
"உடம்பு சரியில்லையா? நல்லா வெந்நீர் குடி, எல்லாம் சரியாகிடும்" - இந்த அறிவுரையை நாம நம்ம பாட்டி, அம்மா கிட்ட இருந்து கேட்காம இருந்திருக்கவே மாட்டோம். ஜலதோஷம், இருமல், தொண்டை வலினு எதுவா இருந்தாலும், வெந்நீர் ஒரு அருமருந்துன்னு நம்ம மனசுல ஆழமா பதிஞ்சிடுச்சு. அது உண்மையும்கூட. ஆனா, "அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு" என்ற பழமொழி வெந்நீருக்கும் பொருந்தும்.
எந்த ஒரு தேவையுமில்லாம, தாகமே எடுக்காம, நல்லதுன்னு நினைச்சு வெந்நீரை அளவுக்கு அதிகமா குடிக்கும்போது, அது நம்ம உடம்புக்குள்ள சில விரும்பத்தகாத விளைவுகளை ஏற்படுத்துது.
சிறுநீரகத்தின் மீது சுமத்தப்படும் அதிகப்படியான சுமை
நம்ம உடம்புல இருக்குற ஒரு முக்கியமான வடிகட்டிதான் சிறுநீரகம். ரத்தத்தைச் சுத்திகரிச்சு, தேவையில்லாத நச்சுக்களை வெளியேற்றுவதுதான் அதோட முக்கிய வேலை. நாம தாகம் எடுக்கும்போது தண்ணி குடிச்சா, சிறுநீரகம் அதோட வேலையை சரியா செய்யும். ஆனா, தாகமே இல்லாம, நாமளா உடம்புக்குள்ள அதிகப்படியான தண்ணியைத் திணிக்கும்போது, சிறுநீரகத்தோட வேலைப்பளு அதிகமாக்கி தேவைக்கு அதிகமான நீரை வெளியேற்ற அது ஓய்வில்லாம உழைக்க வேண்டியிருக்கும். இப்படித் தொடர்ந்து நடக்கும்போது, அதோட செயல்பாடு படிப்படியாகப் பாதிக்கப்பட்டு, நீண்டகாலத்துல சிறுநீரகப் பிரச்சனைகள் வரதுக்கு இதுவே ஒரு காரணமாக அமைஞ்சிடும்.
நம்ம மூளை ரொம்ப மென்மையான உறுப்பு. அது சரியா இயங்க, உடம்புல இருக்குற நீர் மற்றும் எலக்ட்ரோலைட்டுகளின் சமநிலை ரொம்ப முக்கியம். நாம தேவைக்கு அதிகமா வெந்நீர் குடிக்கும்போது, ரத்தத்துல இருக்குற எலக்ட்ரோலைட்டுகளின் அடர்த்தி குறைந்து, இந்த சமநிலை பாதிக்கப்படும்.
இதனால, செல்களுக்குள்ள, குறிப்பா மூளை செல்களுக்குள்ள நீர் புகுந்து, ஒருவித வீக்கம் ஏற்பட ஆரம்பிக்கும். இந்த வீக்கம், மண்டை ஓட்டுக்குள்ள ஒருவித அழுத்தத்தை உருவாக்கும். இதோட விளைவாதான் நமக்குக் காரணமே இல்லாம தலைவலி, ஒருவித மந்தமான உணர்வு, கவனக்குறைவு போன்ற பிரச்சனைகள் ஏற்படுது.
சிலர் "சூடா குடிச்சாதான் நல்ல பலன் கிடைக்கும்"னு நினைச்சு, கொதிக்கக் கொதிக்க வெந்நீரைக் குடிப்பாங்க. இது ரொம்பவே தவறான பழக்கம். நம்ம வாய், தொண்டை மற்றும் உணவுக்குழாயில் உள்ள மென்மையான திசுக்களை இந்த அதீத சூடு பாதிக்கும். இதனால, உதடுகள்ல, வாய்க்குள்ள சின்ன சின்ன கொப்புளங்கள், புண்கள் ஏற்பட வாய்ப்பிருக்கு.
வெந்நீர் குடிப்பது ஒரு நல்ல பழக்கம்தான், ஆனால் அதை எப்போது, எப்படி, எவ்வளவு குடிக்க வேண்டும் என்பதில் ஒரு வரைமுறை வேண்டும்.