கோபம் என்பது அனைத்து உயிர்களிடத்தில் வெளிப்படுகிற ஒரு இயல்பான உணர்வு. குறிப்பாக மனிதர்களுக்கு… இருக்கின்ற குணங்களில் ஒன்று தான் இந்த கோபம் எனப்படுவதும். கோபம் மனித இயல்பு என்றும் சொல்ல கேள்விப்பட்டிருக்கலாம் .
கோபமும் சில நேரங்களில் தேவைப்படுகிறது என்பதையும் மறுக்க முடியாது. ஒருவரின் உரிமைகளை நிலை நாட்ட, போராட, தற்காத்து கொள்ள அல்லது நீதிக்கு மாறான செயல்களுக்கு தனது மறுப்பை காட்ட… கோபம் மனிதர்களுக்கு தேவைப்படலாம். கோபத்தை அப்படியே வெளிக்காட்டுவது நாகரீகமாக இருக்காது என்றும் சொல்லப்படுகிறது.
அதே சமயத்தில் கோபத்தை வெளிப்படுத்தும் முறையில் ஒரு கட்டுப்பாடு இருந்தால், அது கோபத்துக்கு ஆளானவருக்கும், கோபம் கொண்டவருக்கும் பெரிய பாதிப்பை உண்டாக்காமல் இருக்க வாய்ப்பு உண்டு. இங்கே கோபத்தை பற்றிய சுவாரசியமான சில கேள்வி பதில்களை பார்க்கலாமா!
இந்த கோபத்தால் மனிதர்களுக்கு கிடைப்பது நன்மையா அல்லது கெடுதலா?
நன்மையும் தீமையும் இரண்டும் இருக்கிறது என்று தான் சொல்ல வேண்டும். கோபத்தை இடம் பொருள் பார்த்து வெளிப்படுத்தும் போதுதான் அதன் பலன் தெரியவரும்.
கோபத்தால் மனிதர்களுக்கு உடல் நலம் பாதிக்கப்படுகிறது என்பது உண்மையா?!
உண்மையில் மருத்தவ ரீதியாக, அதீத கோபம் தவிர்க்கப்பட வேண்டிய ஒன்று. அடிக்கடி கோபப்படுகிறவர்கள், கோபம் நமது உடல் நலம் சார்ந்ததாக இருப்பதை உணருவதில்லை. இதர உணர்வுகள் போலவே… கோபம் வரும் போது, நமது உடலில் உள்ள உறுப்புகளின் செயல்பாடுகள் மாற்றத்திற்கு உட்படுகின்றன. நமது மூச்சு கட்டுப்பாடில்லாமல் ஏறி இறங்கும். அதனால் இதயத் துடிப்பும் இரத்த அழுத்தமும் அதிகரிக்கும்.
மனசுக்குள் கோபத்தை அடக்கி கொண்டே இருப்பவர்களுக்கு ... உடல்ரீதியாக மன நலம் பாதிக்கவும் அதிக வாய்ப்பு இருக்கிறது என்று மருத்துவர்கள் சொல்கிறார்கள் . குறிப்பாக கோபம் கவலையை அதிகரிக்கும். தலைவலி, அதிக ரத்த அழுத்தம் (BP) போன்ற தொந்தரவுகளும் வரலாம் என்று சொல்கிறார்கள். 'தீரா கோபம் கேடாய் முடியும்' என்று முன்னோர்கள் இந்த அர்த்தத்தில் தான் சொல்லியிருக்ககூடும்.
கோபம் ஏன் வருகிறது? கோபம் இல்லாமல் மனிதர்கள் வாழ்வது என்பது, இந்த காலத்தில் நடைமுறைக்கு ஒத்து வருமா?
இயலாமை தான் கோபத்திற்கு காரணம் என்றும் சொல்வார்கள். ஒருவர் அவருடைய வாழ்க்கையில் சந்திக்கும் ஏமாற்றங்கள், அவமானம், தோல்விகள், எதிர்பார்த்தது கிடைக்காமல் ஏற்படக்கூடிய அலைக்கழிப்புகள் அவருக்கு கோபப்பட வைக்கிறது.
சாது என அழைக்கப்படுவர்களுக்கே ஏதாவது ஒரு சூழ்நிலையில் கோபம் உண்டாகும் போது, சாதாரண மனிதருக்கு கோபப்படாமல் இருப்பது கடினமான ஒன்று. மனிதர்கள் தங்களுக்கு என்று ஏற்படுத்திக் கொள்கிற சுயமரியாதை, சுய கொள்கைகளே அவர்களுக்கு கோபம் வர காரணமாகின்றது. சிலருக்கு இருக்கின்ற பொறுமையில்லாத சுபாவமும், சூழ்நிலைகளும், நியாயமான கோபங்களும் (ரோசம் என்று சொல்வார்கள் ) கோபத்தை வரவழைக்க காரணமாக இருக்கலாம். அதனால் கோபம் இல்லாமல் வாழ்வது கடினமே! அதற்கு மன கட்டுப்பாடு அவசியம் ஆகிறது.
