கோடை வந்து விட்டால்... அச்சச்சோ அப்பப்பா... அனல் அடிக்குதே!

Summer
Summer
Published on

கோடையில் உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்வதற்கு உஷ்ணத்தை தணிக்கும் குளுகுளுப்பான பொருட்களை நாடுவோம். எவற்றை எல்லாம் சாப்பிட்டு கோடையை ஆரோக்கியமாக கடக்கலாம் என்பதைப் பற்றி இப்பதிவில் காண்போம்.

கோடை காலத்தில் பசி தாகம் அதிகமாக இருக்கும். ஆதலால் உணவு உட்கொள்ளும் நேரம் கடந்து உண்பதால் உடலில் தண்ணீர் குறைந்து, உதடு காய்ந்து போவது , கன்னத்தில் உள் வெடிப்பு, அதனால் தொண்டை வறட்சி ஆகியவை ஏற்படக்கூடும். உதடு வறட்சிக்கு காரணம் நாம் வெப்பத்தை குறைக்கும் அளவுக்கு நீராகாரமும் உணவும் சாப்பிடாமல் இருப்பதுதான். அதனால் வீட்டிலேயே மோர், பழச்சாறு , நீராகாரம், மிதமான சூப், பானக வகைகளை அருந்தலாம். தினம் ஒரு இளநீர் குடிக்கலாம். இது நம் உடம்பை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவும்.

கோடை வந்து விட்டால் பெரியவர்கள் மண்பானை தண்ணீரையும், வாலிப வயதினர் , ஃபிரிட்ஜ் வாட்டர், ஐஸ் வாட்டர் என்று அடிக்கடி குடித்து தாகம் தீர்த்துக் கொள்வது வழக்கம். ஐஸ் வாட்டரை அடிக்கடி குடித்து தொண்டை கரகரப்பு , சளி பிடிப்பது போன்ற பிரச்சனைகள் ஏற்படுவதும் உண்டு. அதற்கு ஐஸ் கட்டியை ஒரு கிண்ணத்தில் போட்டு வைத்து பின் அந்த ஐஸ் கட்டியை எடுத்துவிட்டு, அந்த கிண்ணத்தில் நாம் குடிக்கும் அளவுக்கு தண்ணீர் விட்டால் அந்த பாத்திரத்தில் இருந்த ஐஸ்கட்டியின் குளிர்ச்சி அந்த தண்ணீரோடு சேரும். இப்போது அந்த தண்ணீரையும் குடிப்பதால் உடம்பிற்கு கெடுதல் எதுவும் வராது. குளுகுளுப்பாக குடித்த திருப்தியும் கிடைக்கும். இந்த தண்ணீரையே மோரிலும் கலந்து குடிக்கலாம் தாகம் நன்றாக அடங்கும்.

கோடை வெப்பத்தில், இடைப்பட்ட நேரங்களில், மிதமான குளிர்ச்சியான தண்ணீர் அருந்த நம் உடல் வெப்பத்தைக் குறைக்கும். உடல் நலத்தை காக்கும்.

புதினாவில் இரும்பு சத்து, கால்சியம் ,வைட்டமின் சத்துக்களும் இருக்கிறது . இது ரத்தத்தை சுத்தம் செய்யும் சக்தி உள்ளது . ஆதலால் சல்ஜீரா வாட்டர் செய்து மண்பானையில் வைத்து அதை குடித்து வந்தால் வயிற்று உபாதைகள் நீங்கி நல்ல குளிர்ச்சியை தரும்.

கோடையில் சிலருக்கு கண் எரிச்சல் ஏற்படுவது உண்டு. அவர்கள் நல்லெண்ணெயில் சீரகம் போட்டு காய்ச்சி தலைக்கு தேய்த்து வரலாம். குளித்தும் வர, எரிச்சல் குணமாகும்.

மூலச்சூடு அதிகமாக இருந்தால் ரோஜா பூவை சாறு எடுத்து அதனுடன் சர்க்கரை சேர்த்து குடித்து வரலாம். இதனால் உடல் சூடு குறைந்து குளுமை கிடைக்கும்.

உடல் சூடு குறையவும் இரத்த ஓட்டம் சீராகவும் வாரம் ஒரு முறை நல்லெண்ணெய் தேய்த்து குளித்து வந்தால் உடல் குளிர்ச்சியாகி நல்ல தூக்கமும் வரும்.

