

இந்த நவீன யுகத்தில் முடி பராமரிப்புக்காக பல பொருட்கள் இருந்தாலும் பாரம்பரியமான தயிரில் புரதம், கால்சியம், வைட்டமின்கள், ப்ரோபயாடிக்குகள் எந்தவித பக்க விளைவுகளும், ரசாயனமும் இல்லாமல் முடியின் ஆரோக்கியத்துக்குச் சிறந்ததாகக் கருதப்படுகிறது. இது முடியின் வறட்சியை நீக்குவதோடு மட்டுமல்லாமல் வேர்க்கால்களில் இருந்து முடியை வலுவாக்கி நல்ல பளபளப்பு மற்றும் பொடுகை நீக்கி முடியை மென்மையாக்குகிறது.
தயிர் ஒரு சிறந்த கண்டீஷனராக திகழ்கிறது. இதில் தலைமுடியின் ஈரப்பதத்தைத் தக்க வைக்கக் கூடிய கொழுப்பு அமிலங்கள் மற்றும் ஊட்டச்சத்துக்கள் உள்ளதால் அதிக வறண்ட தன்மையை போக்கி பொலிவைத் தருகிறது. இது முடியை நல்ல ஆரோக்கிய நிலையில் வைக்கிறது.
தயிரில் பூஞ்சை எதிர்ப்பு பண்பு இருப்பதால் பொடுகைத் தடுக்கிறது. மேலும் இதில் உள்ள ஈஸ்ட் தலைமுடியின் அரிப்பை நீக்குகின்றன. இதில் உள்ள புரோபயாடிக் சத்துக்கள் தலைமுடியை நீரேற்றமாக வைக்க உதவுகிறது. அடிக்கடி தயிரால் முடியை அலசுவதன் மூலம் முடி வளர்ச்சி தூண்டப்படுகிறது.
இதில் உள்ள புரதமும், ஆரோக்கிய கொழுப்புகளும் தலைமுடியின் கியூட்டிகிள் பகுதியை மென்மையாக வைக்கிறது. இதன் லாக்டிக் அமிலம் முடியின் அழுக்கை நீக்கி புதுப்பொலிவை தருகிறது. இதன்மூலம் இயற்கையான வழியில் முடி பளபளப்பும் பெறுகிறது.
முடிப்பிளவு தடுக்கப்பட்டு முடிக்கு நெகிழ்வுத் தன்மையை தயிர் கொடுக்கிறது. இதன் லாக்டிக் அமிலம் முடியை எக்ஸ்ஃபோலியேட் செய்து இறந்த செல்களை நீக்கி இரத்த ஓட்டத்தை அதிகரித்து முடி வலுவாக இயக்கப்படுகிறது.
கூடுதலான பலன் பெற தயிர் மாஸ்குகளை உபயோகிக்கலாம்.
தயிர் மற்றும் தேன் மாஸ்க்
முடி நல்ல ஆரோக்கியம் பெற ஒரு கப் தயிருடன், இரண்டு டேபிள் ஸ்பூன் தேன் சேர்த்து இதை நன்றாகக் கலந்து தலைமுடி முழுவதும் தடவவும். அரைமணி நேரம் கழித்து வாஷ் செய்யலாம். வாரத்தில் இருமுறை செய்யலாம். நல்ல நீரேற்றத்தை தருவதால் முடி மிக பளபளப்பாக தெரியும்.
தயிர் மற்றும் முட்டை மாஸ்க்
முட்டையில் புரதம் அதிகம் உள்ளது. இதை தயிருடன் சேர்த்துக் கலந்து முடியில் நன்கு தடவி அரைமணி நேரம் கழித்து ஷாம்பூ போட்டு கழுவினால் முடி மென்மையாகும். இது ஒரு இயற்கை கண்டீஷனர் ஆகும்.
தயிர் மற்றும் எலுமிச்சை மாஸ்க்
ஒரு கப் தயிருடன், இரண்டு டேபிள் ஸ்பூன் எலுமிச்சை ஜூஸ் கலந்து தலைமுடியில் தடவவும். பொடுகு மற்றும் அரிப்பு பிரச்னை இருப்பவர்களுக்கு இது மிகச் சிறந்தது. வெதுவெதுப்பான நீரில் வாஷ் செய்யவும். அதிக கெமிகல் இல்லாத ஷாம்பூ பயன்படுத்தவும்.
வெந்தயம் தயிர் மாஸ்க்
இரவு வெந்தயத்தை ஊறவைத்து மறுநாள் அரைத்து தயிரை சேர்த்துக் கலந்து முடியில் தடவி பின் நன்றாக அலச முடி அடர்த்தியாக வளருவதோடு மென்மையாகவும் இருக்கும்.
செம்பருத்தி தயிர் மாஸ்க்
செம்பருத்திப்பூவை அரைத்து அதை தயிரில் கலக்கி முடியில் தடவி பின் அரைமணிநேரம் கழுத்துக் கழுவ முடி அடர்த்தியாகவும் கருகருவென்று வளரும்.
- மேற்கூறிய முறைகள் முடிக்கு எந்த பக்க விளைவுகளையும் ஏற்படுத்தாது. இயற்கை வழிமுறைகள் ஆகும்.
எச்சரிக்கை
அதிகளவு தயிர் எண்ணெய்ப் பசையை ஏற்படுத்தும். மேலும் கூந்தலை நன்கு சுத்தமாக அலசவில்லை என்றால் வாடை வரும்.
(முக்கிய குறிப்பு: இந்தத் தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே. மருத்துவ ஆலோசனைக்கு சரியான தகுந்த மருத்துவரை அணுகவும்)