சர்க்கரை நோயாளிகளா நீங்கள்? தீபாவளி இனிப்பு சாப்பிட சரியான வழி!

சர்க்கரை அளவை உயர்த்தாமல் தீபாவளி இனிப்புகளை எந்த அளவில், எப்போது சாப்பிட வேண்டும் என்பது குறித்த மருத்துவர்கள் மற்றும் ஊட்டச்சத்து நிபுணர்களின் ஆலோசனை.
Diabetes - Diwali Sweet | சர்க்கரை நோயாளிகள்
Diabetes - Diwali Sweet | சர்க்கரை நோயாளிகள்Image Credit: ChatGPT
கே.எஸ்.கிருஷ்ணவேனி

"கே.எஸ்.கிருஷ்ணவேனி, வைஷ்ணவ் கல்லூரியின் முன்னாள் மாணவி. கல்கி, மங்கையர் மலர், விகடன் போன்ற இதழ்கள் மற்றும் நாவல்களை படித்து, எழுதும் ஆர்வமும் மேலோங்க, 1992-ல், சமையல் குறிப்புகள் குறித்த சிறு கட்டுரைகளை எழுதத் தொடங்கினார். அவை 'மங்கையர் மலர்' ​​இதழில் தொடர்ந்து வெளியாகின. மேலும் பல இதழ்களில் எழுதிப் பல பரிசுகளை வென்றுள்ளார். 'பட்டிமன்றங்களில்' பங்கேற்ற அனுபவமும் உண்டு. தற்போது கல்கி ஆன்லைனில் எழுதி வருகிறார். ஆர்வம் மிக்கவர். பல்வேறு பிரிவுகளில் பல தலைப்புகளில் சுவாரஸ்யமான கட்டுரைகளை எழுத வல்லவர். மிக விரைவாக எழுதவும் கூடியவர்."

Updated on: 

சர்க்கரை நோயாளிகள் தீபாவளி இனிப்புகளை முற்றிலும் தவிர்க்க வேண்டிய அவசியம் இல்லை. ஆனால் முறையான கட்டுப்பாடும் விழிப்புணர்வும் இருந்தால் சர்க்கரை அளவை உயர்த்தாமல் பண்டிகையைக் கொண்டாட முடியும் என்று மருத்துவர்களும் ஊட்டச்சத்து நிபுணர்களும் கூறுகின்றனர்.

மருத்துவர் சொல்லும் அளவு:

ஒரே நேரத்தில் தட்டு நிறைய இனிப்புகளை சாப்பிடக்கூடாது. நமக்கு பிடித்த இனிப்புகளை மட்டும் தேர்ந்தெடுத்து ஒரு நாளைக்கு ஒன்று அல்லது இரண்டு சிறிய துண்டு இனிப்புகளை மட்டுமே எடுத்துக் கொள்ளலாம். ஒரு முழு இனிப்பை சாப்பிடுவதற்கு பதிலாக, அதில் கால்வாசி அல்லது பாதி அளவு மட்டும் என அளவோடு சாப்பிடலாம். இனிப்பு சாப்பிடும் நாளில் மதிய உணவிலோ அல்லது இரவு உணவிலோ சாப்பிடும் சாதம், சப்பாத்தி போன்ற கார்போஹைட்ரேட் உணவுகளின் அளவைக் கண்டிப்பாக குறைத்துக் கொள்ள வேண்டும். அத்துடன் முக்கியமாக எண்ணெயில் பொரித்து, சர்க்கரைப்பாகில் ஊற வைத்த ஜிலேபி, குலோப் ஜாமுன் போன்ற இனிப்புகளைத் தவிர்ப்பது அல்லது மிகக் குறைந்த அளவில் எடுப்பது நல்லது. காரணம் இவை ரத்த சர்க்கரையை சட்டென்று உயர்த்தி விடும்.

இனிப்பு சாப்பிடும் நேரம்:

வெறும் வயிற்றில் இனிப்பு சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். இது ரத்தத்தில் சர்க்கரை அளவை சட்டென்று அதிரடியாக உயர்த்தி விடும். உணவோடு அல்லது உணவுக்குப் பின் சாப்பிடும் போது சர்க்கரை ரத்தத்தில் மெதுவாகவே கலக்கும். மதிய உணவில் காய்கறிகள், கீரைகள், சாலட், சுண்டல் போன்ற நார்ச்சத்து மற்றும் பனீர், முட்டை, பருப்பு போன்ற புரதச்சத்து நிறைந்த உணவுகளை முதலில் சாப்பிட்டு விட்டு அதன் பிறகு சிறிய துண்டு இனிப்பை சாப்பிடலாம். நார்ச்சத்து சர்க்கரை உறிஞ்சப்படுவதை மெதுவாக்கும். இரவு உணவிற்குப் பிறகு அல்லது படுக்கப் போவதற்கு முன்பு இனிப்பு சாப்பிடுவதைக் கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும். பகல் நேரத்தில் சாப்பிட்டால் உடற்பயிற்சி அல்லது வேலைகள் மூலம் அந்தக் கலோரிகள் எரிக்கப்பட வாய்ப்புண்டு.

மருத்துவர்களின் கூற்றுப்படி மதிய உணவு நேரத்தில் நமது உடலின் வளர்சிதை மாற்றம் (Metabolism) அதிகமாக இருக்கும் என்பதால் இனிப்பு சாப்பிட அதுவே உகந்த நேரம்.

