‘ஹெல்மின்த்ஸ் பாராசைட்’ என்பது ஒருவகை குடற்புழுவாகும். இதில் நாடாப் புழு, கொக்கிப் புழு, வளையப் புழு என பல வகைகள் உண்டு. இது மண்ணிலிருந்து, அசுத்தமான குடிநீர் அல்லது சுகாதாரமற்ற சூழ்நிலை மூலம் மனித வயிற்றுக்குள் சென்று குடலுக்குள் தங்கி இனப்பெருக்கம் செய்து வாழத் தொடங்கும். அங்குள்ள திசுக்கள் மற்றும் இரத்தத்தை உணவாகக் கொண்டு வளரும். அவற்றின் எண்ணிக்கை அளவில் பெருகும்போது நம் உடலில் வயிற்று வலி, வாந்தி, குமட்டல் போன்ற உடல் நலக் கோளாறுகளின் அறிகுறிகள் தோன்றும். அப்போது நம் வீட்டிலுள்ள பொருட்களைக் கொண்டே அவற்றைக் கட்டுப்படுத்தவும் அழிக்கவும் முடியும். அது எவ்வாறு என்பதை இந்தப் பதிவில் பார்க்கலாம்.
பூண்டில் அல்லிசின் மற்றும் அஜோனே (Ajoene) என்ற கூட்டுப் பொருட்கள் உள்ளன. இவை ஆன்டி மைக்ரோபியல் மற்றும் ஆன்டி பாராஸைடிக் குணம் கொண்டுள்ளவை. பூண்டை பச்சையாகவோ, சமைத்தோ சாப்பிடும்போது அவை குடற்புழுக்களின் வளர்ச்சியைத் தடுக்க உதவுகின்றன.
பூசணி விதைகளில் உள்ள குர்குர்பிடாசின் (Curcurbitacin) என்ற கூட்டுப்பொருள் ஆன்டி பாராஸைடிக் குணம் கொண்டது. இந்த விதைகளை பச்சையாகவோ வறுத்தோ உண்ணும்போது அவை குடற்புழுக்களை உடலிலிருந்து வெளியேற்ற உதவுகின்றன.
பப்பாளி விதைகளில் உள்ள பாபெயின் என்ற என்ஸைம் அன்தெல்மின்டிக் (Anthelmintic) குணம் கொண்டது. இது குடலிலுள்ள ஒட்டுண்ணிகளை அழிக்க வல்லவை.
மஞ்சளில் குர்குமின் என்றொரு சக்தி வாய்ந்த ஆன்டி ஆக்ஸிடன்ட் அதிகம் உள்ளது. இது ஆன்டி மைக்ரோபியல் மற்றும் ஆன்டி இன்ஃபிளமேட்டரி குணங்கள் உடையது. மஞ்சளை சமையலில் சேர்த்து உட்கொண்டாலும், டீ தயாரித்து குடித்தாலும் அது குடற்புழுக்களை வெளியேற்ற உதவும்.
தேங்காய் மற்றும் தேங்காய் எண்ணெய்யை உணவில் சேர்த்து உட்கொண்டால் டீஹெல்மின்டைசேஷன் செயலில் நல்ல பலன் கிடைக்கும்.
பைனாப்பிளில் ப்ரோமெலைன் என்ற ஆன்டி பாராஸைடிக் குணம் கொண்ட ஒரு என்சைம் உள்ளது. இப்பழத்தை உட்கொண்டால் குடற்புழுக்கள் அழிந்து செரிமானம் சிறப்பாக நடைபெறும்.
லவங்கம் ஒட்டுண்ணிகளின் முட்டைகளையும் லார்வாக்களையும் அறவே அழிக்கக்கூடியது.
ஊட்டச் சத்துக்கள் அதிகம் நிறைந்த கேரட், பெரி வகைப் பழங்கள் மற்றும் சன்பிளவர் விதைகளை உட்கொண்டால் உடலில் நோயெதிர்ப்புச் சக்தி அதிகரிக்கும். இதன் மூலமும் குடற்புழுக்களின் பெருக்கத்தைத் தடுத்து நிறுத்தி நலமடையலாம்.
நாம் வாழ்வதற்கு சுகாதாரமான சூழ்நிலையை உருவாக்குவோம்; ஆரோக்கியம் காப்போம்.