தற்போதைய மோசமான வாழ்க்கைச் சூழல் மற்றும் ஆரோக்கியம் இல்லாத தவறான உணவுப் பழக்கத்தால் நமது உடல் நச்சுக்களின் கூடாரமாகவே மாறிவிட்டது. இது உடலில் பல பிரச்னைகளுக்கு மூல காரணமாக அமைந்து விடுகிறது. உடல் தன்னைத்தானே சுத்தம் செய்யும் திறன் கொண்டதாக இருந்தாலும் நச்சுத்தன்மையும் அழுக்குகளையும் முழுவதுமாக வெளியேற்றுவதற்கான இயற்கை வழிமுறைகளை இந்தப் பதிவில் காண்போம்.
நச்சுக்களையும் அழுக்குகளையும் வெளியேற்றும் இயற்கை பானங்கள்:
இஞ்சி, எலுமிச்சை மற்றும் பசு மஞ்சள் சேர்த்த டீடாக்ஸ் பானம்: சுத்தமான தண்ணீர் நிரப்பிய கண்ணாடி பாட்டிலில், சுத்தம் செய்து பொடியாக நறுக்கிய எலுமிச்சை, இஞ்சி மற்றும் பசுமஞ்சள் ஆகிய மூன்றையும் சேர்க்கவும். இரவு முழுவதும் இது தண்ணீரில் ஊறட்டும். இந்த டீடாக்ஸ் பானத்தை காலையில் வெறும் வயிற்றில் குடிப்பது பலன் தரும். அழற்சி எதிர்ப்பு பண்புகள் கொண்ட இஞ்சி, வைட்டமின் சி நிறைந்த எலுமிச்சை, குர்குமின் நிறைந்த மஞ்சள் ஆகியவை கலந்த இந்த பானம் மிக அருமையான டீடாக்ஸ் ட்ரிங்க் ஆகும்.
இஞ்சி மற்றும் தேன் தேநீர்: இஞ்சியை பொடியாக நறுக்கி அல்லது துருவி தண்ணீரில் சேர்த்து சிறிது கொதிக்க வைத்து பின் தேன் சேர்த்து குடிப்பது உடலில் சேரும் நச்சுக்களை நீக்கும். இஞ்சியில் உள்ள அழற்சி எதிர்ப்பு பண்புகள் உடலை டீடாக்ஸ் செய்யஉதவுகிறது. அதே நேரத்தில், தேன் வயிற்று பிரச்னைகளை குணப்படுத்துகிறது. உடலை உள்ளிருந்து சுத்தம் செய்யும் சிறந்த டிடாக்ஸ் பானத்தை காலையில் வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும்.
வெள்ளரி, எலுமிச்சை, புதினா சேர்த்த டீடாக்ஸ் பானம்: சுத்தமான தண்ணீர் நிரப்பிய கண்ணாடி பாட்டிலில் மிக பொடியாக நறுக்கிய வெள்ளரி, எலுமிச்சை, புதினா இலைகள் ஆகியவற்றை சேர்த்து குறைந்தது 12 மணி நேரம் ஊற வைக்கவும். இரவில் தயாரித்த இந்த டீடாக்ஸ் நீரை காலையில் வெறும் வயிற்றில் குடித்து வந்தால், உடலில் சேர்ந்துள்ள நச்சுக்கள் நீங்கும். நார்சத்து அதிகம் கொண்ட வெள்ளரிக்காய் மற்றும் புதினா குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் ஆற்றல் கொண்டது. எலுமிச்சையில் வைட்டமின் சி அதிகமாக இருப்பதால் நோய் எதிர்ப்பு சக்தியும் அதிகரிக்கும்.
செலரி சாறு: சீனாவில் அதிகம் பயன்படுத்தப்படும்கீரை வகை இந்த செலரி. செலரி ஜூஸில் அதிக அளவு நீர் மற்றும் நார்ச்சத்து உள்ளது. செலரியில் கிட்டத்தட்ட 88 சதவிகிதம் நீர்ச்சத்து உள்ளது மேலும், இதில் ஆன்டி ஆக்ஸிடன்ட்டுகள், பாலிபீனால்கள் நிறைந்துள்ளன. உடலை டீடாக்ஸ் செய்யும் செலரி ஜூஸை தினமும் காலை சாப்பிட்டு வந்தால், சிறுநீர் மூலம், உடலிலுள்ள கழிவுகளும், நச்சுக்களும் வெளியேறி, குடல் ஆரோக்கியம் மேம்படும். செலரி இலைகளை எடுத்து நன்றாக தண்ணீரில் கழுவி, சிறு துண்டுகளாக நறுக்கி ஒரு மிக்ஸியில் சேர்த்து ஒரு கிளாஸ் தண்ணீர் ஊற்றி அரைக்கவும். பின்னர் இதனை வடிகட்டி குடித்து வரலாம். இதன் சுவை சற்று துவர்ப்பாக இருக்கும் என்பதால், தேவைப்பட்டால் சிறிதளவு தேன் சேர்த்துக் கொள்ளுங்கள்.
நம் அன்றாட வாழ்வில் உடலில் சேரும் நச்சுக்கள் இயற்கையாகவே வெளியேறினாலும் சிறிதளவு கசடுகள் உடலில் தங்கி இருக்கவே செய்யும். இதனை முழுவதும் நீக்குவதற்கான இந்த பானங்களை நாம் குடித்து வந்தாலே நமது ஆரோக்கியம் மேம்படும்.