கோபத்தால் ஏற்படுகிற விளைவுகள் எப்படி இருக்கும்?!
ஒருவருடைய கோபம் குறிப்பிட்ட அளவை தாண்டி, கட்டுப்பாட்டை இழந்து விடுகிற போது ... அது நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ கோபப்படுபவரின் உடல் நலத்துக்கு அபாயத்தை ஏற்படுத்தலாம். அவரால் எதிரில் இருப்பவர் / கோபத்துக்கு ஆளானவர் உடல் ரீதியாக தாக்கப்படலாம் அல்லது மனரீதியாக வார்த்தைகளால் காயப்படலாம் .
கோபத்தை ஆங்கிலத்தில் ANGER என்று சொல்வார்கள். அதோடு இன்னொரு எழுத்து சேர்த்துப் பார்த்தால் DANGER (அபாயம்) என்று ஆகிவிடும். கோபத்தை வெளிப்படுத்தும் போது, காலகாலமாக நாம் காப்பற்றி வந்த உறவு, மரியாதை, நற்பெயர் மற்றும் எல்லாவற்றையும், ஒரு நொடியில் கப்பலேற்றி அனுப்பி விடும் என்பதை நினைவில் வைக்க வேண்டும்.
வாய்க்கு வந்தபடி, மனதில் தோன்றுவதை கோபமாக வெளிப்படுத்துபவர்கள், சற்று யோசிக்து வார்த்தைகளை வெளிப்படுத்த வேண்டும்.
கோபம் கொண்டவர்களுக்கு , தங்களுடைய கோபத்தை யார் மீதாவது அல்லது எதன் மீதாவது காட்டி சமாதானம் ஆக மனது துடிக்கும். அப்படி கோபத்தை வெளிப்படுத்தும் போது, அது ஒரு காட்டாறு போல வெளிவரும் வேகத்தில், எதிரில் உள்ள பொருள்கள் அல்லது மனிதர்கள் பாதிக்கப்படுவதை தடுக்க முடியாது. ஒரு சில நொடிகளில் வெளிப்படுகிற கொந்தளிப்பானது, அதன் எல்லையை தொட்டதும் அடங்கி விடுகிறது.
கடுங்கோபமானது, எதையும் யோசிக்க விடாமல் நம் கண்ணை, அறிவை கண்டிப்பாக மறைத்து விடும். அதே நேரத்தில் காட்டாறு போல... புயல் போல வெளிப்படுகிற கோபத்தை அடக்கி வைக்க நேரிடும் போது, ஏற்கனவே சொன்னது போல, அது நம் உள்ளுறுப்புகளை, உடல் நலத்தை பாதிக்கிறது. வெளியே தெரியாமல் நமது ரத்த நாளங்கள் வெடிக்க கூடும். அடிக்கடி கோபப்படுவதால் நரம்புகள் பலவீனமாகி விட கூடும்.
"தன்னைத்தான் காக்கின் சினங்காக்க காவாக்கால்
தன்னையே கொல்லுஞ் சினம்"
இதைப்போல திருக்குறளில் 'வெகுளாமை' என்ற அதிகாரத்தில், திருவள்ளுவர் கோபத்தின் பாதிப்புகளை விளக்கமாக சொல்லி இருக்கிறார்.
ஆகவே, நமக்கு கோபம் வரும் போது… கோபத்தை வெளிப்படுத்தும் போது, நம் எதிரில் இருப்பது யார்? அவரின் மதிப்பு என்ன? அவருக்கும் நமக்கும் உள்ள பந்தம் என்ன? நம் கோபத்தால் அவருக்கு நேரும் விளைவால் நமக்கு என்ன பாதிப்பு உண்டாகும்.? என்றெல்லாம் யோசிக்கும் அளவுக்கு மனமுதிர்ச்சியை (மெச்சூரிட்டி -maturity) நாம் பெற்றுக்கொள்ளவேண்டும்
உங்களுடைய கோபத்தால், உங்களுக்கு கிடைக்க வேண்டிய பொருளை, மரியாதையை, அங்கீகாரத்தை, உரிமையை அடைய விரும்புகிறீர்களா?! அதுவும் முடியும் . ஆனால் உங்களுடைய கோபமானது உங்களுடைய கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும். அது உங்களுடைய உடல் மொழியிலும், வாய்மொழியிலும்... இடம், பொருள், ஏவல் பார்த்து அளவோடு வெளிப்பட வேண்டும்.