

மகப்பேறு காலத்தில் பெண்களுக்கு வயிற்று தசை பாதிப்பு, எடை அதிகரிப்பு, ஹார்மோன் மாற்றங்கள் போன்ற பிரச்சனைகள் நடைபெறும். கர்ப்ப காலத்தில் பெரிதாகும் கருப்பையால் வயிற்று தசைகள் இணைப்பு திசுக்கள் விரிவடைகின்றன. இது பலவகையில் உடல்நலத்தை பாதிக்கிறது.
குறிப்பாக கர்ப்பகால ஹார்மோன்களான ரிலாக்ஸின், ஈஸ்ட்ரோஜன் ஆகியவற்றால் வயிற்றுப் பகுதியில் செங்குத்தாக இருக்கும் இரண்டு தசைகள் பிரிகின்றன (டயஸ்டாஸிஸ் ரெக்டி). இத்துடன் பிரசவத்தின் போது ஏற்படும் அழுத்தத்தால் அடிவயிறு தசை பிரிதலும் ஏற்படலாம்.
கர்ப்ப காலத்தில் இது இயல்பான ஒன்றுதான். கர்ப்ப காலத்தில் தாயின் உடல் எடை அதிகரிப்பது, தாயின் வயது ஆகியவை தசை பிரிதலுக்கான காரணமாக கருதப்படுகிறது.
இதற்கு அறிவியல் பூர்வமாக ஆதாரம் எதுவும் இல்லை எனலாம். குழந்தைகளுக்கும் வயிற்று தசை பிரிதல் ஏற்படலாம். குறிப்பாக குறை பிரசவத்தில் பிறந்த குழந்தைகளுக்கு இதற்கான வாய்ப்புகள் அதிகம்.
குழந்தைகளின் வயிற்று தசைகளின் முழுமையற்ற வளர்ச்சி, தசை இணைப்பில் ஏற்படும் பிரச்சனைகள் தானாகவே சரியாகிவிடும். வயிற்றின் மையப்பகுதி அகலமாகுதல், மலக்குடல் வயிற்றுத் தசையின் இடையே உள்ள இடைவெளியை அசாதாரணமாக விரிவடையச் செய்வது டயஸ்டாஸிஸ் ரெக்டி (Diastasis Recti) எனப்படும். இது மகப்பேறு நேரத்தில் பெண்களை பாதிக்கும் உடல் சிரமங்களாகும். ஒரே பிரசவத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட குழந்தைகளை பெற்றெடுப்பவர்கள் இந்த டயஸ்டாசிஸ் நோயால் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள். மல்லாந்து படுத்து விரல்களால் அடிவயிற்றில் அழுத்தும் போது பிரச்சனையின் தீவிரத்தை உணரலாம்.
வயிற்று தசைகள் விரிவடையும்போது முக்கிய அறிகுறிகளாக வயிற்றில் தளர்வு, வீக்கம் இருக்கும். கீழ் முதுகு வலி, மலச்சிக்கல், பலவீனமான இடுப்பு தசைகள் இவை அறிகுறிகள் ஆகும்.
கர்ப்ப காலத்தில் இந்த பிரச்சனைகள் மோசமடையாமல் இருக்க, முறையான உடற்பயிற்சிகள் செய்வதன் மூலம் கட்டுப்படுத்தலாம்.
குழந்தை பிறந்து 6 முதல் 8 வாரங்களுக்கு பிறகு தொப்புள் குடல் இறக்கத்தின் வளர்ச்சியை தடுக்க இடுப்பு தசைகளை வலுப்படுத்த முறையான பயிற்சிகளை எடுத்துக் கொள்ள வேண்டும். அடிவயிற்றில் அதிக அழுத்தம் கொடுக்கும் வகையிலான பளு தூக்குதல் பயிற்சிகளை தவிர்க்க வேண்டும். இருமும் போதும் அடிவயிற்றை ஆதரவாக பிடித்துக் கொள்ள வேண்டும்.
உட்கார்ந்து இருக்கும் போது கீழ் முதுகிற்கு ஆதரவாக தலையணை வைப்பது நல்லது. சிறுநீர், மலம் இவற்றை அடக்க முடியாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். எனவே குழந்தை பிறந்த பிறகு 6 முதல் 8 வாரங்களுக்கு பின் எளிமையான நடைபயிற்சி, சிறிய உடற்பயிற்சி போன்றவற்றை செய்வது நல்லது.
எனவே இத்தகைய குறைபாட்டை சிறிய உடற்பயிற்சிகள் மற்றும் நடைப்பயிற்சி மூலம் சரி செய்யலாம்.
(முக்கிய குறிப்பு: இந்தத் தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே. மருத்துவ ஆலோசனைக்கு சரியான தகுந்த மருத்துவரை அணுகவும்)