ஆரோக்கியமான மாற்று வழிகள்:

இயற்கை இனிப்புகள்:

வெள்ளை சர்க்கரைக்கு பதிலாக ஸ்டீவியா (Stevia) போன்ற மருத்துவரால் அங்கீகரிக்கப்பட்ட மாற்று இனிப்புகளைப் பயன்படுத்தலாம். நாட்டுச்சர்க்கரை, வெல்லம், தேன் ஆகியவற்றிலும் சர்க்கரை உள்ளது. எனவே அவற்றையும் அளவோடு தான் பயன்படுத்த வேண்டும்.

Diwali Sweets
Diwali SweetsImage credit: Gemini AI

வீட்டுப் பலகாரங்கள்:

கடைகளில் வாங்குவதை விட வீட்டிலேயே கேழ்வரகு, தினை போன்ற சிறுதானியங்கள் மற்றும் ஓட்ஸ் பயன்படுத்தி இனிப்புகளைச் செய்யலாம். ராகி முறுக்கு, கம்பு லட்டு, தினைப் பாயாசம் போன்றவற்றை வீட்டில் செய்து சாப்பிடலாம். வீட்டில் தயாரிக்கப்படும் பலகாரங்கள் என்றாலும் அவற்றில் மைதாவுக்குப் பதிலாக சிறுதானியங்கள் மற்றும் குறைந்த கொழுப்புள்ள பாலைப் பயன்படுத்தி இனிப்புகள் செய்யலாம். வீட்டில் தயாரிக்கும் இனிப்புகளில் சர்க்கரை மற்றும் நெய்யின் அளவை வெகுவாக குறைத்துக் கொள்ளலாம்.

கடைகளில் விற்கப்படும் சுகர்-ஃப்ரீ இனிப்புகளில் சர்க்கரை இல்லை என்றாலும் அதில் சேர்க்கப்படும் மைதா, நெய் மற்றும் பால் கட்டிகள் சர்க்கரை அளவை உயர்த்தக் கூடும் என்பதால் லேபிளைப் படித்து பார்த்து அளவோடு எடுத்துக் கொள்ளலாம்.

நட்ஸ் மற்றும் உலர் பழங்கள்:

பாதாம், முந்திரி, பிஸ்தா மற்றும் அக்ரூட் போன்ற பருப்புகளை லேசாக வறுத்து, பேரிச்சம் பழத் துண்டுகள், உலர் திராட்சை சேர்த்து உருண்டைகளாகப் பிடித்து (லட்டு) இனிப்புக்கு மாற்றாக பயன்படுத்தலாம். ஆனால் பேரிச்சம் பழம் மற்றும் உலர் திராட்சைகளை குறைந்த அளவில் பயன்படுத்த வேண்டும். நட்ஸ் மற்றும் உலர் பழங்களில் கலோரிகள் அதிகம் என்பதால் அளவோடு எடுத்துக் கொள்ள வேண்டும்.

காரப் பலகாரங்கள்:

இனிப்புகளுக்கு பதிலாக ஓமப்பொடி, முறுக்கு போன்ற காரப் பலகாரங்களை எடுத்துக் கொள்ளலாம். ஆனால் அதுவும் குறைந்த அளவில் இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.

சில முக்கிய குறிப்புகள்:

பண்டிகை பிஸியில் தண்ணீர் குடிக்க மறக்க வேண்டாம். போதிய அளவு தண்ணீர் குடிப்பது ரத்தத்தில் சர்க்கரை அளவை சீராக வைத்திருக்க உதவும்.

சர்க்கரை கலந்த குளிர்பானங்களைத் தவிர்த்து போதிய அளவு தண்ணீர், மோர் அல்லது எலுமிச்சை சாறு குடிக்க உடலில் சர்க்கரை அளவை சமநிலைப்படுத்த உதவும்.

இதையும் படியுங்கள்:
பட்டாசு வெடிக்கும்போது புடவை, துப்பட்டா தீப்பிடிக்காமல் இருக்க எச்சரிக்கைகள்!
Diabetes - Diwali Sweet | சர்க்கரை நோயாளிகள்

இனிப்பு சாப்பிட்ட நாட்களில் வழக்கத்தை விட சற்று அதிகமாக உடற்பயிற்சி அல்லது நடைபயிற்சி செய்ய மறக்க வேண்டாம். இனிப்பு சாப்பிட்ட பிறகு 15 முதல் 20 நிமிடங்கள் மிதமான நடைபயிற்சி மேற்கொள்வது நல்லது.

ரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்பாட்டில் வைத்துக் கொண்டு, சரியான அளவு மற்றும் சரியான நேரத்தில் சாப்பிடுவது மிகவும் முக்கியம் என்று மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்.

பண்டிகை நாட்களுக்கு முன்பும், பின்பும் நமது ரத்த சர்க்கரை அளவை (Blood Glucose) வீட்டிலேயே குளுக்கோமீட்டர் மூலம் பரிசோதித்துக் கொள்வது நல்லது.

பண்டிகை நாட்களிலும் மருத்துவர் பரிந்துரைத்த மாத்திரைகளையோ அல்லது இன்சுலினையோ சரியான நேரத்திற்கு எடுத்துக் கொள்ள வேண்டும். இது பண்டிகைக் காலத்தை மகிழ்ச்சியாகவும் அதே நேரம் ஆரோக்கியமாகவும் கொண்டாட உதவும்.

இதையும் படியுங்கள்:
தீபாவளிக்கு மறுநாள் கண் எரிச்சல், தொண்டை கரகரப்பா? தப்பிக்க 5 வழிகள்!
Diabetes - Diwali Sweet | சர்க்கரை நோயாளிகள்

Reference: