Eating Dates
Dangers of Eating Too Many Dates Every Day

தினசரி பேரீச்சம்பழம் அதிகமாக சாப்பிட்டாலும் ஆபத்துதான்... ஜாக்கிரதை!

உலகெங்கிலும் உள்ள மக்கள் பல நூறு ஆண்டுகளாக உட்கொள்ளப்படும் சுவையான மற்றும் சத்தான பழங்களில் பேரீச்சம்பழமும் ஒன்று. இதில் அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளதால் உடலுக்கு ஆரோக்கியமான பல நன்மைகளை வழங்குகிறது. இருப்பினும் தினசரி ஒரு குறிப்பிட்ட அளவிலான பேரீச்சம் பழங்களை மட்டுமே நாம் உட்கொள்ள வேண்டும். அதிகமாக சாப்பிட்டால், அதனால் சில உடல்நலப் பிரச்சனைகள் ஏற்படலாம். இந்தப் பதிவில் தினசரி அதிகமான பேரீச்சம் பழங்களைச் சாப்பிடுவதால் ஏற்படும் ஆபத்துகள் பற்றி பார்க்கலாம். 

பேரீச்சம் பழங்களில் இயற்கையாகவே அதிக சர்க்கரை இருக்கிறது. இந்த இனிப்பு நமக்கு சாப்பிடும்போது நல்ல சுவையைக் கொடுத்தாலும், அதிகமாக உட்கொண்டால் சில சிக்கல்களை ஏற்படுத்தலாம். அதிக பேரீச்சம்பழங்களை சாப்பிடுவது அதிக சர்க்கரையை உட்கொள்வதற்கு சமம். இது எடை அதிகரிப்பு மற்றும் நீரிழிவு நோய் ஏற்படும் அபாயத்தை அதிகரிக்கலாம். 

மற்ற பழங்களுடன் ஒப்பிடும்போது பேரீச்சம்பழத்தில் கலோரிகள் அதிகம். எனவே தினசரி அதிகமாக பேரிச்சம்பழங்களை உட்கொள்வது உடல் எடை அதிகரிக்க வழிவகுக்கும். நீங்கள் உங்களது எடையை பராமரிக்க அல்லது குறைக்க முயற்சிக்கிறீர்கள் என்றால், தினசரி ஒன்று அல்லது இரண்டு பேரீச்சங்கம்பழங்கள் மட்டுமே சாப்பிட வேண்டும் என்பதை கவனத்தில் கொள்ளுங்கள். 

பேரீச்சம்பழங்கள் அவற்றின் அதிகப்படியான நார்சத்துக்கு பிரபலமானவை என்றாலும், உடலில் அதிகமாக நார்ச்சத்து சேரும்போது வாயுத் தொல்லை, வயிற்றுப்போக்கு, வீக்கம் போன்ற பாதகமான விளைவுகளை ஏற்படுத்தும். எனவே அதிகமாக பேரீச்சம்பழங்கள் சாப்பிடுவது வயிற்று பிரச்சனைகளை ஏற்படுத்தலாம். 

பொட்டாசியம், மெக்னீசியம் மற்றும் வைட்டமின் பி6 போன்ற அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் பேரீச்சம்பழத்தில் இருந்தாலும், உங்களது அன்றாட உணவில் பேரீச்சம்பழங்களை அதிகமாக சேர்த்துக்கொள்வது ஊட்டச்சத்து ஏற்றத்தாழ்வுக்கு வழிவகுக்கும். எனவே பழங்கள், காய்கறிகள், முழு தானியங்கள் மற்றும் புரதங்கள் ஆகியவற்றுடன் சேர்த்து பேரீச்சம்பழம் சாப்பிடுவதால், ஆரோக்கியத்திற்கு தேவையான பல விதமான ஊட்டச்சத்துக்கள் பெற உதவும். 

இதையும் படியுங்கள்:
நமது பூமி கருந்துளையால் உறிஞ்சப்பட்டால் என்ன ஆகும் தெரியுமா? 
Eating Dates

பேரீச்சம்பழம் அதிகமாக சாப்பிடுவதால் ஏற்படும் பிரச்சனைகள் அரிதுதான் என்றாலும், சில நபர்களுக்கு ஒவ்வாமை பாதிப்புகள் ஏற்படலாம். எனவே அவற்றை உட்கொண்ட பிறகு வீக்கம், அரிப்பு அல்லது சுவாசிப்பதில் சிரமம் போன்ற அறிகுறிகள் இருந்தால், உடனடியாக மருத்துவரை சந்திப்பது அவசியம். மேலும் பேரீச்சம்பழங்கள் அதிகமாக சாப்பிடுவதை உடனடியாக நிறுத்த வேண்டும். 

எனவே, தினசரி அதிகமாக பேரீச்சம்பழங்களை சாப்பிடாமல், சரிவிகித உணவின் ஒரு பகுதியாக மட்டுமே அதை இணைத்துக்கொள்வது நல்லது. 

logo
Kalki Online
kalkionline.com