சமீப கால ட்ரெண்டிங்காக கார்ட்டிசால் காக்டைல் (Cortisol Cocktail) என்றொரு பானம், காலை நேர சோர்வு மற்றும் சக்தியின்மை போன்ற உடல் நலக் குறைபாடுகளை நீக்கி சுறு சுறுப்புடன் நாளைத் துவங்குவதற்கு உதவுவதாக கூறப்படுகிறது.
கிட்னியின் மேல் பாகத்தில் இருக்கும் அட்ரினல் சுரப்பியிலிருந்து சுரக்கும் கார்ட்டிசால் என்ற ஹார்மோன் 'ஸ்ட்ரெஸ் ஹார்மோன்' என்று மட்டுமே அறியப்படுகிறது. ஆனால் கார்ட்டிசால், காலையில் நாம் எழுந்துகொள்ளவும், நம் உடலின் இரத்த சர்க்கரை அளவை சரி பார்க்கவும், நினைவாற்றல் மற்றும் சக்தியின் அளவை மேம்படுத்தவும் கூட உதவி புரிகிறதென்பது பலருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை.
நம் உடலானது, உடலின் உட்கட்ட அமைப்புகளை விழித்தெழச் செய்யவே காலை நேரத்தில் அதிகளவு கார்ட்டிசால் ஹார்மோனை உற்பத்தி செய்து வெளியிடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளது. தூக்கமின்மை, நேரத்திற்கு உணவு உட்கொள்ளாதிருத்தல், அதிகளவு காஃபின் உடலில் சேர்ந்திருப்பது போன்ற காரணங்களால் நம் உடல் தொடர்ந்து மன அழுத்தத்திற்கு உள்ளாகி இருக்கலாம்.
அந்த மாதிரியான நேரங்களில் கார்ட்டிசால் உடலின் மற்ற இயக்கங்களுடன் ஒத்துப் போகாமல் இருந்திருக்கலாம். அப்போது காலை நேர சோர்வு, மூளை மீது மூடு பனி போர்த்தியது போல் அதன் அனைத்து செயல்பாடுகளிலும் மந்த நிலை உண்டாவது, மதிய நேர செயலிழப்பை உணர்வது போன்ற அறிகுறிகள் தோன்றும். இதற்கு கார்ட்டிசால் ஹார்மோன் சரிவர சுரக்கவில்லை என அர்த்தமாகாது.
உடலானது இந்த ஹார்மோனை சரிவர கையாள்வதற்கு போராடிக் கொண்டிருக்கிறது என்பதே அர்த்தம்.
'கார்ட்டிசால் காக்டைல்' என்றால் என்ன?
கார்ட்டிசால் காக்டைல் என்பது அட்ரினல் சுரப்பி சரியான முறையில் இயங்குவதற்கும், இரத்த சர்க்கரை அளவை சம நிலையில் வைத்துப் பராமரிப்பதற்கும் உதவக் கூடிய கூட்டுப்பொருட்களை உபயோகித்து தயாரிக்கப்படும் ஒரு சிம்பிள் பானம். இந்த பானத்தில், இயற்கையான சர்க்கரை மற்றும் வைட்டமின் C சத்தும் நிறைந்த ஆரஞ்சு ஜூஸ் (¼ to ½ கப்), நீர்ச்சத்து, சோடியம் மற்றும் மக்னீசியம் அடங்கிய கடல் உப்பு ஒரு சிட்டிகை, உப்பின் அளவை சமநிலைப்படுத்த உதவும் பொட்டாசியம் அடங்கியுள்ள தேங்காய் எண்ணெய் சிறிது, விருப்பப்பட்டால் கொஞ்சம் கொல்லாஜன் பவுடர் ஆகியவை சேர்க்கப்படுகின்றன.
ஆல்கஹால் மற்றும் காஃபின் போன்ற பொருட்கள் எதுவும் இதில் கிடையாது.
கார்ட்டிசால் காக்டைலை காலையில், காபி மற்றும் காலை உணவு உட்கொள்வதற்கு முன் வெறும் வயிற்றில் அருந்த அறிவுறுத்தப்படுகிறது. இதனால், உடல் நாள் முழுக்க சக்தியுடன் செயலாற்ற முடியும் என கூறப்படுகிறது.
நம் உடலில் பசியுணர்வு, செரிமான இயக்கம், மெட்டபாலிசம், சக்தியின் அளவு போன்றவை நார்மலாக இருக்கும்போது கார்ட்டிசால் காக்டைல் அருந்த வேண்டிய அவசியமில்லை. அட்ரினல் மற்றும் தைராய்ட் சுரப்பிகளில் இருக்கும் கோளாறுகளை கார்ட்டிசால் காக்டைல் குணமாக்க உதவாது. காலை வேளை சோர்வு, மந்தநிலை இருக்கும்போது சக்தியின் அளவை அதிகரிக்க ஒன்று அல்லது இரண்டு வாரங்கள் இந்த பானத்தைக் குடிக்கலாம். நீரிழிவு நோய் உள்ளவர்கள் கட்டாயம் தவிர்க்க வேண்டிய பானம் இது.
கார்ட்டிசால் காக்டைல் ஒரு சாதாரண துணை பானமே தவிர, அனைத்து உடல்நலப் பிரச்சனைகளுக்கும் ஒரு தீர்வு அல்ல. இதை சரியான புரிதலுடன் பயன்படுத்த வேண்டும்.
புதியதொரு நாளைத் துவக்க ஓர் ஆரோக்கிய பானமாக இருக்குமே தவிர வேறு எந்த மாயா ஜாலமும் காட்ட முடியாத சிம்பிள் ட்ரிங்க், இந்த 'கார்ட்டிசால் காக்டைல்'!
(முக்கிய குறிப்பு: இந்தத் தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே. மருத்துவ ஆலோசனைக்கு சரியான தகுந்த மருத்துவரை அணுகவும்.)