சர்க்கரை நோயாளிகள் இரத்தத்தில் சர்க்கரை அளவை பராமரிக்கத் தவறினால், பல்வேறு சிக்கல்களைச் சந்திக்க நேரிடும். அவற்றில் ஒன்றுதான் "இரத்தச் சர்க்கரை அதிர்ச்சி (Diabetic Shock)" அல்லது "ஹைப்போகிளைசீமியா (Hypoglycemia)". இது சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்படக்கூடிய மிக மோசமான நிலை. இரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகமாக குறையும் இந்த நிலையை உடனடியாகக் கவனிக்காவிட்டால், உயிருக்கே ஆபத்தை விளைவிக்கும்.
பொதுவாக, ஒருவரின் இரத்தத்தில் சர்க்கரையின் அளவு 80 முதல் 130 மில்லிகிராம்/டெசிலிட்டர் வரை இருக்க வேண்டும். ஆனால், சில சமயங்களில் இந்த அளவு மிகவும் குறைந்துவிடும். உடலுக்குத் தேவையான ஆற்றல் கிடைக்காதபோது, மயக்கம், வலிப்பு போன்ற தீவிரமான விளைவுகள் ஏற்படலாம். உணவு உட்கொள்ளாமல் இருப்பது, வழக்கத்திற்கு மாறாக அதிக உடற்பயிற்சி செய்வது அல்லது கடுமையான வாந்தி போன்ற காரணங்களால் இரத்தச் சர்க்கரை அளவு குறைய வாய்ப்புள்ளது. குறிப்பாக, டைப் 1 நீரிழிவு நோயாளிகள் இந்த நிலையை அதிகமாக எதிர்கொள்ள நேரிடலாம்.
இதற்கான அறிகுறிகளை நாம் உன்னிப்பாகக் கவனிக்க வேண்டும். அதிகப்படியான வியர்வை, படபடப்பு, மன அழுத்தம், சருமம் வெளிறிப் போதல், குமட்டல் அல்லது வாந்தி, இதயத் துடிப்பு அதிகரித்தல், உடல் நடுக்கம், மயக்கம் மற்றும் தலைச்சுற்றல் போன்றவை இதன் முக்கிய அறிகுறிகளாகும். இந்த அறிகுறிகள் தென்பட்டால், உடனடியாக நடவடிக்கை எடுப்பது அவசியம்.
அமெரிக்க நீரிழிவு நோய் சங்கம் பரிந்துரைக்கும் எளிய முறையை இங்கே கவனிக்கலாம். முதலில், இரத்தச் சர்க்கரை அளவை உடனடியாகப் பரிசோதிக்க வேண்டும். ஒருவேளை அது 70 mg/dL க்கும் குறைவாக இருந்தால், உடனடியாக 15 கிராம் கார்போஹைட்ரேட் உள்ள இனிப்புப் பண்டம் அல்லது இனிப்பு பானத்தை உட்கொள்ள வேண்டும். பதினைந்து நிமிடங்களுக்குப் பிறகு மீண்டும் இரத்தச் சர்க்கரை அளவை பரிசோதிக்கவும். அப்போதும் சர்க்கரை அளவு குறைவாக இருந்தால், மீண்டும் அதே அளவு கார்போஹைட்ரேட்டை உட்கொள்ள வேண்டும். சர்க்கரை அளவு இயல்பு நிலைக்கு வந்தவுடன், வழக்கமான உணவை உட்கொள்ளலாம். இந்த முயற்சிகளுக்குப் பிறகும் இரத்தச் சர்க்கரை அளவு சரியாகவில்லை என்றால், உடனடியாக மருத்துவரை அணுகுவது மிகச் சிறந்தது.
சர்க்கரை நோயாளிகள் இரத்தச் சர்க்கரை குறைவு ஏற்படுவதற்கான அறிகுறிகளைப் பற்றி நன்கு அறிந்திருக்க வேண்டும். சரியான நேரத்தில் மேற்கொள்ளும் முதலுதவி மூலம் உயிரிழப்பைத் தவிர்க்கலாம். தினமும் இரத்தச் சர்க்கரை அளவைச் சரிபார்ப்பது, சரியான நேரத்தில் உணவு உட்கொள்வது, மருத்துவர் பரிந்துரைத்த மருந்துகளை முறையாக எடுத்துக்கொள்வது மற்றும் உடற்பயிற்சியின் அளவைக் கட்டுக்குள் வைத்திருப்பது மிகவும் அவசியம்.
விழிப்புணர்வுடன் செயல்படுவதன் மூலமும், உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்வதன் மூலமும் இரத்தச் சர்க்கரை அதிர்ச்சியிலிருந்து நம்மைப் பாதுகாத்துக்கொள்ள முடியும்.
(முக்கிய அறிவிப்பு: இக்கட்டுரையில் உள்ள தகவல்கள், பல்வேறு செய்திகளின் தொகுப்பாக மட்டுமே வழங்கப்படுகின்றன. இவை மருத்துவ நிபுணர்களின் ஆலோசனைகள் அல்ல. உடல்நலம் தொடர்பான எந்தவொரு சந்தேகத்துக்கும், பிரச்னைக்கும், அவசியம் மருத்துவரை அணுகவும்.)