உடலில் சுரக்கும் இந்த எண்ணெயை தடுத்தால் ஆபத்து? சருமத்தில் நடக்கும் மாற்றம் இதுதான்!

முகம், உச்சந்தலையில் சுரக்கும் செபம் இயற்கை எண்ணெய் குறைந்தால் வறட்சி மற்றும் எக்ஸிமா உருவாகலாம்.
Dry Skin | இயற்கை எண்ணெய்
Dry Skin | இயற்கை எண்ணெய்
Updated on

உடலில் இயற்கையாகச் சுரக்கும் செபம் மற்றும் மெய்போமியன் எண்ணெய்கள் உடலின் தடுப்புச் சுவராகச் செயல்படுகின்றன என்பதையும், அவற்றைத் தடுப்பதால் தோலில் ஏற்படும் வறட்சி, முன்கூட்டிய முதுமை மற்றும் நோய்த்தொற்றுகளைத் தவிர்க்கும் வழிகளை தெரிந்து கொள்ளலாம் வாங்க.

மனிதனுக்கு அத்தியாவசியமாக எண்ணெய் சுரக்கும் பகுதிகள்:

முகம், உச்சந்தலை, மார்பு மற்றும் முதுகில் அமைந்துள்ள செபாசியஸ் சுரப்பிகளிலிருந்து (Sebaceous glands) மிக முக்கியமான இயற்கை எண்ணெய்கள் நம் உடம்பிலிருந்து சுரக்கின்றன. இந்தச் சுரப்பிகள் செபம் (Sebum) என்ற ஒன்றை வெளியிடுகின்றன. இது ஸ்குவாலீன் (squalene), கொழுப்பு அமிலங்களை (Fatty acids) கொண்டுள்ளது. இது சருமத்தையும், முடியையும் மென்மையாக்குகிறது. கண் இமைகளில் உள்ள மெய்போமியன் சுரப்பிகள் (Meibomian glands) போன்ற சிறப்பு வாய்ந்த சுரப்பிகள், கண்ணில் உள்ள நீர் ஆவியாவதை தடுக்கும் எண்ணெய்களைச் சுரக்கின்றன; இதனால் நம் பார்வை பாதுகாக்கப்படுகிறது.

மேற்கண்ட சுரப்பிகள் மிகவும் முக்கியமானவை, காரணம் அவை வெளியிலிருந்து தொற்றிக்கொள்ளும் நுண்ணுயிரிகளுக்கு எதிராக ஒரு தடையை இயற்கையாக உருவாக்குகின்றன. அந்த பகுதியில் நீர் இழப்பைக் குறைக்கின்றன மற்றும் திசுக்களை நெகிழ்வாக (Flexible) வைத்திருக்க உதவுகின்றன. இவற்றை தடுத்தால், அவை வறட்சி, தேவையற்ற தொற்றுகள் மற்றும் முன்கூட்டிய முதுமை போன்ற தோற்றத்திற்கு வழிவகுக்கும்.

Oily skin | இயற்கை எண்ணெய்
Oily skin | இயற்கை எண்ணெய்

ஏன் சுரப்பு தொடர வேண்டும்? கொஞ்சம் தெளிவாக:

மேலே கூறியதுபோல செபம் என்பது நமக்கு ‘தேவையற்ற எண்ணெய்’ ஒன்றும் அல்ல. அவை வியர்வை, சரும நுண்ணுயிரிகளுக்கு ஒரு பாதுகாப்புப் படலம் போல் செயல்படுகின்றன என்று அறிவியல் சான்றுகள் காட்டுகின்றன. இது அல்ர்ஜி, எரிச்சலூட்டும் பொருட்கள் சருமத்தில் ஊடுருவுவதைத் தடுக்கிறது மற்றும் முடியின் தண்டுகளை மென்மையாக்கி, அதன் உதிர்ந்து விழும் தன்மையை குறைக்கிறது. உச்சந்தலையில் சீரான எண்ணெய் சுரப்பது ஆரோக்கியமான முடி வளர்ச்சியை உறுதி செய்கிறது.

கண்களில் சுரக்கும் இயற்கையான மெய்போமியன் எண்ணெய், கண்ணில் கண்ணீரை நிலைப்படுத்துகிறது; அதன் ஓட்டத்தை நிறுத்துவது ‘வறண்ட கண்ணாக’ தோற்றத்தை ஏற்படுத்தும். ஆகவே, உடல் பாதுகாப்பு, சௌகரியத்திற்கு இந்த இயற்கையான எண்ணெய்கள் மிகவும் அவசியம்.

இந்த சுரப்பை தடுக்கும், நாம் மேற்கொள்ளும் தேவையற்ற பழக்கங்கள்:

பல நவீனப் பழக்கங்கள் அறியாமலேயே மேலே கூறிய அத்தியாவசிய எண்ணெய் உற்பத்தியைக் குறைக்கின்றன.

  • கடுமையான சேமிக்கல்ஸ் உள்ள சோப்புகளை கொண்டு முகத்தை எந்நேரமும் கழுவுவது இயற்கையான எண்ணெய்களை நீக்கிவிடுகிறது.

  • ஆல்கஹால் கலந்த அழகுசாதனப் பொருட்களை அடிக்கடி பயன்படுத்துவது சரும எண்ணெய்ச் சுரப்பிகளை காய்ந்துபோக செய்கிறது.

