ஒரே இடத்தில் உட்கார்ந்து வேலை பார்ப்பவரா நீங்கள்? - உங்கள் வயிற்றுக்குள் நடக்கும் விபரீதம் இதுதான்!

Constipation
Constipation
Published on

வழக்கமாக "வயதாகிவிட்டது, செரிமானம் சரியில்லை" என்று நம் வீட்டுப் பெரியவர்கள் தான் மலச்சிக்கலைப் பற்றிப் புலம்புவார்கள். ஆனால், காலம் மாறிவிட்டது. இன்று பள்ளிக்குச் செல்லும் குழந்தைகளில் தொடங்கி, ஐடி நிறுவனங்களில் வேலை பார்க்கும் இளைஞர்கள் வரை பலரும் இந்தச் சிக்கலில் தவிக்கிறார்கள். 

முன்பெல்லாம் நாற்பது வயதிற்குப் பிறகு எட்டிப்பார்த்த இந்த உடல் உபாதை, இன்று இருபது வயது இளைஞர்களையே ஆட்டிப்படைக்கிறது. இது வெறும் வயிற்றுப் பிரச்சனை மட்டுமல்ல; நமது தவறான வாழ்க்கை முறையைச் சுட்டிக்காட்டும் ஒரு எச்சரிக்கை.

மாறிப்போன பழக்கவழக்கங்கள்!

இந்தத் திடீர் மாற்றத்திற்கு முக்கியக் காரணம், நம்முடைய உணவு மற்றும் வேலை முறைதான். நாக்கிற்கு ருசியாக இருக்கிறது என்று பீட்சா, பர்கர், மற்றும் மைதா கலந்த பரோட்டா போன்ற துரித உணவுகளை நாம் அதிகம் உட்கொள்கிறோம். ஆனால், குடலுக்குத் தேவையான நார்ச்சத்து நிறைந்த கீரைகள், பழங்களை அடியோடு மறந்துவிடுகிறோம்.

போதாக்குறைக்கு, மணிக்கணக்கில் ஒரே இடத்தில் சிலையைப் போல அமர்ந்து கணினியில் வேலை பார்ப்பது, உடலுக்கு எந்த வேலையும் கொடுக்காதது போன்றவை குடலின் இயக்கத்தை மந்தமாக்கி விடுகின்றன. குறிப்பாக, நகரங்களில் வாழும் இளைஞர்கள் தான் இதில் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள்.

பெண்கள் மற்றும் குழந்தைகளின் நிலை!

புள்ளிவிவரங்களின்படி, ஆண்களை விடப் பெண்கள் தான் மலச்சிக்கலால் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள். ஹார்மோன் மாற்றங்கள், இரும்புச்சத்து மாத்திரைகள் உட்கொள்ளுதல் மற்றும் அதிகப்படியான மன அழுத்தம் ஆகியவை பெண்களுக்குப் பெரும் சவாலாக உள்ளன. 

இதையும் படியுங்கள்:
சிறுகதை: அம்பாள் குழந்தை!
Constipation

மறுபுறம், குழந்தைகளோ கையில் மொபைல் கிடைத்தால் உலகத்தையே மறந்துவிடுகிறார்கள். விளையாட்டு இல்லாத வாழ்க்கை மற்றும் கழிப்பறைக்குச் செல்ல வேண்டிய நேரத்தை ஒத்திப்போடுவது போன்ற காரணங்களால் குழந்தைகளும் அவதிப்படுகிறார்கள்.

இதைவிடப் பெரிய ஆபத்து என்னவென்றால், பலரும் மருத்துவரை அணுகாமல், தாங்களாகவே மருந்து கடைகளில் விற்கப்படும் மலமிளக்கி மாத்திரைகளை வாங்கிப் பயன்படுத்துவதுதான். இது அந்த நேரத்திற்குத் தீர்வைத் தருவது போலத் தெரியும். ஆனால், தொடர்ந்து இந்த மாத்திரைகளைப் பயன்படுத்தினால், உங்கள் குடல் இயற்கையாகச் சுருங்கி விரியும் தன்மையை இழந்து, சோம்பேறியாகிவிடும். காலப்போக்கில் மாத்திரை இல்லாமல் மலம் கழிக்கவே முடியாது என்ற நிலைக்குக் கொண்டு சென்றுவிடும். இது குடலின் நுண்ணுயிரிகளை அழித்து, நிரந்தர நோயாளியாக மாற்றிவிடும்.

இதையும் படியுங்கள்:
பீனிக்ஸ்: சாம்பலில் இருந்து மீண்டு எழும் பறவை! இது உண்மை தானா?
Constipation

மீண்டு வருவது எப்படி? 

இந்தச் சிக்கலைத் தீர்க்க பெரிய மருத்துவ சிகிச்சைகள் தேவையில்லை; சிறிய மாற்றங்களே போதும்.

  • தினமும் உணவில் நார்ச்சத்து நிறைந்த காய்கறிகள், முழு தானியங்கள் மற்றும் பழங்களைச் சேர்க்க வேண்டும்.

  • ஒரு நாளைக்குக் குறைந்தது 3 முதல் 4 லிட்டர் தண்ணீர் அருந்த வேண்டும். நீர்ச்சத்து குறைந்தால் மலம் இறுகிவிடும்.

  • தினமும் 30 நிமிடங்களாவது நடைப்பயிற்சி அல்லது யோகா செய்வது குடல் இயக்கத்தைத் தூண்டும்.

  • காலைக்கடன்களை முடிக்க அவசரப்படாமல், அதற்கெனப் போதிய நேரம் ஒதுக்க வேண்டும்.

"மலச்சிக்கல் தானே" என்று அலட்சியமாக இருந்தால், அது நாளடைவில் மூல நோய், குடல் பாதிப்பு மற்றும் மன அழுத்தம் எனப் பல்வேறு நோய்களுக்கு வாசலைத் திறந்துவிட்டுவிடும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com