பசும் பாலா? எருமைப் பாலா? என்ற கேள்வி வரும்போது, நாங்க எல்லாம் பாக்கெட் பால் தான் குடிக்கிறோம் என்று சொல்லலாம். ஆனால், இன்றும் 50% பேருக்கு மேல் நேரடியாக பால்காரரிடம் பால் வாங்கி பயன்படுத்துகின்றனர். நேரடியாக பால் வாங்கும் போது பல நன்மைகளும் சில குறைகளும் இருக்கத்தான் செய்கின்றன.
வெளிநாடுகளை பொறுத்த வரையில் மாட்டுப்பால் மட்டுமல்ல, ஆட்டுப்பால், ஒட்டகப் பால் போன்றவை கூட பயன்பாட்டில் உள்ளன. நம் நாட்டை பொறுத்த வரையில் மாட்டுப்பால் தான் பிரதானமாக உள்ளது. இந்தியாவில் பாலின் நுகர்வு தன்மை மிகவும் அதிகம். உலகளவில் பால் உற்பத்தியில் இந்தியா முதல் இடத்தில் உள்ளது.
பாலைப் பொருத்தவரை பசும்பால் எருமைப் பால் என்ற இரண்டு வகைகள் உள்ளன. இரண்டும் பால் தானே? அதில் என்ன பஞ்சாயத்து என்று நினைக்கலாம்.
ஆனால், தனிப்பட்ட நன்மைகள் மற்றும் குறைகளை ஒப்பிட்டு பார்க்கையில் இரண்டு பாலும் தனித்தன்மை வாய்ந்தவை. அது போல செரிமானம் மற்றும் சிறுநீரக ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை எந்தப் பால் பாதுகாப்பானது என்பதை ஆராய்வோம்.
பசும்பால் :
பசும்பால் தேவையான அளவு கொழுப்பும் புரதமும் கொண்டது. இது எளிதில் செரிமானம் ஆகக் கூடியது. இதனால் வாயு பிரச்சனைகள , அமிலத்தன்மை, செரிமானம் தொடர்பான பிரச்சனைகளைக் கொண்டவர்களுக்கு ஏற்றதாக இருக்கும். பசும்பாலில் வைட்டமின் ஏ மற்றும் கால்சியம் நிறைந்துள்ளது. இது எலும்புகள் மற்றும் கண்களுக்கு நன்மை பயக்கும்
எருமைப்பால்:
எருமைப் பால் தேவைக்கும் அதிகமான புரதமும் , கொழுப்பு அளவும் கொண்டது. ஒப்பீட்டளவில் பார்த்தால் பசும்பாலை விட இது அதிக கொழுப்பு நிறைந்தது. இந்த பால் நல்ல அடர்த்தி மிகுந்தது. அதிக கொழுப்பு தன்மை உள்ளதால் பசும்பாலை விட கெட்டியான தன்மையில் இருப்பதால், இது செரிக்க சற்று நேரம் எடுக்கும்.
இதில் உள்ள புரதம் உங்களுக்கு அதிக ஆற்றலைக் கொடுக்கும். அதே நேரம் பாலில் உள்ள கொழுப்பும் உடலில் சேரும். இதனால், அதிகப்படியான உடல் உழைப்பு கொண்டவர்களுக்கு எருமைப் பால் குடிப்பது நன்மையாக இருக்கும். பாலில் உள்ள வைட்டமின்களும் கால்சியமும் இதில் சற்று அதிகமாக இருக்கும். ஆயினும் செரிமான பிரச்சனை, வாயுத் தொல்லை, அமிலத் தன்மை உள்ளவர்களுக்கு இந்த உகந்தது அல்ல.
சிறுநீரகங்களுக்கு ஏற்ற பால் எது?
பொதுவாக ஆரோக்கியமாக இருப்பவர்களுக்கு எருமைப் பாலால் பெரிய பிரச்சனைகள் இல்லை. ஆனால், சிறுநீரகப் பிரச்சனை உள்ளவர்களுக்கு இது சரியானது அல்ல.
எருமைப்பாலில் அதிக புரதம் உள்ளதால் அது சிறுநீரகங்களுக்கு அதிக சுமையை ஏற்படுத்தும். இந்த அதிக சுமை பாதிப்பை மேலும் அதிகப்படுத்தும். பசும்பாலில் புரதம் குறைவாக இருப்பதால் சிறுநீரகங்களில் அதிக சுமையை கொடுக்காது. இதனால் தான் சிறுநீரக பாதிப்பு கொண்டவர்களுக்கு பசும்பால் சிறந்ததாக இருக்கும்.
செரிமானத்திற்கு சிறந்த பால் எது?
பசும் பால் பெரும்பாலும் செரிமானத்தில் பிரச்சனைகளை ஏற்படுத்துவது இல்லை. இது விரைவாக செரிமானம் ஆகி விடும். இதனால் வாயு தொல்லை, அமிலத் தன்மை ஏற்படுவது அரிது தான். ஆனால், எருமைப் பால் செரிக்க தாமதம் ஆகும். குழந்தைகள் மற்றும் வயதானவர்களுக்கு இது அதிக ஏப்பத்தை ஏற்படுத்தும். மேலும் சிலருக்கு அமிலத் தன்மை, வாயுத் தொல்லைகளை ஏற்படுத்தும். செரிமானத்தில் பிரச்சனை இல்லாதவர்களுக்கு எருமைப் பாலும் தகுந்தது தான்.
இறுதியாக ஒரு முடிவிற்கு வர வேண்டும் என்றால் எருமைப்பால் கடும் உழைப்பாளிகள், அதிக கலோரிகள் தேவைப்படுபவர்களுக்கு சிறந்ததாக இருக்கும். பசும்பால் அனைத்து தரப்பு மக்களுக்கும் ஏற்ற ஒன்றாகும். அதனால் பசும்பால் ஒட்டு மொத்தமாக சிறந்தது எனலாம். எருமைப் பாலை பயன்படுத்தும் போது அதில் தண்ணீர் அதிகம் கலந்து பயன்படுத்துவது நல்லது.
(முக்கிய குறிப்பு: இந்தத் தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே. மருத்துவ ஆலோசனைக்கு சரியான தகுந்த மருத்துவரை அணுகவும்)