சுத்தம் சோறு போடும் என்பது அனைவருக்கும் தெரிந்தது. நாம் அன்றாடம் பயன்படுத்தும் பொருட்களை குறிப்பிட்ட இடைவெளியில் சுத்தம் செய்வது மிகவும் அவசியம். அந்த வகையில் உள்ளாடை முதல் பெட்ஷீட் வரை எத்தனை நாட்களுக்கு ஒரு முறை சுத்தம் செய்ய வேண்டும் என்பது குறித்து இப்பதிவில் காண்போம்.
உள்ளாடைகள்
உள்ளாடைகள் நம் உடம்போடு அந்தரங்க உறுப்புகளில் ஒட்டி உறவாடுவதால் ஒவ்வொரு முறை பயன்படுத்திய பிறகும் கண்டிப்பாக சுத்தம் செய்ய வேண்டும். ஒருவேளை ஒவ்வொரு பயன்பாட்டிற்கு பிறகும் உள்ளாடைகளை சுத்தம் செய்யாமல் விட்டால் தொற்றுகள் ஏற்பட்டு விளைவுகள் மோசமாக இருக்கும் என்பது மருத்துவர்களின் அறிவுரையாக உள்ளது.
டூத் பிரஷ்
நம் வாய் ஆரோக்கியத்தை பராமரிக்கும் பல் துலக்கும் டூத் பிரஷை சரியாக சுத்தம் செய்யாவிட்டால் பாக்டீரியாக்கள் பூஞ்சைகள் வாயில் தங்கி வாயில் தொற்று ஏற்படுத்த கூடும் என்பதால் ஒவ்வொரு முறை பயன்பாட்டிற்கு பிறகும் பல்துலக்கும் பிரஷை நன்கு சுத்தம் செய்து உலர்ந்த இடத்தில் வைக்க வேண்டும். ஈரமான சூழல் பாக்டீரியா தொற்றுக்களை வளரச் செய்யும் என்பதோடு, மூன்று மாதங்களுக்கு ஒரு முறை மாற்றுவது சாலச் சிறந்தது.
தலையணை மற்றும் பெட் சீட் உறைகள்
எண்ணெய் மிகுந்த சருமம் கொண்டவர்களும் முகப்பரு அதிகம் வருபவர்களும் தலையணை முறைகளை அடிக்கடி மாற்ற வேண்டியதோடு, மூன்று நான்கு நாட்களுக்கு ஒரு முறை துவைத்து சுத்தம் செய்ய வேண்டியது மிகவும் அவசியம். தலையணை நம்முடைய வியர்வை மற்றும் உமிழ் நீரால் நனைந்திருப்பதோடு, அழுக்குகள் சேர்ந்திருப்பதால் மீண்டும் மீண்டும் பயன்படுத்தும் போது முகப்பரு தொற்றுகள் ஏற்பட வாய்ப்புள்ளதால் ஆறு மாதங்களுக்கு ஒரு முறை மாற்றி விட வேண்டும்.
முகம் துடைக்கும் துண்டு
நம் உடல் மற்றும் முகம் துடைக்க பயன்படுத்தப்படும் துண்டு கிருமிகளை காந்தம் போல ஈர்த்து தன்னகத்தே வைத்துக் கொள்ளும் என்பதால் ஒவ்வொரு முறை துண்டை பயன்படுத்திய பிறகும் வெயிலில் காயவைத்து அல்லது துவைத்த பிறகு பயன்படுத்துவதோடு ஆறு மாதங்களுக்கு ஒரு முறை முகம் துடைக்கும் துண்டை மாற்றி விட வேண்டும் .
செல்போன்கள்
அழுக்குகள் மற்றும் பூஞ்சைகளை எளிதில் சேகரிக்கும் செல்போன்கள் கைகளில் பரவி சரும தொற்று அல்லது முகப்பரு பிரச்சனையை உருவாக்கலாம் என்பதால் தினமும் ஒரு முறை ஆல்கஹால் அடங்கிய கிருமி நாசினி துடைப்பான்கள் அல்லது மைக்ரோ பைபர் துணியால் போனை சுத்தம் செய்வதோடு கழிவறை, குளியலறை போன்ற இடங்களுக்கு எடுத்து செல்வதை தவிர்க்க வேண்டும்.
பிற பொருட்கள்
சமையலறையில் பயன்படுத்தப்படும் ஸ்பாஞ்சுகளை சுத்தம் செய்யாவிட்டால் உணவு மூலம் தொற்று பரவும் அபாயம் உள்ளதோடு, ஈரமாக இருந்தால் பாக்டீரியா மற்றும் பூஞ்சை தொற்றுக்கு வழி வகுக்கும் என்பதால் சுடுதண்ணீரில் துவைத்து வெயிலில் உலர வைப்பதோடு மாதத்திற்கு ஒரு முறை மாற்ற வேண்டும்.
மேற்கூறிய பொருட்கள் மட்டுமல்லாமல் தினசரி உபயோகப்படுத்தும் குடிதண்ணீர் பாட்டில், ஜீன்ஸ் ஆடைகள் போன்றவற்றை உரிய முறையில் சுகாதாரமான முறையில் சுத்தம் செய்வது தொற்று நோய் அபாயத்திலிருந்து பாதுகாக்க சிறந்த வழிமுறையாகும்.