக செல்வழிப்பார்கள். காதல் தோல்வி போன்ற மனக்கவலை ஏற்பட்டால், அதிலிருந்து மீள்வதற்காக ஷாப்பிங் செல்வதாக சொல்வார்கள். கிரெடிட் கார்ட் வைத்திருந்தால், கவலையே இல்லாமல் அதை செலவழிப்பார்கள். இத்தகைய மனநிலைக் கொண்டவர்களால் பணத்தை சேர்த்து வைக்கவே முடியாமல் போய்விடும். இது அவர்களின் எதிர்காலத்தை அதிகமாக பாதிக்கும்.
நமக்கு பிடித்ததையெல்லாம் வாங்க வேண்டும் என்று நினைப்பது ஆடம்பரமாகும். நமக்கு தேவையான உபயோகமான பொருட்களை வாங்குவதே அத்தியாவசியம். இதைப் புரிந்துக் கொண்டு சரியான திட்டமிடல், பட்ஜெட் போடுவது, பணத்தின் மதிப்பை உணர்ந்து செலவு செய்தல் போன்றவையே இத்தகைய மனநிலையில் இருந்து வெளிவருவதற்கான வழியாகும்.