  • ஆரோக்கியமான கொழுப்புகள் குறைவாக உள்ள உணவுகளை அதிக நாட்கள் எடுத்துக்கொள்வது, உடலுக்கு தேவைப்படும் ‘நல்ல கொழுப்புகளின்’ உற்பத்தியைக் குறைக்கின்றன.

  • நாள்பட்ட மன அழுத்தம், தூக்கமின்மை கூட ஹார்மோன் அளவுகளை மாற்றி; சுரப்பைக் குறைக்கின்றன.

இந்தப் பழக்கங்கள் நம் உடம்பில் சமநிலையற்ற நிலையை உருவாக்கி, முகப்பரு, பொடுகு அல்லது எக்ஸிமாவுக்கு (Eczema) வழிவகுக்கின்றன.

இதில் இருக்கும் உலகளாவிய காலநிலை வேறுபாடுகள்:

மரபியல் மற்றும் காலநிலை காரணமாக உலகளவில் மனிதர்களின் எண்ணெய் சுரப்பு மாறுபடுகிறது. இந்தியா போன்ற ஈரப்பதமான வெப்பமண்டலப் பகுதிகளில், சரும எண்ணெய் செயல்பாடு இயற்கையாகவே அதிகமாக உள்ளது. இதுவே இந்தியர்களுக்கு எண்ணெய் சருமம் பரவலாக இருப்பதற்கான காரணம். வடக்கு ஐரோப்பா போன்ற குளிர் காலநிலைகளில், இந்த இயற்கை சுரப்பு குறைவாக இருப்பதால்; சருமத்தில் வறட்சியை ஏற்படுகிறது. இப்படி காலநிலை, வயது மற்றும் ஹார்மோன்கள் அனைத்தும் சரும எண்ணெய் சமநிலையில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்று ஆய்வுகள் உறுதிப்படுத்துகின்றன.

இதுவே நாடுகளுக்கு இடையே ஏன் சருமப் பராமரிப்பு முறைகள் வேறுபடுகின்றன? என்பதை நமக்கு காட்டுகிறது.

இதையும் படியுங்கள்:
சர்க்கரை நோய், ரத்த சோகையா? எந்த சிறுதானியத்தை சாப்பிட வேண்டும்?
Dry Skin | இயற்கை எண்ணெய்

மாபெரும் அறிஞர்களின் வார்த்தைகள்:

மகாத்மா காந்தி ஒருமுறை, ‘உண்மையான செல்வம் என்பது தங்கமும், வெள்ளியும் அல்ல, ஆரோக்கியமே’ என்று குறிப்பிட்டார்.

உடலில் எண்ணெய் சுரப்பு போன்ற இயற்கையான செயல்முறைகள் உண்மையான ஆரோக்கியத்தின் ஒரு பகுதி என்பதை அவரது வார்த்தைகள் நமக்கு நினைவூட்டுகின்றன. உலகளவில், முகப்பரு ஆராய்ச்சியில் முன்னோடியாகத் திகழ்ந்த தோல் மருத்துவர் ஆல்பர்ட் க்ளிக்மேன்(Albert Kligman), சருமத்தின் சமநிலைக்கு சீபம் (sebum) மையமானது என்பதை வலியுறுத்தினார். இந்த அறிக்கை தோல் மருத்துவ இதழ்களில்(NCBI StatPearls) வெளியிடப்பட்டுள்ளது.

சரும எண்ணெய் போன்ற இயற்கையான எண்ணெய் சுரப்புகள்; தோல், முடி மற்றும் கண் ஆரோக்கியத்திற்கு இன்றியமையாதவையாக இருக்கின்றன. நாம் தெரிந்தோ, தெரியாமலோ மேற்கொள்ளும் தவறான பழக்கவழக்கங்கள் மூலமாகவோ அல்லது அவற்றை தவறாக புரிந்துகொள்வதன் மூலமாகவோ இதை தடுக்க பார்த்தால்; தோல் வறட்சி, தொற்று மற்றும் சமநிலையின்மைக்கு வழிவகுக்கிறது. என்னதான் காலநிலை மற்றும் மரபியல் ஆகியவை உலகளவில் இந்தச் சுரப்புகளின் அளவை வடிவமைத்தாலும்; அறிவியலில் இதற்கான உண்மை தெளிவாக உள்ளது. ‘இந்த எண்ணெய்கள் நமக்கு ஒன்றும் எதிரிகள் அல்ல, அவை நம்மை பாதுகாக்கும் கூட்டாளிகளே. A.N. ராகுல்

இதையும் படியுங்கள்:
பசும்பால் vs எருமைப்பால் vs பாக்கெட் பால்: குழந்தைகளுக்கு எது உண்மையிலேயே சிறந்தது?
Dry Skin | இயற்கை எண்ணெய்
மருத்துவ மற்றும் பாதுகாப்பு விழிப்புணர்வு (Disclaimer): இந்த கட்டுரையில் உள்ள தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே வழங்கப்பட்டுள்ளன. இவை தொழில்முறை மருத்துவ ஆலோசனைகளுக்கு மாற்றாகாது. அவசர சிகிச்சைக்கும் மருத்துவ ஆலோசனைக்கும் தகுந்த மருத்துவரை அணுகவும்.

Reference

logo
Kalki Online
kalkionline.com