இறைச்சி பல நூற்றாண்டுகளாக மனித உணவில் முக்கிய பங்கு வகிக்கிறது. இதில் புரதம் இரும்புச்சத்து மற்றும் பிற ஊட்டச்சத்துக்கள் நிறைந்து காணப்படுகின்றன. இருப்பினும் சமீபத்திய ஆண்டுகளில் அதிக அளவு இறைச்சி உட்கொள்வது பல்வேறு ஆரோக்கிய பிரச்சனைகளுடன் தொடர்புடையது என்பதைப் பற்றிய கவலைகள் அதிகரித்து வருகின்றன.
இறைச்சி அதிகமாக சாப்பிடுவதால் ஏற்படும் ஆபத்துக்கள்:
சிவப்பு இறைச்சி மற்றும் பதப்படுத்தப்பட்ட இறைச்சி அதிக அளவில் உட்கொள்வதால் இதய நோய்க்கான அபாயம் அதிகரிக்கும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. சிவப்பு இறைச்சியில் உள்ள கொழுப்புச் சத்து மற்றும் இரும்புச்சத்து ரத்தத்தில் கெட்ட கொழுப்பின் அளவை அதிகரித்து நல்ல கொழுப்பின் அளவை குறைக்கிறது. இதனால், தமனிகளில் படிவங்கள் உருவாகி இதய பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும்.
சிவப்பு இறைச்சி மற்றும் பதப்படுத்தப்பட்ட இறைச்சியை அதிக அளவில் உட்கொள்வதால் பெருங்குடல் புற்றுநோய், மார்பக புற்றுநோய் மற்றும் கணைய புற்றுநோய் உள்ளிட்ட பல்வேறு வகையான புற்றுநோய் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளதாம். இறைச்சியை நேரடியாக நெருப்பு மற்றும் புகையில் சுட்டெடுக்கும்போது அந்த சமையல் முறைகளில் உருவாகும் வேதிப்பொருட்கள் புற்றுநோய்க்கான அபாயத்தை அதிகரிக்கக்கூடும் என்கின்றனர் ஆய்வாளர்கள்.
இறைச்சியை அதிகமாக உட்கொள்வது நீரிழிவு நோய்க்கான அபாயத்தை அதிகரிக்கும் என சொல்லப்படுகிறது. இதில் அதிகமாக இருக்கும் புரதச்சத்து சர்க்கரை அளவை விரைவாக அதிகரிக்கக்கூடும். இதனால் உடல் இன்சுலினை திறம்பட பயன்படுத்துவது கடினமாகிறது.
அதிக அளவு இறைச்சி உட்கொள்வது உடல் பருமனுக்கு வழிவகுக்கும். பொதுவாகவே இறைச்சியில் கலோரிகள் அதிகமாக உள்ளது மற்றும் நார்ச்சத்து குறைவாக இருப்பதால் இது எடை அதிகரிப்புக்கு வழிவகுக்கும்.
மேலும், அதிகமாக இறைச்சி உட்கொள்வது சிறுநீரக கற்கள், வாத நோய் மற்றும் மனச்சோர்வு போன்ற பிற ஆரோக்கிய பிரச்சனைகளுடன் தொடர்புடையதாக சொல்லப்படுகிறது.
எனவே இறைச்சியை அதிகமாக சாப்பிடாதீர்கள். அதற்கு பதிலாக மீன்கள், பருப்பு வகைகள் போன்ற மெலிந்து புரத ஆதாரங்களை தேர்ந்தெடுப்பதன் மூலம், உங்கள் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தி பல்வேறு விதமான நோய்கள் ஏற்படுவதற்கான அபாயத்தையும் குறைக்கலாம்.