நாம் எதுபோன்ற உணவுகளை எந்த அளவுக்கு சாப்பிடுகிறோம் என்பது நம் உடல் ஆரோக்கியத்தையும், மனநிலையையும் நேரடியாக பாதிக்கும். ஒரு சமநிலையான உணவு என்பது நம் உடலுக்குத் தேவையான அனைத்து ஊட்டச்சத்துக்களையும் சரியான அளவில் பெறுவதாகும். இந்த சமநிலையை எளிதில் புரிந்து கொள்ள உதவும் ஒரு கருவிதான் உணவு பிரமிட்.
உணவு பிரமிட் என்றால் என்ன?
உணவு பிரமிட் என்பது ஒருவகையான வரைபடமாகும். இது நாம் தினமும் உண்ணும் உணவுகளை அவற்றின் வகைகள் மற்றும் அளவுகளின் அடிப்படையில் பல்வேறு அடுக்குகளாக பிரித்துக் காட்டுகிறது. பிரமிடின் அடிப்பகுதியில் அதிக அளவில் உண்ண வேண்டிய உணவுகளும், மேல்பகுதியில் குறைவாக உண்ண வேண்டிய உணவுகளும் இடம் பெற்றிருக்கும். உணவு பிரமிடு நம்மை சரியான உணவு பழக்கங்களை கடைபிடிக்க உதவுகிறது.
உணவு பிரமிடின் அடுக்குகள்:
அடிப்படை அடுக்கு: பழுப்பு அரிசி, கோதுமை, ஓட்ஸ் போன்ற தானியங்கள் அடிப்படை அடுக்கில் இருக்கின்றன. இவை நமக்குத் தேவையான ஆற்றலை வழங்குவதில் மிகவும் முக்கியமானவை. நார்ச்சத்து, வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்த உணவுகள் இந்த அடுக்கில் வரும்.
இரண்டாவது அடுக்கு: பழங்கள் காய்கறிகள் போன்ற அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் நிறைந்த இயற்கையான உணவுகள் இந்த அடுக்கில் வரும். இது நம் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது.
மூன்றாவது அடுக்கு: கால்சியம், மற்றும் புரதம் நிறைந்த பால் பொருட்கள் இந்த அடுக்கில் வரும். இவை எலும்புகள் மற்றும் பற்களின் ஆரோக்கியத்திற்கு மிகவும் அவசியம். இத்துடன் புரதம், இரும்பு மற்றும் துத்தநாகம் நிறைந்திருக்கும் பருப்பு வகைகள், நட்ஸ், இறைச்சி மற்றும் விதைகள் போன்றவையும் இந்த அடுக்கை சேர்ந்தவை.
மேல் அடுக்கு: சர்க்கரை, கொழுப்பு மற்றும் உப்பு போன்ற குறைந்த அளவில் உண்ண வேண்டிய உணவுகள் இந்த அடுக்கில் இருக்கும். இவற்றை அதிகமாக உண்ணும்போது, உடல் பருமன், இதய நோய் மற்றும் நீரிழிவு நோய் போன்ற ஆரோக்கியப் பிரச்சினைகளை ஏற்படுத்தும்.
உணவு பிரமிட் நாம் தினமும் உண்ணும் உணவுகளின் வகைகள் மற்றும் அளவுகளை சமநிலைப்படுத்த உதவுகிறது. இவ்வாறு உண்ணும்போது நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து, பல நோய்கள் வரும் அபாயம் குறைகிறது. உணவு பிரமிடை பின்பற்றுவதன் மூலம் உடல் எடையைக் கட்டுப்படுத்தி, உடற்பருமனைத் தடுக்கலாம். சரியான உணவு நம்மை சுறுசுறுப்பாக வைத்து, தினசரி தேவையான ஆற்றலை வழங்க உதவுகிறது.
உணவு பிரமிடை பயன்படுத்தி உணவுகளை உட்கொள்ளும்போது நாம் நம் ஆரோக்கியத்தை மேம்படுத்திக் கொள்ளலாம். இருப்பினும் இந்த உணவு பிரமிட் ஒரு பொதுவான வழிகாட்டி மட்டுமே. ஒவ்வொரு நபரின் உடல் தேவைகள் மாறுபடும் என்பதால், அவரவர் வயது, பாலினம், உடல் செயல்பாடு போன்றவற்றை கருத்தில் கொண்டு உணவுத் திட்டத்தை தயாரிப்பது நல்லது.