
உடற்பயிற்சி என்பது தற்போது அனைவருக்கும் அவசியம் தேவைப்படும் ஒன்றாகிவிட்டது. உடற்பயிற்சிகள் பற்றியும் உடல் எடையை குறைத்தல் பற்றியும் பல தவறான கருத்துக்கள் உள்ளன. அவை என்ன என்பதைப் பற்றி இங்கு பார்ப்போம்.
# உடற்பயிற்சி தொடரும் போது தினசரி உடல் எடையை கணக்கிட வேண்டும் - என்பது தவறு.
பெரும்பாலானவர்கள் எடைப் பார்க்கும் கருவியில் தினமும் சில முறை ஏறி நிற்பதை பழக்கமாக்கியுள்ளனர். உடற்பயிற்சி செய்து முடித்தவுடன் எடை குறைந்துள்ளதா என்று பார்க்கின்றனர். இது முற்றிலும் தவறு.
சாப்பிடும் முன் பின், தண்ணீர் அருந்தும் முன் பின், என்று உடல் எடையில் மாற்றம் இருக்கும். இதையெல்லாம் கணக்கில் கொள்ளாமல் எடையை அனுதினமும் பார்த்து குறையவில்லை என்று கவலை கொள்வது தவறு.
# உடற்பயிற்சி அல்லது பயிற்சி செய்து முடித்த பிறகு புரோட்டின் அருந்த வேண்டும் - தவறான கருத்து.
பயிற்சிக்குப் பிறகு ஏற்படும் நீர் இழப்பை ஈடுகட்ட சாதாரண தண்ணீரோ அல்லது பழச்சாறோ அருந்தலாம். நிச்சயம் புரோட்டின் பால் அருந்த வேண்டும் என்பது தவறு.
# தினமும் பயிற்சி செய்வதால் மற்ற நேரங்களில் எதையும் சாப்பிடலாம் - தவறு.
பயிற்சி செய்கிறோம் என்று அதிகப்படியாக உணவு உண்ணுதல் அல்லது மதிய நேரத்தில் தூங்குதல் இரண்டுமே தவறான ஒரு விஷயம். முறையான கட்டுப்பாடு அவசியம்.
# குறைவான பயிற்சிகளை நீண்ட நேரம் செய்தால் கொழுப்பு அதிகப்படியாக குறையும். இது முற்றிலும் தவறு.
அவரவர் உடல் கொழுப்பு அளவுக்கும், உடல் தகுதிக்கும் ஏற்ப பயிற்சி செய்வதே சிறந்த பலனை தரும். உடல் வலிக்க வலிக்க பயிற்சி செய்தால்தான் எடை குறையும் என்பது தவறான கருத்து. சிலர் தசைவலி வரும் வரை வியர்க்க விரிக்க கடுமையாக பயிற்சி செய்வார்கள். இது மிகத்தவறு.
# வயிற்றுப் பகுதி மற்றும் கையில் உள்ள கொழுப்பை தனியாக குறைக்க முடியும் - மிகத் தவறான கருத்து.
பெரும்பாலானோர் வயிற்றில் உள்ள கொழுப்பு கரையை அதற்காக உள்ள பிரத்யேக பயிற்சிகளை மட்டும் செய்தால் போதும் என்று நினைக்கின்றனர். உடலில் உள்ள எந்த ஒரு பகுதியின் கொழுப்பையும் தனியே குறைக்க முடியாது. ஒட்டுமொத்த உடலுக்கான பயிற்சிகளையும் செய்தால்தான் பலன் கிடைக்கும்.
# பெண்கள் வெயிட் லிப்டிங் போன்ற பயிற்சிகள் செய்யக்கூடாது - என்பது தவறான கருத்து.
இது போன்ற பயிற்சிகள் தசைகள் வலுப்பெறவும், எலும்பு உறுதி தன்மை பெறவும் செய்யப்படுவதால் பெண்களும் செய்தால் உடல் நலத்துக்கு நன்மையே கிடைக்கும்.
# பெண்கள் ட்ரெட்மில்லில் ஓடினால் மார்பகம் தொய்வடையும் - தவறான கருத்து.
பொதுவாக பயிற்சிகளின் போது ஸ்போர்ட்ஸ் பிரா எனப்படும் மார்பை அழுத்தமாக பிடிக்கும் உள்ளாடை அணிந்தபின் பயிற்சி செய்வது பெண்களின் உறுப்புகளுக்கு நல்லது.
இறுதியாக பயிற்சிகள் செய்யும் போது வியர்வையும் மூச்சு வாங்குவதிலும் சாதாரணம். எனினும் அதிகப்படியான வியர்தும்தும் மூச்சு வாங்குவதும் நீர் இழப்பு மற்றும் மயக்கத்தை ஏற்படுத்தும் என்பதால் அதிவேக பயிற்சியின் போதும் கவனம் தேவை.
எவரோ சொல்கிறார்கள் என்று நினைத்ததை எல்லாம் கடைபிடிக்காமல் தகுந்த நிபுணர்கள் உதவியுடன் அவரவருக்கு ஏற்ற உடற்பயிற்சிகளை மிதமாக செய்வதுடன் உணவுக்கட்டுப்பாடு மற்றும் வாழ்க்கை முறை மாற்றம் மூலம் எடை மற்றும் ஆரோக்கியம் காப்பதே சிறந்தது.