சிலருக்கு இப்படி குளிக்கும் பொழுது தும்மல் வரும். தொடர்ந்து இப்படி தும்மல் வந்தால் உச்சந்தலையில் விபூதி வைத்து தேய்க்கலாம். அல்லது நான்கு மிளகை பொடி செய்து உச்சந்தலையில் தேய்க்க தும்மல் நீங்கும். எப்பொழுதாவது எண்ணெய் குளியல் எடுப்பவர்களுக்குத் தான் இப்படி தும்மல் வரும். அடிக்கடி எண்ணெய் குளியல் எடுத்தால் இது சரியாகிவிடும்.

சிலருக்கு கை கால்களில் எரிச்சல் ஏற்படுவது உண்டு. உஷ்ணம் அதிகமானாலும் இந்த எரிச்சல் கூடும். அதற்கு பாகற்காயை நைசாக கெட்டியாக அரைத்து எரிச்சல் உள்ள இடத்தில் பூசி வர எரிச்சல் அடங்கி குணம் தெரியும்.

கோடையில் வியர்வை மிகுதியினால் வேர்க்குரு உடல் முழுவதும் உண்டாகும். அப்போது நல்ல சந்தனத்தை கரைத்து வேர்க்குருப்பட்ட இடங்களில் பூச குணமாகும். அல்லது நுங்கு நீர் வேர்குருவில் வைக்கலாம். நமச்சல் இருக்கிறது என்று சொரியக் கூடாது .

இதையும் படியுங்கள்:
மனநலப் பிரச்னைக்கு சிகிச்சையின் ஒரு பகுதியாக சமையல் கலையையும் பரிந்துரைக்கிறார்கள் தெரியுமா?
Summer

உடலில் உஷ்ணம் அதிகமாகும் பொழுது வெங்காயம் சாப்பிடலாம். பச்சை வெங்காயம் சாப்பிட்டால் நீர் கடுப்பு மறைந்து நல்ல நிவாரணம் கிடைக்கும் .

உடல் சூட்டை குறைக்க வெந்தயம் நல்ல மருந்து. காலையில் மோரில் வெந்தய பொடி கலந்து குடிக்கலாம் நல்ல குளிர்ச்சி கிடைக்கும். வெந்தய குழம்பு, வெந்தயக் களி, என்று செய்து சாப்பிட்டு உடலை குளிர்ச்சியாக வைத்துக் கொள்ளலாம் . சர்க்கரை வியாதியையும் வெந்தயம் கட்டுப்படுத்தும்.

வெயில் காலத்தில் உள்ளங்கால் எரிச்சல் குணம்பெற மருதாணி இலையை அரைத்து கட்டலாம்.

கண்வலி இருந்தால் காட்டன் துணியில் சூடான சாதத்துடன் சிறிது விளக்கெண்ணையை கலந்து சிறு மூட்டையாகக் கட்டி ஒத்தடம் தர வலி நிற்கும்.

கோடை நேரத்தில் உணவு உட்கொள்ளாமல் இருக்கக் கூடாது. சாப்பிடும் முன் ஒரு டம்ளர் தண்ணீர் குடிக்க வேண்டும். குறைவான காரம் சேர்த்து சாப்பிடுவது மிக மிக அவசியம்.

வெயில் காலங்களில் உப்புச்சத்து வெளியேறுவதால் உடம்புக்கு சோர்வு ஏற்படும். அதை தடுக்க ஆப்பிள் நல்ல உதவி செய்யும். அதில் உள்ள பொட்டாசியம் உடம்பில் சேரும். ஆதலால் ஆப்பிள் ஜூஸ், ஆப்பிளை சாப்பிடுவதை வழக்கமாக்கிக் கொள்ளலாம்.

பச்சை வாழைப்பழம் குளிர்ச்சி தரும். அவற்றை வில்லைகளாக நறுக்கி கண்களில் மீது வைத்தாலும் கண்களுக்கு குளிர்ச்சி கிடைக்கும். ரஸ்தாளி பழம் வெப்பத்தை குறைக்கும். பேயன் பழம் கண்களுக்கு குளிர்ச்சியைத் தரும். ஆதலால் இவற்றை உட்கொண்டு ஆரோக்கியம் காக்கலாம்.

இதையும் படியுங்கள்:
கருமையான கூந்தலுக்கு இந்த டிப்ஸை ஃபாலோ பண்ணுங்க!
Summer

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com